இயற்கை உலகம் ( 13)

நீர் நாய் (otter):

நீர் நாய் என்பது மரநாய் வகை சார்ந்தது, அதாவது செம்பழுப்பு நிற மென்மயிர், நீண்டு மெல்லியதான உடல், குறுங்கால்கள் உடையதும் தன்னைவிடச் சிறிய விலங்குகளை உண்ணுவதுமான சிறு காட்டு விலங்குக் குடும்பத்தைச் (weasel family) சேர்ந்தது. நீர்நாய் விலங்குகள் நீர்நிலைக்கு அருகில் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும். நீந்துவதில் திறன் பெற்ற இவ்விலங்குகள் நீருக்கடியில் நான்கைந்து நிமிடங்கள் வரை தொடர்ந்து இருக்கக்கூடியவை. நீர்நாயின் தலை சிறிதாகவும் தட்டையாகவும் இருக்கும். இது நீண்ட கழுத்தை உடையது; குறுகிய வாலைக் கொண்டது. சிறப்பு வாய்ந்த தசைகளால் இவ்விலங்குகள் தமது காதுகளையும் மூக்குகளையும் தண்ணீர் புகாமல் தடுத்துக் கொள்ளும். நீர் நாயின் பாதங்களில் வலையமைப்பு (web) போன்ற பகுதி அமைந்து இருப்பதால் விரைவாக நீந்திச் செல்ல முடிகிறது. நீர் நாயின் உடலில் அமைந்துள்ள நீண்ட; கரடுமுரடான, காப்பு முடிகள் (guard hairs) காற்றை உள்ளடக்கி அதன் தோலை உலர் நிலையில் வைத்து குளிர் தாக்காமல் காக்கின்றன. இவ்விலங்குகள் விழிப்புணர்வுடன் இருந்து தம் இரைகளைக் காற்றில் வீசும் மணத்தின் வாயிலாகவே அறிந்துகொள்ளக் கூடியவை. இவை அச்சம் கொள்ளும்போது உரத்த குரலெழுப்பி அலறும்.

ஆண் கடல் குதிரைகள் (sea horses) தாய்மை அடைதல்:

கடல் குதிரை என்பது ஒரு சிறியவகை மீன். இதன் தலை குதிரையின் சிறிய தலையை ஒத்திருப்பதால் இவ்வகை மீனுக்கு இப்பெயர் உண்டாயிற்று. நம் அறிவுக்கு எட்டியவரை எல்லா விலங்கினங்களிலும் பெண் மட்டுமே கருவுற்று, தாய்மை அடைந்து மக்களைப் பெற்றெடுக்கும் இனமாக விளங்குகிறது; ஆனால் கடல் குதிரைகளைப் பொறுத்தவரை நேர்மாறான நிலைமையே நிலவுகிறது. பெண் கடல் குதிரை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் அமைந்துள்ள அகன்ற பையில் (pouch) வைத்துவிடும். முட்டைகளை அவை அடைகாத்து பொறித்து குஞ்சுகள் உருவாகி பைக்கு வெளியே வரும் நிலையில் பையின் வாய்ப்பகுதி அகலமாகத் திறந்து கொள்ளும். இந்நிலையில் ஆண் கடல் குதிரை தன் உடலை மாறி மாறி வளைந்து கொடுத்து, கடல் குதிரைக் குஞ்சு வெளிவருவதற்கு உதவும்; இவ்வாறு பல குஞ்சுகள் ஒவ்வொன்றாக ஆண் கடல் குதிரையின் பையிலிருந்து வெளிவரும். எல்லாக் குஞ்சுகளும் வெளியேறிய பின்னர், ஆண் கடல் குதிரை குஞ்சுகளை ஈன்ற களைப்புடன் காணப்படும்.

கடல் குதிரைகளின் தலை குதிரைத் தலை போன்றும், வால் பகுதி குரங்குகளின் வாலைப் போன்றும், இவற்றின் பைகள் கங்காருவின் பை போன்றும், கண்கள் பச்சோந்தியின் கண்கள் போன்றும் அமைந்திருக்கும்.

சிம்பாஞ்சி (chimpanzee) எனப்படும் மனிதக் குரங்கு

சிம்பாஞ்சி ஒரு குரங்குதான், ஆனால் இது ஒரு சிறப்பு வகைக் குரங்காகும். இது மிகவும் அறிவுக்கூர்மை கொண்டதோர் விலங்கு. இது மனிதனைப் போன்று காணப்படும் ஆப்பிரிக்காவிலுள்ள வாலில்லாக் குரங்கு ஆகும்; மனிதருக்குள்ள பலவகைக் குணங்களையும் இது கொண்டுள்ளது. சிம்பாஞ்சிகள் அறிவுள்ளவை, வேடிக்கையாபவை, ஆர்வம் கொண்டவை மற்றும் எளிதாக எதையும்க் கற்றுக்கொள்ளக் கூடியவை. சிம்பாஞ்சிகளும் அவைகட்கு நெருக்கமான குட்டைச் (pygmy) சிம்பாஞ்சிகளும் வேறு எந்த விலங்கையும் விட மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவை என அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. சிம்பஞ்சிகள் கொரில்லா (gorilla) மற்றும் நீண்ட கைகளுள்ள ஒரு வகை வாலில்லாக் குரங்கு (gibbon) ஆகியவற்றுடனும் கூட தொடர்புள்லவையாகும்.

சிம்பாஞ்சிக் குரங்குகள் ஆப்பிரிக்காவில் விக்டோரியா எரி முதல் காம்பியா (Gambia) வரையான பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விலங்கினத்தை அறிவியலார் மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை முறையே மத்தியப் பகுதி சிம்பாஞ்சி, நீண்ட முடியுடையுடைய சிம்பாஞ்சி மற்றும் மேற்குப் பகுதி சிம்பாஞ்சி எனப்படும்.

ஜிப்பன்:


ஜிப்பன் (gibbon) எனப்படும் நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்கு ஏறக்குறைய அழிந்து வரும் ஓர் இனமாக உள்ளது. அவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்படுவதாலும், உணவுக்காக அவை கொல்லப்படுவதாலும் வளர்ப்பு மிருகமாக (pet animal) அவற்றை வளர்க்க விரும்பி மக்கள் வாங்குவதாலும் இக்குரங்கு வகை அழிவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.

About The Author