இயற்கை உலகம் (24)

பெரணித் தாவரங்கள் (ferns) :

பிற தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது போன்று பெரணி இனப்பெருக்கம் செய்வதில்லை. இத்தாவரத்தில் இலைகளுக்கு மாறாக நீண்ட ஓலைகளே (fronds) அமைந்திருக்கும். சில பெரணிகள் மரத்தைப் போன்று உயரமாக 24 மீட்டர் வரையும் கூட வளரக்கூடியவை

நுண்ணோக்கி கொண்டு காணக்கூடிய வித்துகள் (microscopic spores) இத்தாவரத்தின் அடிப்பகுதியின் முன்புறத்தில் உற்பத்தி செய்யப்பட்டு காற்றால் சிதறடிக்கப்படுகின்றன. சிதறிய இவ்வித்துகள் தரையில் தகுதியான ஈரப்பதம் கொண்ட மண்ணில் விழும்போது, அவை முளை விட்டு (sprout) சின்னஞ்சிறு தாவரங்களாக உருவாகி, தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன.

பெரணியின் இனப்பெருக்கப் பகுதிகள் மிகவும் நுட்பமானவை; ஈரமான சுற்றுச்சூழலில் மட்டுமே அவை உயிர் வாழக்கூடியவை. எனவே இத்தாவரம் உயிர்வாழவும் வளரவும் தகுதியான ஈரப்பதம் கொண்ட சுற்றுச்சூழல் இன்றியமையாதது.

மிகப்பழங்காலந்தொட்டே இருந்து வரும் தாவர வகை ஆல்கா எனப்படும் பாசிகள் (algae) ஆகும். பெரும்பாலான பாசிகள் நீர்மேல் படர்வன (aquatic) அல்லது நீரில் வாழ்வன. நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய ஓரணு (single-cell) உயிரினம் முதல் பல மீட்டர் வரை படரக்கூடிய கடற்பாசிகள் (sea weed) வரை இதில் பலவகைகள் உள்ளன. இவற்றிற்கு வேர்கள் இல்லை எனினும் நீர்ப்பரப்பில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு உதவக்கூடிய ஊன்று உறுப்புகள் (holdfast) உள்ளன.

காளான்கள் (mushrooms) :

காளான்கள் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தாவரங்களாகும். இவற்றிற்கு வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் ஆகியன இல்லை. இவை மிக விரைவாக வளர்கின்றன; இவற்றின் வளர்ச்சியை உண்மையில் நாம் கண்ணால் காண்பது போல் உணரமுடியும். இவை பூஞ்சைகள் (fungi) என்றும் கூறப்படும்; அதாவது இவற்றில் பச்சையம் எனப்படும் குளோரோஃபில் (chlorophyll) கிடையாது; எனவே இவற்றால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உருவாக்கிக்கொள்ள முடியாது.

தரைக்குக் கீழே காணப்படும் காளானின் பகுதி நூல்களைப் போன்று அமைந்திருக்கும்; இது மைசீலியம் (mycelium) எனக் கூறப்படுகிறத. இந்த மைசீலியம் நூல்கள் சின்னஞ்சிறு நுண்துகள்களிலிருந்து (spores) உருவாகி வளர்கின்றன. இந்த நூல்களின் மேல் சிறிய வெண்மையான குமிழ் (knob) போன்ற திசு (tissue) முளைத்து மேல் நோக்கி வளரும்; இறுதியில் குடை போன்ற அமைப்பில் விரிந்து பரவும். இக்குடைப்பகுதிக்குக் கீழே ஒளிரும் நுண்பகுதிகள் (radiating gills) நெருக்கமாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்தே மேற்கூறிய நுண்துகள்கள் உருவாகின்றன. இந்த நுண்துகள்கள் கீழே விழுந்து காற்றினால் பரவிச் செல்லும். தகுந்த வளம் மிக்க நிலப் பரப்பில் விழும்போது இத்துகள்கள் புதிய காளான்களாக உருவாகி வளர்கின்றன.

பாசிக்காளான்கள் (lichens) எனப்படும் தாவரம் தனிச்சிறப்பு வாய்ந்ததோர் உயிரினமாகும். இதில் பாசிகளும் (algae) காளான்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றன. பெரும்பாலான இத்தாவரங்கள் பாய் போல் விரிந்தும், சில கிளைகள் கொண்ட தாவரங்கள் போன்றும் இருக்கும். இவை கூரைகள், பாறைகள் அல்லது மரக்கிளைகளில் வளரக்கூடியவை.

About The Author