இசைக்கு ஒரு சைந்தவி!

திரை இசையாலும் கர்நாடக இசை மூலமும் பல ரசிக உள்ளங்களைக் கவர்ந்தவர் சைந்தவி! ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். குரல் இசைச் செல்வி, இசைச் சுடர், யுவகலாபாரதி, இளம் சாதனையாளர், சிறந்த வளரும் திரையிசைப் பாடகி என்று 2007ஆம் ஆண்டில் விருது – இப்படிப் பல பட்டங்கள் பெற்றுள்ள இவர் நடுவண் அரசின் இசைக் கலைக்கான உதவித்தொகையும் பெற்றிருக்கிறார். நேர்முகம் காணச் சென்ற நம்மை இன்முகத்தோடு வரவேற்றார் சைந்தவி அவர்கள். இனி அவருடன் சில நிமிஷங்கள்…

சைந்தவி என்கிற பெயரே மிகவும் அரிதானதாக இருக்கிறதே என்றபோது, சைந்தவியின் அம்மா திருமதி ஆனந்தி, "சைந்தவி எனக்குத் திருமணமாகிப் பத்து வருஷங்களுக்குப் பிறகு பிறந்தவள். புதுமையான பெயராக இருக்க வேண்டும் என்று இதைத் தேர்ந்தெடுத்தோம். இது கரகரப்பிரியாவை மூலமாகக் கொண்ட ராகத்தின் பெயர். பெயர் வைத்தபோது இசையில் இவர் சாதனைகள் செய்யப்போகிறார் என்று தெரியாது" என்றார்.

இசை ஞானம் பரம்பரையாக வந்ததா என்று கேள்வி எழுப்பியபோது,
"இல்லை. எங்கள் பரம்பரையில் யாரும் பெரிய பாடகர்கள் இல்லை. அப்பாவும் அம்மாவும் இசையை ரசிப்பவர்கள்தான்" எனக் கூறுகிறார்.

ஐந்து வயதாக இருக்கும்போதே இவரது இசை அறிவு வெளிப்பட்டிருக்கிறது. கோவில்களில், சத்சங்கங்களில் நடக்கும் பஜனைப் பாடல்களைக் கேட்டு இவரும் பாடியிருக்கிறார். இவருக்கு இருக்கும் இசைத்திறனைப் பார்த்து, பத்தாவது வயதில் பக்கத்துத் தெருவில் இருக்கும் திருமதி ருக்மணியிடம் பாட்டு கற்றுக் கொள்ள அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் இசையை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு வந்துவிடுவாராம் சைந்தவி. இதைத் தெரிந்து கொண்ட இவர் அம்மா, பிறகு ரூபா அவர்களிடமும் சுவாமிமலை ஜானகிராமனிடமும் இசை பயிலச் செய்தாராம். இப்போது பத்மா சாண்டில்யன், கே.என்.சசிகிரண், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ரவி ஆகியோரிடம் பயிற்சி பெறுகிறார். திருமதி டி.கே.பட்டம்மாளிடமும் சில பாடல்கள் கற்றுக் கொண்டிருக்கிறார். ‘தூரத்துச் சொந்தமான அந்த இசை மேதையிடம் ஆசி பெறவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் அவரிடம் சென்று பயிற்சி பெற்றேன்’ என்று சொல்கிறார் சைந்தவி.

முதல் இசைக் கச்சேரி சைதாப்பேட்டையிலுள்ள ஒரு விநாயகர் கோவிலில்தான் அரங்கேற்றம். அப்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது என்று சொல்லும் இவர், ஆனால் அதற்கு முன்னாலேயே தான் படித்த செட்டிநாடு வித்யாசிரமத்தில் கலைநிகழ்ச்சிகளில் ஒரு குழுவாகவும் தனித்தும் பாடிப் பல பரிசுகளை வென்றிருக்கிறார். குழுவிற்காகக் கிடைத்த பரிசுகள் தவிர, பள்ளிகள், கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டிகளில் இவரது இனிய குரலுக்காகப் பல பரிசுகளையும் சங்கீத மேதைகளின் ஆசியையும் பெற்றிருக்கிறார். இவரது இசைத் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது இவர் படித்த செட்டிநாடு பள்ளி. போட்டிகளில் பாடக் கடினமானவையாகக் கருதப்படும் வசீகரா, வீரபாண்டிக் கோட்டையிலே, கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற சவாலான பாடல்களைப் பாடி நடுவர்களை அசத்தியிருக்கிறார்.

