இயற்கை உலகம் – 02

நெருப்புக்கோழி (ostrich) உண்மையில் தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளுகிறதா ?

நெருப்புக்கோழி அல்லது தீக்கோழி என்பது நீண்ட கழுத்தும் உயரமான கால்களும் கொண்ட, மிக விரைவாக ஓடக்கூடிய, ஆனால் பறக்க முடியாத ஓர் ஆப்பிரிக்கப் பறவை இனம். இது வியப்பூட்டும் தனிப்பட்ட ஒரு பறவை வகை; ஆனால் மக்கள் நினைப்பது போல் இது மணலில் தனது தலையைப் புதைத்துக் கொள்வதில்லை. நெருப்புக்கோழி அச்சப்படும்போது, சில நேரங்களில் கீழே விழுந்து, தனது கழுத்தைத் தரையில் பரப்பிக்கொண்டு, சுற்றும் முற்றும் கவனமாகப் பார்ப்பதுண்டு; இதனைக் காணும்போது அது தலையை மணலில் புதைத்துக்கொண்டிருப்பது போலத் தோன்றும்! ஆனால் அபாய நிலை தன்னை நெருங்கி வரும்போது மற்ற விலங்குகள் செய்வதையே இதுவும் செய்கிறது; ஆம், இதுவும் ஓடத் துவங்கும். ஓடிக் களைப்புற்று, மேலும் ஓடமுடியாத நிலையில் அல்லது தனது இருப்பிடத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நெருப்புக்கோழி தனது வலிமையான கால்களால் உதைக்கும்.

Ostrichநெருப்புக்கோழியால் பறக்க முடியாவிட்டாலும், அதனை ஈடு செய்யும் வகையில் மிக விரைவாக ஓடமுடியும். உலகிலுள்ள வேறு எந்தப் பறவையையும் விட இது மிக விரைந்து ஓடக்கூடியது; ஒரு மணிக்கு 50 கிலோமீட்டர் ஓடும் இப்பறவையால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஒரே வேகத்தில் ஓட இயலும்.

முடை வளிமா (skunk) எனப்படும் பூனை வடிவக் காட்டு விலங்கு கடைபிடிக்கும் தற்காப்பு வழிமுறை (defense mechanism)

முடை வளிமா என்பது மென்மையான மயிரிழைகளால் போர்த்தப்பட்ட, கருமை மற்றும் வெண்மைக் கோடுகளைக் கொண்ட, பூனை போன்ற அமைப்பிலான, சிறியதொரு காட்டு விலங்காகும். இவ்விலங்கு அச்சமுறும் போது அல்லது அபாயத்துக்கு உட்படும்போது முடை நாற்றம் வீசும் திரவத்தை வெளிப்படுத்தக் கூடியது. இது வெளிப்படுத்தும் திரவம் எதன் மீது தெளித்தாலும் அது நாட்கணக்கில் நீங்காமல் நாற்றமடிக்கும்.

Skunkஇந்த விலங்கின் வால் பகுதியில் அமைந்துள்ள சுரப்பிகளிலிருந்து நாற்றமடிக்கும் இத்திரவம் வெளிப்படுகிறது. இவ்விலங்கு 4 மீட்டர் (12 அடி) தூரத்திற்கு இத்திரவத்தை வெளிப்படுத்தித் தெளிக்கக்கூடியது. திரவத்தைத் தெளிக்கும் முன்னர் இவ்விலங்கு தனது முன்னங்கால்களை அழுத்தி உறுமல் ஒலியை எழுப்பி எச்சரிக்கை செய்யும். இத்திரவத்திற்கு அருகில் இருக்கும்போது, இதன் நாற்றம், தாங்க முடியாத அளவுக்குக் குமட்டலையும் அருவெறுப்பையும் ஏற்படுத்தக் கூடியது. மேலும் இத்திரவத் துளிகள் கண்களில் பட்டால் தற்காலிகப் பார்வை இழப்பும் ஏற்படலாம்.

முடை வளிமா எனப்படும் இவ்விலங்கு புழு பூச்சிகள், சிறிய மீன்கள், முட்டைகள், பழங்கள், விதைகள் மற்றும் அழுகிய இறைச்சி போன்ற தாவரம் மற்றும் இறைச்சி ஆகிய இருவகை உணவையும் உட்கொள்ளும், இது தனது உணவைத் தரையைத் தோண்டியும் மரப் பொந்துகள், மரக்கட்டைகள் ஆகியவற்றிலிருந்தும் தேடிக்கொள்ளும்.

About The Author