இந்திரன் பூஜித்த மேலப்பழுவூர் சிவ ஸ்தலம்

இந்திரனே பூலோகம் வந்து சிவபூஜை செய்தான் என்றால் அந்த பூஜை செய்த இடம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்? அந்த இடம்தாம் மேலப்பழுவூர். மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் இது.
தன் மனைவியைப் பிரிந்து பல காலங்கள் இருந்து அவளுடன் சேரும் காலம் வர இந்திரன் சிவபூஜை செய்தான். கடுந்தவமிருந்தான். என்ன காரணத்திற்காக அவன் தன் மனைவியைப் பிரிய நேரிட்டது?
ஒரு சமயம் இந்திரன் கௌதம மகரிஷியின் பத்தினியான அகலிகை மேல் ஆசைப்பட்டு அவளை அடைய விரும்பினான். இதற்காக, அவன் அவரது ஆசிரம வாசலில் கௌதமராக உரு மாறி உள்ளே வந்து விட்டான். அகலிகை என்றால் களங்கமற்றவள் என்று பொருளாகும்.

கௌதமர் ரிஷி உள்ளே வந்து பார்க்க, மிகவும் கோபம் கொண்டு அகலிகையை கல்லாகப் போகும்படி சாபம் இடுகிறார். பின் உண்மை நிலையை அறிந்த அவர், ராமர் பாதம் பட்டால் அவளுக்கு சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறுகிறார்.

இந்திரனுக்கு அவன் உடலெல்லாம் குறி பெற சாபமிடுகிறார். அவமானமடைந்த இந்திரன் இதை எண்ணி மிகவும் வருந்தினான். இப்படிப்பட்ட அவமான சின்னத்துடன் அவனது மனைவியால் எப்படி வாழ முடியும்? அதனால் அவனுடன் வாழப் பிடிக்காமல் இந்திராணி அவனை விட்டு விலகிச் சென்றுவிட்டாள். இந்திரனும் தன் தவறுக்கு வருந்தி, சிவபூஜை செய்து சாப நிவர்த்தி பெற்றான்.
ஆனாலும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் போய்விட்டதே என்று மிகவும் வருந்தினான். இதற்காக மதுரைக்குச் சென்ற அவன் திரும்பவும் இறைவனைத் துதிக்க ஆரம்பித்தான். அங்கு இறைவனான அருள்மிகு மழுவேந்தியநாதர் அவன் முன் தோன்றி, "தேவேந்திரனே! நீ உன் தவறை உணர்ந்துவிட்டாய். இப்போது பழுவனம் சென்று என்னை அங்கு வணங்கு. நான் உனக்கு அங்கு அருள் புரிவேன்." எனக் கூறி மறைந்தார்.

இந்திரனும் சிவ நாமம் ஜபித்து வர, வாக்குப்படியே சொக்கநாதர் மீனாட்சியுடன் காட்சி தந்தார். தானும் தன் மனைவி இந்திராணியும் திரும்ப தம்பதியாக சேர இந்திரன் கேட்டுக்கொண்டதால் அவரும் மீனாட்சி சகிதமாக வந்து அருள் புரிந்தார். பழுவனம் என்றால் ஆலமரம் நிறைந்த வனம். இந்த மேலப்பழுவூர் என்ற தலத்தில்தான் இந்திரனுக்கு சாபவிமோசனம் கிடைத்தது.
இந்தக் கோயில் மிகப் பெரிதாக இருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம் பிரும்மாண்டமாக இருக்கிறது. இதைப் பார்த்தபடியே உள்ளே சென்றால் இந்திரனின் யானையான ஐராவதம் நிற்கிறது. பின் இருப்பது பலிபீடம். கொடிமரமிருந்த அடையாளம் மட்டும் இருக்கிறது.

அங்கிருந்து உள்ளே வர நந்தீஸ்வரர் நம்மை அழைத்து அருள் புரிகிறார். இதையும் தாண்டி கர்ப்பகிரகம் போனால் லிங்கத்திருமேனியைக் காணமுடிகிறது. அழகே உருவான சுந்தரேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். தம்பதிகளுக்குள் இருக்கும் பிணக்கை, மனவேற்றுமையைத் தீர்த்து வைக்கும் தயாநிதி தீப ஒளியில் ஜ்வலிக்கிறார். அடுக்கு தீபம் ஏற்றப்பட்டு அவருக்கு ஆரத்தி காட்டுகையில் அவர் அங்கு ஒளிவீசி அந்த இடத்தில் அமைதியையும் மனசாந்தியையும் ஏற்படுத்துகிறார்.

இந்த கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து அனுபவித்து வர அவரது செல்லப்பிள்ளையான கணபதியைப் பார்க்கிறோம். செல்லக்கணபதிக்குப் பிடித்த கொழுக்கட்டையை தன் கையில் ஏந்தியபடி அமர்ந்திருக்கிறார். அவர் எதிரில் அவரது சகோதரரான முருகன் தன் திருக்கரங்களில் தண்டம் ஏந்தியபடி பாலமுருகனாக அமர்ந்து அருள் புரிகிறார்.

வழக்கமாய் இருக்கும் துர்க்கை சன்னதி இங்கில்லை. சப்த கன்னிகைகளான பிராம்மி, வைஷ்ணவி, வாராகி, மாஹேஸ்வரி, சாமுண்டி, கௌமாரி மற்றும் இந்திராணி ஆகிய தேவிகளுக்குள் துர்க்கை உள்ளடங்கி இருப்பதாள் தனி சன்னதி கிடையாதாம்.

