இமை குளித்த இரவுகள்

குண்டு வெடித்துச் சிதறி அருகில்
வந்து விழுந்த ஒற்றைக் கை
சூனியம் எமக்குக் கொடுத்த
சதைப் பூச்செண்டு போல

எமை நோக்கி சிரித்தன
இரத்தக் கிழிசல்கள்

சிறிது சிறிதாக காற்றில் கரைந்து
நாசி தொட்டது இரத்த வாசனை

குடிசையைச் சுற்றிலும் பேரமைதி
உலையில் கொதிக்கும் அரிசிச் சத்தம்
வெளியில் கேட்டால்?

ஈரக்குலை நடுங்க வெடுக்கென்று
எரியும் கொள்ளியை வெளியே இழுத்தேன்
அதையும் மீறி உலையின் வாசனை
கொலைகார மூக்கைத் துளைத்ததோ?

சர்ர்ரக்… சர்ர்ரக்… பூட்ஸ் ஓசை
சட்டென்று நின்று போனது

தலையில் இடி விழப் போகும் தருணம்
காதுகள் பொத்தி கண்கள் இறுக்கி
உயிர் விசும்பி, உருகிக் கரைய
எம் இமை குளித்த இரவுகள் எத்தனை?

கரையை முத்தமிட்டுக்
கடலைச் சேரும் அலைகள் போல
தினமும் சாவின் எல்லை
தொட்டுவிட்டுத் திரும்பும் வாழ்க்கை எனினும்
ஆண்டுகள் உருண்டாலும் – எங்கள்
விடியல் கனவின் ஈரம் மட்டும்
இன்னும் காயாமல்

About The Author