அறிவியல் முத்துக்கள் (9)

உலோக அரிமானம்

உலோகங்களில் அரிமானம் உண்டாவதற்குக் காரணம் வேதியியல் எதிர்வினையாகும். நீர், உப்புகள், அமிலங்கள் மற்றும் வாயுக்கள் – ஆகிய அனைத்தும் உலோகங்களுடன் வினை புரிந்து அவற்றை அரித்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, காற்றின் ஈரப்பதத்தில் எளிதில் கிடைக்கும் ஆக்சிஜனுடன் இரும்பு வினைபுரிந்து சிவப்பு நிற இரும்பு ஆக்சைடாக மாறுகிறது; இதுவே இரும்பு துருப்பிடித்தல் ஆகும். செம்பும் பித்தளையும் காற்றிலுள்ள அமிலங்கள் அல்லது சல்ஃபர் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து பச்சை நிற செம்பு உப்புகளாக மாறுகின்றன; இவையே களிம்பு (patina) எனப்படுகிறது. எஃகு மற்றும் செம்பு போன்ற இருவேறுபட்ட உலோகங்கள் மின்வேதி முறையில் வினைபுரிந்து, இணைக்கப்பட்டு, நீருடன் தொடர்பு கொள்ளும்போதும் அரிமானம் உண்டாகும். இதில் ஒரு உலோகத்திலிருந்து மின்னணுக்கள் வெளியேறி அரிமானம் ஏற்படும்.

துப்பறியும் நாய்கள்

மோப்ப உணர்வும், செவி உணர்வும் எல்லா நாய்களுக்கும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. நாய்கள், தம் நண்பர் மற்றும் பகைவர்களை மோப்ப உணர்வின் வாயிலாகவே அடையாளம் கண்டுகொள்கின்றன. மேலும் அவை தாம் ஓடியாடும் இடங்களைத் தம் சிறுநீர் மூலமும் அறிந்து கொள்ளக்கூடியவை. ஒவ்வொரு நாயும் தன்னுடைய மற்றும் பிற நாய்களின் சிறுநீரை இனம் கண்டுகொள்ளக் கூடியனவாகும். ஒவ்வொரு மனிதரின் சிறுநீரும் கூட வேறு வேறான துர்நாற்றம் கொண்டவையே; ஆனால் அதனை மனிதரால் அடையாளம் காண முடிவதில்லை. ஒவ்வொரு மனிதரின் உடலும் கூட, அவரவர் உண்ணும் உணவு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் நுண்ணிய வேறுபாடுகள் காரணமாக, தனிப்பட்டதோர் மணம் கொண்டதாகும். நாய்கள் தனிப்பட்ட மனிதரின் உடல் மணத்தை அறிந்துகொள்ளக் கூடியனவாகவும், வெவேறு மனிதர்களின் மணத்தின் வேறுபாடுகளை இனம் கண்டுகொள்ளக் கூடியனாவாகவும் விளங்குகின்றன. இதனால் குற்றமிழைத்தவரது உடல் மணத்தின் அடிப்படையில் வெகு தூரம் வரை சென்றும் கூட துப்பு துலக்கும் தன்மை கொண்டனவாக நாய்கள் விளங்குகின்றன. பிளட் கூண்ட், ஜெர்மன் ஷெப்பர்ட், பீகிள் போன்றவை மிகச் சிறந்த துப்பறியும் நாய் இனங்களாகும்.

About The Author