ஆட்டுக்கால் குழம்பு

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் – 4
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 6
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
புளிக் கரைசல் – சிறிதளவு
பட்டை – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில், ஆட்டுக்கால்களை நான்கு துண்டுகளாக வெட்டி, நன்கு சுரண்டிக் கழுவிக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

மிளகாய்த் தூள், மல்லித்தூள், சோம்பு இவற்றைக் கெட்டியாகவும், மையாகவும் (finely) அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டையைத் தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். அத்துடன் இஞ்சி – பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள். ஆட்டுக்கால், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறுங்கள். பின்னர், நான்கு தம்ளர் தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி, 10 விசில் வந்த பின் இறக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்துக் குக்கரைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காய், புளிக் கரைசல் இரண்டையும் ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் குழம்பு தயார்! இது ஆப்பத்திற்குத் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author