அல்வாக்கள் பலவிதம் (4)

7. அவல் அல்வா
 
தேவையான பொருட்கள்:

அவல் – 400 கிராம்
சர்க்கரை – 500 கிராம்
பால் – 200 மில்லி
நெய் – 300 கிராம்
ஏலக்காய் – 8
முந்திரி – 8
ஆப்பிள் கிரீன் பொடி – சிறிது
வெள்ளரி விதை – சிறிதளவு

செய்முறை:

முதலில் அவலைக் கழுவிப் பாலில் ஊற வைத்து, ஒரு மணி நேரம் கழித்து மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். பால், சர்க்கரை, நீர் சேர்ந்து, கலவை 4 கப் அளவில் இருக்குமாறு, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின், அடி கனமான ஓர் உருளியில் நெய்யை விட்டு, காய்ந்ததும் அவல் விழுதைச் சேர்த்து, ஆப்பிள் கிரீன் கலர்ப் பொடியையும் சேர்த்துக் கிளறுங்கள். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா சுருள வரும்பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, சீவிய முந்திரி, ஏலக்காய், வெள்ளரி விதை ஆகியவற்றால் அலங்கரியுங்கள்!

வித்தியாசமான அவல் அல்வா தயார்!

8. சேமியா அல்வா
 
தேவையான பொருட்கள்:

சேமியா – 200 கிராம்
சீனி – 500 கிராம்
பால் – 200 மில்லி
நெய் – 300 கிராம்
ஏலக்காய் – 8
முந்திரி – 8
ரோஸ் பொடி – சிறிது
நெய் – 200 கிராம்

செய்முறை:

முதலில், சேமியாவைப் பாலில் ஊற வைத்து மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் மூன்று கப் நீர் விட்டுக் கரைத்து, ரோஸ் பொடியையும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின், அடி கனமான உருளியில் சர்க்கரையைக் கொட்டி, சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் சிறிது பால் சேர்த்து அழுக்கை நீக்கி விட்டு, பாகு எடுத்துக் கொள்ளுங்கள். பாகு கம்பிப் பதம் வரும்பொழுது, சேமியா விழுதை அதில் சேர்த்துக் கிளறுங்கள். தேவையானால் ஒரு கப் கொதி நீரைச் சேர்க்கலாம். பின், ஏலப்பொடியைப் போட்டு, நெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிளற வேண்டும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டித் துருவிய முந்திரியால் அலங்கரித்துத் துண்டுகள் போடலாம்.

சுடச்சுட சேமியா அல்வா தயார்!

9. கலவை அல்வா
 
தேவையான பொருட்கள்:

சேமியா – 100 கிராம்
அவல் – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
மைதா – 100 கிராம்
கோதுமை மாவு – 100 கிராம்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 400 முதல் 500 கிராம்
ஏலக்காய் – 12
முந்திரி – 12
வெள்ளரி விதை – 3 தேக்கரண்டி
ஆப்பிள் கிரீன் கலர்ப் பொடி – சிறிதளவு

செய்முறை:

சேமியா, அவல், ஜவ்வரிசி மூன்றையும் பாலில் ஊற வைத்து மசிய அரைத்துக் கொண்டு கோதுமை மாவு, மைதா மாவுடன் சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள். அடி கனமான ஒரு பெரிய பாத்திரத்தில், சர்க்கரையைச் சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் சிறிது பால் சேர்த்து அழுக்கை நீக்கி விட்டு, கம்பிப் பாகு எடுத்துக் கொள்ளுங்கள். கரைத்த மாவில் ஆப்பிள் கிரீன் நிறத்தைச் சேர்த்துக் கலந்து விட்டு, பாகில் கொட்டிக் கிளறிக் கொண்டிருங்கள். சிறிது நேரம் கழித்து இறுகி வரும் பொழுது, இரண்டு கிளாஸ் நீரைக் கொட்டி மேலும் கிளறுங்கள். மீண்டும் இறுகினால், மேலும் ஒரு கப் நீரைச் சேர்த்து, நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறுங்கள். கூடவே ஏலப்பொடியையும் சேர்த்துக் கிளற வேண்டும். நெய் வெளி வரும்பொழுது, நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி, சீவிய முந்திரி, வெள்ளரி விதை கொண்டு அலங்கரித்துத் துண்டுகள் போடுங்கள்.

இந்த அல்வா, கெட்டியாக, ஹோட்டல் அல்வா போலவே மிக அருமையாக வரும்.

About The Author