இது போலொரு அவதாரம் ஏதினிமேல் மேதினிமேல்!

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 84வது பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது.

கேரளாவில் பயபக்தி மிகுந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஃபிலிப் எம்.பிரசாத் கால வசத்தால் கம்யூனிஸக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீவிர கம்யூனிஸ்ட் ஆனார். 18ம் வயதில் அவருக்கு மாணவர் பிரிவின் தலைமை பதவி கிடைத்தது. கலாசார புரட்சி நடந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாத இயக்கம் தலை தூக்கிய போது சீனத் தலைவர் மாசேதுங்கின் கருத்துக்களால் கவரப்பட்டு நக்ஸலைட் இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாதியாகி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நக்ஸலைட் இயக்கம் தீவிரமானது.

ஒரு போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கிய வழக்கிலும், நிலப் பிரபுக்களைக் கொள்ளை அடித்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்பட்ட வழக்கிலும் ஃபிலிப் கைது செய்யப்பட்டு பத்து வருட காலம் சிறையில் இருக்க நேர்ந்தது.

சிறை வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவர் மாற ஆரம்பித்தார். இளமையில் தாய் சொல்லித் தந்த பிரார்த்தனை மூலம் கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தார். ஆன்மீக தாகம் எழுந்து ஒரு பெரும் தேடுதலை அவர் மனம் மேற்கொண்டது.

1984ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் வாழ்வில் பாபா புகுந்தார். அவர் பெட்டியில் திடீரென்று ஷீர்டி சாயியின் உருவம் பொதித்த மோதிரம் இருந்தது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் மாலை 6 மணிக்கு இதைப் பார்த்ததிலிருந்து இனம் தெரியாத ஆனந்தம் தோன்றி ஐந்து நாட்கள் நீடித்தது.

மூன்று நாட்கள் கழித்து அவர் பாபாவைச் சந்தித்தார். மூன்று வயது மகளுக்கு கல் பதிக்கப்பட்ட சிலுவை, மனைவிக்கு ஷீர்டி சாயி லாக்கட், ஐந்து வயது மகளுக்கு ஏசு பாபா படம் இருந்த லாக்கட் ஆகியவை அவர்கள் முன்னால் பாபாவால் சிருஷ்டிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவரது தங்க மோதிரக் கல்லைப் பார்த்து பாபா ஊதினார். அது பச்சையாக மாறியது. கை விரலில் மோதிரம் சற்று லூஸாக இருந்தது. மறுநாள் அதை பாபா வாங்கி ஊதித் தந்தார். இப்போது அது கன கச்சிதமாகப் பொருந்தியது!

தனது பெட்டியில் யாராவது மோதிரத்தைப் போட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் திருவனந்தபுரம் கடைத் தெருவில் அந்த மாதிரி டிசைன் உள்ள மோதிரம் கிடைக்கிறதா என்று ஃபிலிப் தேடிப் பார்த்தார். அப்படி ஒரு டிசைன் அங்கு கிடைக்கவில்லை! அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தது! அடுத்த தரிசனத்தில் பாபா அவரைக் குறும்பாகப் பார்த்தார். “என்ன, இந்த மாதிரி டிசைன் கடைகளில் கிடைக்கிறதா?” என்று கேட்டார். ஃபிலிப் பரவசமானார். பாபா பக்தரானார்.

பாபா ஆயிரக்கணக்கில் வெவ்வேறு பொருட்களைத் தம் பக்தர்களுக்கு ஆண்டாண்டு காலமாக அளித்து வருகிறார்! இப்படி ஏராளமான டிசைன்களை யார் எப்படி எவ்வளவு தூரம் பட்டறைகளில் உருவாக்க முடியும்? அவற்றை வைக்கும் இடம் எங்கே? பாக்கிங் எங்கே செய்வார்கள் என்றெல்லாம் அவருக்குள் கேள்விகள் எழுந்தன. இப்படி ஒரு அவதாரம் இனி தோன்ற முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்தார். பாபா பணியில் ஈடுபட்டு தான் திருந்திய சம்பவத்தை உலகினருக்கு உணர்த்தினார்.

கீதையில் ஒரு சின்ன திருத்தம் செய்வதாக பாபா ஒரு முறை கூறினார். பரித்ரானாயா சாதூனாம் – நல்லோர்களைக் காப்பதற்கும்; விநாசாய ச துஷ்கிருதாம் – தீயோரை அழிப்பதற்கும்; தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய – தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும்; ஸம்பவாமி யுகே யுகே – யுகம் தோறும் அவதரிக்கிறேன் – என்ற கண்ணனின் வாக்கில் இந்த புட்டபர்த்தி மணிவண்ணன் ஒரு சிறு திருத்தம் செய்தார் – கலியுகத்தைக் கருத்தில் கொண்டு! தீயோர்களை இந்த அவதாரம் அழிக்காது; ஆனால் திருத்தும் என்றார்.

ஃபிலிப் போன்ற ஆயிரக்கணக்கானோர் இதற்கு இன்று சான்று! அது மட்டுமல்ல இந்த அவதாரத்தின் மகிமை!

மக்களின் துயர் போக்குவதற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைத்து அங்கே கடினமான இதயமாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஏராளமான மருத்துவப் பணிகள் இலவசமாக இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

ஆந்திர அரசே செய்யத் தயங்கிய குடிநீர் நலத் திட்டத்தை மேற்கொண்டு பதினெட்டே மாதங்களில் 2000 கிலோமீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய்களைப் பதித்து 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள 18 நீர்த்தேக்கங்களையும் அமைக்கச் செய்தார். இவ்வளவும் எங்கே? குன்றுகளின் உச்சியில்!

27 0நீர்த் தேக்கத் தொட்டிகள் 40000 முதல் மூன்று லட்சம் லிட்டர் குடிநீரைத் தேக்கி வைக்கும் அளவு பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சினையைப் போக்கின!. அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த அதிசயம் மீண்டும் மேடக் மெஹ்பூப் நகரில் நடத்தப்பட்டு அங்கும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது!

சென்னை குடிநீர் பஞ்சத்தால் தவிப்பது கண்டு உருகிய பகவான் பாபா 2002 ஜனவரியில் தெலுகு கங்கா திட்டத்தை அமைக்க உறுதி பூண்டு அதை செவ்வனே நிறைவேற்றி கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு வர வைத்தார்.இந்தத் திட்டத்திற்கான செலவு மட்டும் 600 கோடி ரூபாய்கள்!

ஆக, இன்று தீவிரவாதத்தை மாற்றும் பணி, மக்களின் உடல் நோயைப் போக்கும் மருத்துவமனைப் பணி, உயிர் காக்கும் குடிநீர் வழங்கும் பணி என இந்த அவதாரம் மேதினி மேல் போதனையை வாழ்ந்து காட்டும் அவதாரம் என்று சொல்ல வைக்கிறது. அவர் கூறினார் My life is my message – எனது வாழ்க்கையே எனது செய்தி என்று! அதை நம் கண் முன்னால் நேரில் கண்டு அதிசயிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது!

About The Author

1 Comment

  1. பரம்

    சென்னை குடிநீர் பஞ்சத்தால் தவிப்பது கண்டு உருகிய பகவான் பாபா 2002 ஜனவரியில் தெலுகு கங்கா திட்டத்தை அமைக்க உறுதி பூண்டு அதை செவ்வனே நிறைவேற்றி கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு வர வைத்தார்.இந்தத் திட்டத்திற்கான செலவு மட்டும் 600 கோடி ரூபாய்கள்!
    இது உண்மையா? வேறு யாரும் இதை உறுதி படுத்த முடியுமா?

Comments are closed.