அவை என்ன ஆயின? புத்தர் கேட்ட கேள்விகள்

தாராளமயமாக்கல் வந்ததிலிருந்து நுகர்ச்சியிலும் நம்மிடம் தாராளம் அதிகரித்துவிட்டது! தேவையில்லாமல் பொருட்களை வாங்கி அவற்றில் சிறிதளவையே பயன்படுத்தி மீதியை எறிந்துவிடுகிறோம்.

இதனால் பூமியில் அதிகமாகக் குப்பைகளைச் சேர்க்கிறோம். குப்பை குவிக்கும் இடங்களில் மட்டுமல்ல, தோட்டங்கள், நடைபாதைகள் என எல்லா இடங்களிலும் குப்பை!

ஆனால் சிந்தித்துப் பார்க்கையில், நாம் எப்போதும் இப்படி இருந்தோமா? இல்லை; வரலாறு, நாம் எப்போதும் சிக்கனமாகவே இருந்து வந்திருக்கிறோமென்று கூறுகிறது. பொருட்களின் மதிப்பு தெரிந்தவர்கள் இந்தியர்கள். ஒரே பொருளுக்கான பல்வகைப் பயன்பாடுகளை அறிந்திருந்தவர்கள் நாம். பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் முறைகளையும் நாம் தெரிந்தே வைத்திருந்தோம். இது நம் பண்பாட்டிலேயே ஊறியிருந்தது.

இதற்குச் சான்றாக, 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சி பொருட்களின் மீது நாம் வைத்திருந்த மதிப்பையும் அக்கறையையும் உணர்த்தும். தற்காலச் சூழலியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு பாடமாகக் கூட இருக்கும்.

ஒருமுறை, புத்தர் தன் ஆசிரமத்தைச் சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் தனக்கு ஒரு புதுச் சால்வை வேண்டுமென்று அவரைக் கேட்டார்.

"பழைய சால்வை என்ன ஆயிற்று?" என்று புத்தர் வினவினார்.

சீடர் சொன்னார், "அது மிகவும் பழையதாகி விட்டதால் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்" என்று.

"அப்படியானால், பழைய படுக்கை விரிப்பு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் புத்தர்.

"அது பல இடங்களில் கிழிந்து விட்டதால், பிரித்துத் தைத்துத் தலையணை உறைகளாகப் பயன்படுத்துகிறேன்" என்றார் சீடர்.

"அது சரி, முன்பாகவே தலையணை உறைகள் இருந்திருக்குமே, அவை எல்லாம் என்ன ஆயின?"

"அவை மிகவும் தேய்ந்து விட்டன. ஆகவே இப்போது அவற்றை மிதியடியாகப் பயன்படுத்துகிறேன்."

"ஏற்கெனவே இருந்த மிதியடி என்னவாயிற்று?" என்றார் புத்தர் விடாமல்.

"அது மிகவும் தேய்ந்து, அதிலுள்ள நூல்கள் சிறு சிறு இழைகளாகவே வந்து விட்டன. அவற்றை விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன் குருதேவா!" என்றார் சீடர் சலிப்படையாமல்.

புத்தர் புன்னகை புரிந்தார். இதற்குப் பின்பே சீடருக்குப் புதிய சால்வை கிடைத்தது!

(திரு.அரவிந்த் குப்தா அரவிந்த ஆசிரமத்தின் ‘Next Future’ மாத இதழில் எழுதிய கட்டுரையின் தழுவல்).

நன்றி: ‘குடிமக்கள் முரசு’ மாத இதழ்.

About The Author