ஆளில்லா கிராமம்

நடுத்தெரு கல்வீடு
கல்லொண்ணும்
ஒரு ஆள் கனம்
கோயிலொண்ணு
கட்டிடலாம்.

கிழக்குத்தெரு காரவீடு
சுண்ணாம்பக் குடிச்சு
நிக்கும் – அடிமட்டத்துக்கு
இடிச்சுப் போட்டா
அடுத்தாய்ச்சுக்கும்
வந்து தங்கலாம்.

மேலத்தெரு இலாடவீடு
பர்மா கட்டையில
நிமிந்து நிக்கும்
கால் கோடி கொடுத்தாலும்
கட்டை இன்னைக்குக்
கிடைக்காது.

ஊர் நடுவுல மெச்சுவீடு
தரை பூரா சிப்ஸ்கல்லு
தூண் ஒண்ணும்
சந்தன மரம் – அண்ணாந்து
பார்த்தா தலை சுத்தும்.

மழையும் பொத்துக்கிட்டு
ஒழுகும் தகரவீடு
மரக்கிளைய முழுசா
போர்த்தி மிச்ச மானம்
காக்கும் குடிசை வீடு.

தொலைச்ச விலாசத்தத்
தேடிவரும் பேரப்
பயலுக்குச் சேதி
சொல்ல காத்துக்கிடக்குதுக
இருக்கும் அரை உசிரக்
கையில பிடிச்சபடி.

About The Author