ஆவணியாபுரம் நரசிம்மி தேவி

வந்தவாசியிலிருந்து ஆரணி போகும் வழியில் சுமார் இருபது கி.மீ தூரம் போனால் ஆவணியாபுரம் என்ற ஊர் வரும். இந்த ஊரில் பழமை வாய்ந்த கோயில் ஒன்று அருமையாக அமைந்துள்ளது. ஐந்து நரசிம்ம மூர்த்திகள் ஒன்றாக அருள் புரிவதைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் விசேடமான ஒன்றாகும். திருவோணம் நட்சத்திரம் வந்தாலோ அல்லது சனிப்பிரதோஷம் வந்தாலோ வழிபட கூட்டம் அதிகமாகிறது. பஞ்ச நரசிம்ம மூர்த்திகளை வணங்கி நம்பிக்கையுடன் இந்த நாட்களில் தங்களது வேண்டுதலை வைக்க அவை நிறைவேறும்.

இந்த ஆவணியாபுரத்தில் அருள் புரியும் மகாலட்சுமி தேவி இங்கிருக்கும் நரசிம்மர் போலவே சிங்கமுகத்துடன் காட்சியளித்து நரசிம்மி என்ற பெயருடன் விளங்குகிறாள். இந்த இடத்தில் இருக்கும் குன்றையும் பார்ப்பதற்கு நரசிம்மத் தோற்றம் போலவே நமக்குத் தெரிகிறது. தவிர, இந்தக் கோயிலில் இருக்கும் கருடாழ்வாரைப் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. அவரது முகம் சிம்ம முகத்துடன் இருப்பது வியப்பூட்டுகிறது.

இங்கிருக்கும் நரசிம்மி தேவியை முதன் முதலில் நரசிம்மர் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். அவரும் ஏதாவது வரம் கேட்கும்படி சொல்ல தேவி நரசிம்மி அவரிடம் அவரது விசுவரூப தரிசனம் பார்க்க ஆசையாக இருப்பதாக தெரிவித்தாராம். அதன்படி நடக்க தேவி மிகவும் மகிழ்ந்து போனாளாம். அதனால் இந்த இடத்தில் இருக்கும் மக்கள் எந்தப் புது வேலையானாலும் இந்த தேவியிடம் வந்து சொல்லி ஆசிகள் பெற்று செல்லுகின்றனர். புது வண்டி. புது வீடு, நிலம், சொத்து என்று எதுவாக இருந்தாலும் நரசிம்மியிடம் வந்து சொல்லி ஆசிகள் பெறுகின்றனர். குழந்தை
பிறந்ததும் அன்னையின் மடியில் வைத்து ஆசி பெறுகின்றனர்.

இந்த ஸ்தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரும் அருள்புரிகின்றனர். திருவணாமலை போல் இங்கும் பல சித்தர்கள் வந்து இவர்களிடம் அருளைப் பெறுகின்றனராம். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீஅகத்திய முனிவரும் சூட்சும வடிவில் இங்கு வந்து கிரிவலம் செய்கின்றார் என்றும் மக்கள் சொல்கின்றனர். குபேரனும் தான் முன்பு இழந்த பதினாறு வகை நிதிகளை இங்கே வந்து கிரிவலம் சென்று மீண்டும் திரும்பப் பெற்றதாகக் கூறுகிறார்கள். அதனால் இங்கு கிரிவலம் செய்ய அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவோணம், சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் வருகின்றனர். நரசிம்மி தேவியின் அருளைப் பெறுகின்றனர். இந்தகோயிலின் கருட தரிசனமும் பல இன்னல்களைக் களைகிறது. நிலையான செல்வம் தருகிறது.

‘ஓம் நமோ நாராயணாய’ என்ற ஒலி தென்றலில் வந்து மோதுகிறது. கிரிவலத்தின்போது பலர் ‘ஓம் நமோ நரசிம்மாய’ என்று சொல்லியபடி கிரிவலம் செய்கின்றனர்.

"ஓம் நமோ நரசிம்மி சமேத ஸ்ரீநரசிம்மாய" என்று நாமும் சொல்லியபடி மானசீகமாக கிரிவலம் செய்வோம்.

About The Author