ஆதித்ய ஹ்ருதயமும், ராம ஹ்ருதயமும்!

ராமரின் திகைப்பு

பாவமே மொத்தமாக ஓருருவம் எடுத்து வந்தவன் போல விளங்கிய ராவணனை ராமர் அழிக்க நினைத்த போது அவனை சுலபத்தில் வெல்ல முடியவில்லை. அஸ்திரங்களுக்கு எதிர் அஸ்திரங்கள், பலத்திற்கு பலம், தவ சக்திக்கு எதிர் தவ சக்தி, முக்கோடி வாழ் நாள், சங்கரன் கொடுத்த சந்திரஹாஸம் என்ற வாள் என்று இவை எல்லாமாகச் சேர, வெல்ல முடியாத எதிரியாக அவன் விளங்கினான். ராமர் கலங்கினார். களைத்தார்.

அன்னையின் நினைவு அருளும் உயிர்ச்சக்தி

என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றினார். தித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். தித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி. இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர்கொண்டார்.

ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாகப் பார்த்தார். விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.

ராமரை நோக்கி விபீஷணன், "ஐயனே! அன்னையை அனவரதமும் (காம வசத்தால்) நினைத்துக் கொண்டே இருக்கிறான் ராவணன். உலகத்திற்கே அருள் பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து நினைப்பதால் (அடி மனத்து ஆசை என்று பேச்சு வழக்கில் சொல்லும்போது அடி மனதில் எழும் ஆசையின் சக்தியே குறிப்பிடப்படுகிறது!) இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது. ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான்" என்று ராவணனின் உயிர் ரகசியத்தைக் கூறினார்.

உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார். அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது. அடுத்து பத்து பாணங்களால் பத்துத் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துத் தள்ளினார் ராமர். ஆக முப்பத்தியொரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளஸிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானஸத்தில் கூறுகிறார்!

ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்

இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க வழி வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம். எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டுபிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். இருளாகிய ராவண பாவத்தை ஒளியாகிய ராம அறம் அழித்ததை (கம்பன் கூறிய படி அறம் வெல்லும்; பாவம் தோற்கும்!) ஆதித்ய ஹ்ருதயம் செய்ததில் ஆச்சரியம் இல்லை; அதன் பணியே அது தான்!

ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

ததோ யுத்த பரிஸ்ராந்தம் என்று தொடங்கி ஸரகண மத்யகதோ வசஸ்த்வரேதி என்று முடிவு வரையில் 31 சுலோகங்களைக் கொண்ட இது எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை அதிலேயே காணலாம்.

1) ஆதித்ய ஹ்ருதயம்: புண்ய மயமான ஆதித்ய ஹ்ருதயம்

2) ஸர்வ சத்ரு விநாசனம் (அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)

3) ஜயாவஹம் (வெற்றி தருவது)

4) அக்ஷய்யம் பரமம் சிவம் (அழிவற்ற உயர் மங்களத்தைத் தருவது)

5) ஸர்வ மங்கள மாங்கல்யம் (எல்லா நலன்களையும் தருவது)

6) ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)

7) சிந்தா சோக ப்ரஸமனம் (துயர், துயருறு சிந்தனைகளைப் போக்கவல்லது)

8) ஆயுர்வர்த்தனம் உத்தமம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)

ஆக, இவை அனைத்தையும் அளிக்கும் ஆதித்ய ஹ்ருதயத்தில் ஆறு முதல் 14 சுலோகம் முடிய ரகசிய மந்திரங்கள் உள்ளன. பிறகு சூரிய துதி இடம் பெறுகிறது.

ஆக, இந்த அரிய (சில நிமிடங்களில் சொல்லி முடிக்கக்கூடிய, சிறிய) ஆதித்ய ஹ்ருதயத்தை அனைவரும் சொல்லி அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நலங்களையும் பெறலாம் என்பது உறுதி.

(ராம ஹ்ருதயம் அடுத்த வாரம்)

About The Author

4 Comments

 1. N.Balasubramanian

  அந்த மந்திர ரகசியங்களை விளக்கும் அதிகாரமுடைய குருமாரை எங்ஙனம் அடைவது?

 2. swetha

  ஆதித்ய கிருதயம் பெண்கள் படிக்களாம?நன்றி

 3. R Venkateswaran

  ஆடித்ய Hரிதயம் ஸ்லொகம் கடந்த பல வருடங்கலாக பாராயனம் செஇது வருகின்ட்ரனெ. ஆகையால் இதை பாராயனம் சைபவர்கல் உருதியாக பலன் அடைவார்கல்.

 4. subramanian

  ஆதித்ய ஹிருதய சுலோகம் பற்றி விளக்கமாகவும்,அதனை எப்பொழுது சொல்ல வேண்டும் என்பதையும் தெளிவுபட கூறுங்கள் ஐய்

Comments are closed.