இந்தக் கோயிலில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அங்கயற்கண்ணி தனி சன்னதியில் கம்பீரமாக நின்றபடி கருணை புரிகிறாள். இவளைத் தொழுதால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம். இவள் தெற்கு நோக்கி இருப்பதால் இவளைப் பூஜிக்க, யமபயம் அறவே இருக்காது. தவிர ஒரு கோயிலிலும் இல்லாத ஸ்ரீலட்சுமி தேவியின் தமக்கை ஜேஷ்டாதேவிக்கும் இங்கு சன்னதி இருக்கிறது.

மற்றுமொரு வித்தியாசமான காட்சி என்னவென்றால் சனிபகவான் நீலாதேவியுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். ஆனால் அவருடைய முகம் குதிரை முகமாக இருக்கிறது. இதன் காரணம் தெரியவில்லை.

பரசுராமரும் இங்கு வந்து பூஜை செய்தாராம். ஒரு சமயம் ஜமதக்னி முனிவர் தன் மகனை அழைத்து தன் மனைவியைக் கொல்லச் சொன்னார். பரசுராமரும் தந்தை சொல்லைத் தட்டாமல் தன் தாயைக் கொன்றார். அதனால் தன் பாபங்கள் தீரவும் தன் மனைவியுடன் சேரவும் ஜமதக்னி முனிவர் இந்தக் கோயிலுக்கு வந்து சிவபூஜை செய்து, பின் வரம் பெற்று தன் மனைவியுடன் சேர்ந்து விட்டாராம். இதனால் இந்தக் கோயிலில் நவகிரகங்களோடு ஜமதக்னி முனிவருக்கும் சிலை இருக்கிறது. தவிர இந்த இடத்தில் இருக்கும் தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பல கடவுள்கள் இங்கே இருப்பதால் எல்லா தினங்களிலும் ஏதாவது விசேஷம் நடந்தபடி இருக்கின்றன. சதுர்த்தி, பிரதோஷம், சனி கிரக பூஜை, பைரவர் பூஜை, சஷ்டி, கிருத்திகை என்று பலவாறு பல நாட்களில் விசேஷங்கள் நடக்கின்றன. நவராத்திரியும், சிவராத்திரியும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன. நவராத்திரி தேவி ஒன்பது நாளும் ஒவ்வொரு தேவியின் உருக்கொண்டு காட்சி அளிக்கிறாள்.

இந்தக் கோயிலுக்குள் நுழைந்தாலே மனத்திலே இன்பமும் சாந்தியும் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்தக் கோயில் அரியலூரில் இருந்து பன்னிரண்டு கிமீ தூரத்தில் மேலப்பழுவூர் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் உள்ளது.

About The Author

1 Comment

  1. இரா.அ.பரமன் (அரோமணி)

    ஒவ்வொரு கோவிலின் ஸ்தல வரலாறும் கற்பனைக் கதைதானே தவிர உண்மையில்லை. உருவ வழிபாடு என்பது இந்து மதத்திலேயே தாழ்ந்த வழிபாடு என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். இந்து மதம் என்றாலே வேதமும், உபநிஷத்துக்களும்தான். இவைகள் மனபயிற்சியைதான் ஆன்மீகம் அடைய வழியாகக் கூறுகிறது. பகவத்கீதையில் பகவான் கிருட்டிணன், கர்ம யோகத்தில் மனபயிற்சிதான் மனக் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்; மனிதனை வளமாக்கும் பாதுகாப்பான பாதை என்று கூறியிருக்கிறார். அதாவது செயலை/கடமையை முழு ஈடுபாட்டுடன் மனதையும்,உடலையும் ஒருங்கிணைத்து செல்லும்போதுத்தான் மனிதன் வளம் பெருவான் என்று கூறுகிறார். அவர் நான் கண்டுபிடித்த ‘கவனவாழ்க்கையைதான்’ கர்மயோகத்தில் கூறுகிறார். 22 ஆண்டுகால ஆராய்ச்சியில் உயர்ந்த ஆன்மீகம் கவனவாழ்க்கையில்தான் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால் இந்தியர்களும், தமிழர்களும் திருநீறு பூசுவது, மொட்டை அடிப்பது, சாமி படத்துக்கு தீபம் காட்டுவது ஆகியவைதான் வழிபாடு, ஆன்மீகம் என்று நினைத்து செயல்படுகிறார்கள். இதனால் மனதை அடிப்படையாக வைத்து வழிபாடு செய்தவர்கள் நம்மை ஆண்டார்கள். சடங்குகளை அதாவது உடலை அடிப்படையாக வைத்து வழிபாடு செய்த இந்தியர்களும் தமிழர்கள் உட்பட் வெளிநாட்டுச் சிறைகளில் கசையடி பட்டுச் சாகிறார்கள். சாமிக்கு முன்னால் சமஸ்கிருதம் மந்திரம் சொல்லி மனபயிற்சி செய்கிறார்கள் பிராமணர்கள். அவர்களது வீடுகளில் சந்தியா மந்திரம் சொல்லி மனபயிற்சி செய்கிறார்கள். நல்லது கெட்டது அனைத்திலும் காயத்திரி மந்திரம், சகஸ்ரநாம மந்திரம் என்று எல்லாவற்றிலும் மனபயிற்சிதான். அவர்களின் முன்னேற்றம் அளவிட முடியாது. ஆனால் இந்தியனும் தமிழன் உடபட திருநீறு பூசிவிட்டால் அதுதான் கடவுள் வழிபாடு, ஆன்மீகம் எல்லாம்.,

Comments are closed.