சைந்தவி பின்னணிப் பாடகியாக வருவதற்கு அவர் பங்குபெற்ற ‘சப்தஸ்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் உதவியாக இருந்தனவா என்று வினவியபோது,
"நான் சன் டி.வி-யின் சப்தஸ்வரங்கள், ஜெயா டி.வி-யின் ராகமாலிகா, ராஜகீதம், விஜய் டி.வி-யின் ஆர் யு ரெடி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம், இப்போது டி.வி-க்களில் வரும் போட்டிகள்போல இவ்வளவு ஆடம்பரமாக பலத்த விளம்பரங்களுடன் நடக்காது. இரண்டு நாட்கள் நடக்கும். அதுவும் சப்தஸ்வரத்தில் சின்னப் பெண்களாகப் பலர் பங்கேற்கும்போது எல்லாருக்கும் பரிசு என்று கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் என் இசைப் பயணத்தில் மேலும் பயிற்சி பெறுவதற்கு உதவியாக இருந்தன என்று சொல்லலாம்" என்கிறார்.

தான் முதலில் பாடிய பாட்டு தேவாவின் இசையில் ‘உயிரெழுத்து’ என்ற படத்திற்காகப் பாடிய ‘கார்மேகக் கண்ணா’ என்ற பாடல்தான் என்றாலும் அந்தப் படம் வெளிவரவே இல்லை என்பவர், முதன்முதலில் தன்னை அறிமுகப்படுத்திப் புகழ் வாங்கித் தந்தது ‘ரண்டக்க ரண்டக்க’ பாடல்தான் என்கிறார். இதன் பாடல் பதிவுக்காக இரவு எட்டரை மணிக்கே போக, அப்புறம் ஒன்றரை மணிக்குத்தான் பாடல் எடுத்தார்களாம். அப்போது தூக்கக் கலக்கம். ஆனால், "படம் வெளிவந்து முதலில் குறுந்தகட்டில் என் பெயரைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது" எனச் சொல்லும்போதே முகத்தில் மலர்ச்சி தெரிகிறது. தனக்கு இசையில் உந்துதலாக இருந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று சொல்லும் இவர், பிடித்த திரையிசைப் பாடகர்கள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சித்ரா, ஷ்ரேயா கோஷல்… என்று அடுக்குகிறார்.

தனது இசையைத் தன் அம்மா அப்பாதான் விமரிசனம் செய்வார்கள் என்று சொல்லும் சைந்தவி, தான் சரியாகப் பாடவில்லையென்று தோன்றினால் அம்மா பளிச்சென சொல்லிவிடுவார் என்கிறார். இளையதலைமுறையைச் சேர்ந்த இவர் தன் வாழ்க்கையில் பெற்ற பாக்கியமாகக் கருதுவது எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆல்பத்தில் பாடக் கிடைத்த வாய்ப்பையும், இளையராஜா இசையில் பாடக் கிடைத்த சந்தர்ப்பத்தையும்தான். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், மணி சர்மா (தமிழ், தெலுங்கு), கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தினா, ரமேஷ் விநாயகம் என்று அநேகமாகப் பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாரிடமும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மயக்கம் என்ன?’ படத்தில் பாடிய ‘பிறைதேடும் இரவிலே’ பாடல் தனக்கு ஒரு சவாலாக இருந்தது எனும் இவர், அப்போது ஜி.வி-யும் அதில் பாடுகிறார் என்பது தெரியாது என்கிறார்.

