இயற்கை உலகம் (17)

பறவைகள் பறப்பது:

பறவைகளின் உடல்கள் அவை பறப்பதற்குரிய திறனைப் பெறும் வகையில் தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் எலும்புகள் இலேசாக இருக்கும் வண்ணம் உட்குழிவாக (hollow) அமைந்துள்ளன. அவற்றின் உடல்களும் கூட மிகக் குறைவான எடையையே கொண்டுள்ளன; இதனால் குறைவான முயற்சியில் வான்வெளியில் அவற்றால் பறந்து செல்ல முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கழுகினது சிறகின் நீளம் (wing span) 2 மீட்டருக்கு மேல் இருப்பினும் அதன் எடை 4 கிலோகிராமுக்கும் குறைவாகவே உள்ளது. பறவைகள் சிறகடித்துப் பறக்கும்போது, அவற்றின் நுரையீரல்களுடன் இணைக்கப்பட்டுள்ள காற்றுப்பைகளில் (air sacks) இருக்கும் காற்றிலிருந்து தேவைப்படும் கூடுதல் உயிர்வளி (oxygen) பெறப்படுகிறது.

இருப்பினும், பறவைகள் பறப்பது என்பது சிறகுகளை மேலும் கீழும் அடித்துக்கொள்வது மட்டுமல்ல. ஆற்றலுடன் பறத்தல், காற்றுடன் இழைந்து செல்லல் ஆகிய இரண்டின் கலவையே பறத்தல் எனபது. சிறகுகள் அடித்துக்கொள்ளும்போது, காற்றைக் கீழ்புறமும் பின்புறமும் தள்ளியவாறு சிக்கலான முறையில் பறவைகள் முன்னேறிப் பறக்கின்றன. பறக்கும்போது வேகம் குறைந்துபோகா வண்ணம் பறவையின் சிறகுகள் வளைந்து கொடுத்து உதவுகின்றன. பறவையின் இறகுகள் (feathers) எடை குறைந்தும் அதே வேளையில் வலிமையாகவும் நெகிழ்ந்து கொடுப்பதாகவும் இருப்பதால், பறக்கும்போது ஏற்படக்கூடிய காற்றின் தடையைக் (air resistance) குறைத்து எளிதாகவும் விரைந்தும் பறவைகளால் பறக்க முடிகிறது.

வல்லூறு (falcon) என்பது பிற பறவைகளை/உயிரினங்களைக் கொன்று தின்னும் ஒரு பறவை. இப்பறவை ஆற்றல் மிக்க வளை நகங்களையும் (talons) கூர்மையான அலகையும் (beak) கொண்டிருப்பதால் எளிதாகத் தன் இரையைக் (prey) கொன்று தின்னும். தன் இரையைப் பிடிக்க இது பறக்கும்போது, தனது பெரிய சிறகுகளை மூடிக்கொண்டு ஒரு கல்லைப்போன்று சுருங்கி விரைந்து சென்று தனது இரையைக் கவ்விக் கொன்றுவிடும். இதன் கால்களின் தசை மிக வலிமையானது; இதனால் விரைந்து சென்று இரையைப் பிடிக்கும்போது கால்களில் ஏற்படும் தாக்கத்தை (impact) இதனால் தாங்கிக்கொள்ள முடிகிறது.

பறவைகளின் பறக்கும் வேகம்:

குதிரைகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரின் ஓட்டப் பந்தயத்தில், ஓடும் ஓட்டத்தின் வேகத்தை எளிதாகக் கணக்கிட முடியும்; ஏனெனில் அப்பந்தயங்களில் துவக்கம், முடிவு ஆகிய இரண்டும் உள்ளன. ஆனால் பறவைகள் பறப்பதின் வேகத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினமான ஒன்று.

பல்வேறு பறவைகளின் பறக்கும் வேகம் பற்றி பலதரப்பட்ட கணக்குகள் கூறப்படுகின்றன; ஆயினும் இந்தப் புள்ளிவிவரங்கள் (statistics) பெரும்பாலானவர்களால் ஐயத்திற்குரியதாகவே கருதப்படுகின்றன.

பொதுவாக, எடைமிகுந்த பறவைகள் வானில் நிலையாகப் பறப்பதற்கு, அவை விரைவாகப் பறக்க வேண்டியது கட்டாயமாகும். மிக வேகமாகப் பறந்த ஒரு ஹோமிங் புறா (homing pigeon) மணிக்கு 94.2 மைல்கள் பறந்ததாக நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

வேறு சில பறவைகளின் பறக்கும் வேகம் சிலரால் பின்வருமாறு கண்டறியப்பட்டுள்ளது: பெரிகிரின் வல்லூறு (peregrine falcon) மணிக்கு 65 முதல் 75 மைல்கள் வரை பறக்கின்றன; அடுத்ததாக சில வகை வாத்து இனங்கள் (ducks and geese) 65 முதல் 75 மைல்கள் வரை பறக்கக் கூடியவை. ஐரோப்பிய ஸ்விஃப்ட் (European swift) பறவை மற்றும் சில வகைப் புறாக்கள் மணிக்கு 60 முதல் 65 மைல்களும், சில இசைப் பறவைகள் (humming birds) 55 முதல் 60 மைல் வரையும் பறக்கக்கூடியன.

சில பறவைகளால் பறக்கவே இயலாது. பெங்குவின் (penguins) பறவைகள் இவ்வாறானவையே. தம் சிறகுகளைக்கொண்டு இவற்றால் நீரில் விரைவாக நீந்திச் செல்லமுடியும்.

About The Author