மெலடி, குத்துப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல் எனப் பலவகைப் பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். இதில் எந்த வகைப் பாடல் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டபோது அவர் சொன்னது: "இந்தக் கேள்விக்கு யாரைக் கேட்டாலும் மெலடிதான் பிடிக்கும் என்று சொல்வார்கள். எனக்கும் அப்படித்தான்."

கர்நாடக இசையைப் பின்னணியாகக் கொண்ட நீங்கள் குத்துப் பாடல்கள் பாடுவதைக் கர்நாடக இசை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டபோது, "நான் முதலில் பிரபலமானதே ‘ரண்டக்க ரண்டக்க’ பாடலின் மூலம்தான். எம்.எஸ்.சுப்புலட்சுமியிலிருந்து பலர் திரையிசையும் பாடியிருக்கிறார்கள். எம்.எல்.வசந்தகுமாரி ‘ஐயா சாமி! ஆவோஜி சாமி’ பாடியபோது ஏற்றுக்கொள்ளவில்லையா? பி.சுசீலா, ஜானகி அம்மா, சித்ரா மேடம் எல்லாருமே இரண்டுவிதமான இசையிலும் பாடியிருக்கிறார்கள். என்ன பாடுகிறார்கள் என்பதைவிட எப்படிப் பாடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்" என்றார்.

அண்மையில் தாண்டவம், சுந்தரபாண்டியன், தெய்வத் திருமகள் போன்ற படங்களில் பாடியிருக்கிறார் சைந்தவி. கையில் இன்னும் ஆறு ஏழு படங்கள் வைத்திருக்கிறார்.

நீங்கள் பாடியதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு எது? எதில் நீங்கள் திருப்தி அடைந்தீர்கள் என்று கேட்டதற்கு,
"நான் எப்போதுமே திருப்தியடைய மாட்டேன். இன்னும் இன்னும் நன்றாகப் பாடவேண்டும் என்று முயற்சி செய்வேனே தவிர, முழுத் திருப்தி அடையமாட்டேன்" என்றார். தான் பாடிய ‘ஆருயிரே’, ‘விழிகளில் ஒரு வானவில்’ ஆகிய பாடல்களைக் கேட்டு நண்பர்கள், முகம் தெரியாதவர்கள் என்று எல்லாரும் பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று சொல்கிறார்.

இப்போது எல்லாச் சானல்களிலும் சின்னக் குழந்தைகளுக்காகப் போட்டி நடத்தி வருகிறார்களே? அதனால் அவர்கள் படிப்பில் கவனம் குறைந்து மன அழுத்தம் ஏற்படாதா? அதுவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற ஒரு வெறியோடு செயல்படுகிறார்களே என்றதற்கு,
"இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகள் தங்கள் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள அமைந்த சிறந்த மேடை! அதனால் அவர்களுக்கு எல்லாவிதப் பாணிகளிலும் பாடும் பயிற்சி கிடைக்கிறது. அதோடு, சிறந்த பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஸ்ரீனிவாஸ் சார் போன்றவர்கள் முன் பாடும் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் பெரிய அதிர்ஷ்டம்! ஆனாலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு போட்டியாகக் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். என் அப்பா அம்மா அப்படிக் கிடையாது. வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதற்காக ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது சகஜம். இன்று உனக்குப் பாடல் சரியாக வரவில்லை, அவ்வளவுதான் என ஆறுதல்தான் சொல்வார்கள்" என்றார்.

"இப்போது திரையுலகில் பின்னணிப் பாடகர்களுக்குப் போட்டி அதிகம் இருக்கிறது. அதனால், எவ்வளவு காலம் நிலைத்துப் பாடுவோம் என்று சொல்ல முடியாது. கர்நாடக இசை என்பது ஒரு கடல். நாம் நினைக்கும் வரை பாடிக் கொண்டே போகலாம்" எனும் இவரிடம், உங்கள் எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டோம்.
"நிறையக் கர்நாடக இசை ஆல்பங்கள் செய்து வருகிறேன். ஒரு பொருள்சார்ந்த பாடல்களை எடுத்துப் பாடவேண்டும்! உதாரணமாக, கண்ணனைப் பற்றிக் ‘கண்ணன் என் காதலன்’ என்று ஒரு ஆல்பம் செய்திருக்கிறேன். இப்போது பாரதியார் பற்றி ஆல்பம் செய்கிறேன். பல கம்பெனிகள் என் ஆல்பங்களை வெளியிடுகின்றன. கர்நாடக இசையை, எல்லாவிதமான மக்களும் ரசிக்கும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்று சொல்கிறார்.

சைந்தவி அபிராமி அந்தாதியை 102 ராகங்களில் பாடி ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுவரை 200க்கும் மேல் இவரது ஆல்பங்கள் வெளியாகியிருக்கின்றன.

உங்கள் இசைப் பயணத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, ஒரு முறை இவர் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் பாடும்போது பக்கவாத்தியக்காரர்கள் கூடத் தங்கள் பக்கவாத்தியத்தை நிறுத்திக் கண்ணில் நீர் மல்க இருந்ததையும், மேடையிலிருந்து வந்தவுடன் 85 வயதான ஒரு முதியவர் உணர்ச்சிவசப்பட்டு, தன்னிடமிருந்த கிழிந்த நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார். இன்னொரு நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் பாடல்களைப் பாட, அதைக் கேட்ட ஒரு கிறித்துவப் பேராசிரியர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் படத்தைப் பென்சில் ஓவியமாக வரைந்து இவரிடம் கொடுத்த அந்த நிகழ்ச்சியும் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்கிறார்.

அமெரிக்கா, கனடா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன், ஸ்விஸ், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் தன் இசையைக் கொண்டு சேர்த்திருக்கும் இவரிடம், அங்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்று கேட்டோம். அங்கு தங்களுக்குக் கிடைத்த மரியாதையை மறக்க முடியாது என்றார். தங்கள் வீடுகளிலேயே தங்க வைத்து, இவர்களுக்காக அவர்களும் சைவச் சாப்பாட்டையே தயார் செய்து, எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டி அவர்கள் காட்டிய விருந்தோம்பல் நினைவில் நிலைத்து நிற்கிறது என்றார்.

உங்களுக்கும் பிரகாஷ் சாருக்கும் பழக்கம் எப்படி என்று கேட்டதற்கு,
"செட்டிநாடு வித்யாசிரமத்தில் படித்த நாட்களிலிருந்தே குழுவாக இணைந்து பாடிய பழக்கம்" என்று சொன்னார்.
நீங்களும் இசைத் துறையில் இருக்கிறீர்கள். அவரும் இசை அமைப்பாளர். அதனால், இருவரும் இணைந்து இசைக்காக ‘இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும்’ என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம், "அப்படி ஒன்றும் நாங்கள் இதுவரை நினைத்துப் பார்க்கவில்லை" என்றார்.

உங்கள் பாடல்கள் பற்றி அவர் விமரிசிப்பாரா என்றபோது,
அவருக்கு எனது எல்லாப் பாடல்களையும் கேட்க நேரமில்லை. ஆனால், கேட்ட பாடல்களை ‘இப்படிப் பாடலாம், அப்படிப் பாடலாம்’ எனக் கருத்து சொல்வார். அவர் இசை அமைக்கும் பாடல்களில் நான் அபிப்பிராயம் சொல்லும்போது இந்தப் பாடல் ஹிட் ஆகும் என்று நான் சொல்லும் பாடல்கள் உண்மையிலேயே ஹிட் ஆகியிருக்கின்றன.

நீங்களும் பிரகாஷ் சாரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்றபோது, "என்னிடம் எதுவும் கிடையாது. கல்யாணத்திற்கு முன்னால் நாங்கள் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வதை எங்கள் பெற்றோர்களும் நாங்களும் விரும்பவில்லை" என்றார்.

இசைக்கெனப் பிறந்த (இ)சைந்தவிக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.

About The Author