இயற்கை உலகம் (26)

ஊசியிலை மரங்களின் (Pine trees) பசுமை

இலைகளுக்குப் பல செயல்பாடுகள் இருக்கின்றன; அவற்றுள் மரங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதும் ஒன்று. இலைகள் கார்பன் டை ஆக்சைட் என்னும் கரியமில வாயுவைக் (carbon dioxide) காற்றிலிருந்தும், நீர் மற்றும் கனிமங்களை (mineral) மண்ணிலிருந்தும் எடுத்துக்கொள்ளும். இலைகளில் உள்ள குளோரோஃபில் (chlorophyll) என்னும் பச்சையம் சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. சூரிய ஒளியானது கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பச்சையத்தின் உதவியுடன் சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உருவாகும் இந்தச் சர்க்கரை மரத்தின் அடிப்படை உணவாக விளங்குகிறது.

இலைகள் ஏராளமான அளவுக்குத் தண்ணீரையும் வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஊசியிலை மரங்கள் போன்றவை வேறு வகையான இலைகளைக் கொண்டுள்ளவை. இவற்றின் இலைகள் குறுகலாகவும் ஊசி போன்று கூர்மையாக அமைந்திருப்பதுடன், அந்த இலைகள் தடிமனாகவும் மெழுகு போன்ற பொருளால் மூடப்பட்டும் இருக்கும்; இதனால் நீர் ஆவியாவது (evaporation) தடுக்கப்படுகிறது. எனவே இவ்வகை மர இலைகள் பல ஆண்டுகள் வரை உதிராமல் நிலைத்திருக்கும்; இலைகள் உதிரும்போது புதிய இலைகள் உடனே தோன்றுவதால், மரக் கிளைகள் எப்போதும் இலைகளுடன் காட்சியளிக்கும். ஆகவே இவ்வகை மரங்கள் என்றும் பசுமையான மரங்கள் (ever green trees) என அழைக்கப்படுகின்றன.


இலைகளின் நிற மாற்றம்

கோடைக்காலத்தில் ஒரு மரத்தைக் காணும்போது, அது ஒரு வண்ணத்தை மட்டுமே அதாவது பச்சை நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் பருவ காலத்துக்கு ஏற்ப, இதே இலைகள் பல்வேறு நிறங்களுடன் காணப்படுகின்றன. இலைகளின் பச்சை நிறம் குளோரோஃபில் காரணமாக உண்டாவது; வேறு நிறங்களும் இலைகளில் உள்ளன என்றாலும் அவற்றைச் சாதாரணமாக நம்மால் காண முடிவதில்லை. "க்சந்தோஃபில் (xanthophylls)" என்னும் நிறமி (pigment) மஞ்சள் நிறத்துக்கும், "கரோட்டின் (carotene)" ஆரஞ்சு நிறத்துக்கும் மற்றும் "அந்தோயினனின் (anthoiyanin)" சிகப்பு நிறத்துக்கும் காரணமாக அமையும் நிறமிகளாகும்.

கோடைக் காலத்தில் நாம் குளோரோஃபில் எனப்படும் பச்சையத்தை அதாவது பச்சை நிறத்தை மட்டுமே நன்கு காண முடிகிறது; ஆனால் பருவநிலை குளிர்காலமாக மாறத் துவங்கும்போது, இலைகளில் சேர்ந்திருக்கும் உணவானது கிளைகள் மற்றும் தண்டுகளுக்குப் பரவும். குளிர்காலத்தில் மேலும் உணவு தயாரிக்கப்படாத காரணத்தால், குளோரோஃபில் எனப்படும் பச்சையத்தால் உற்பத்தி செய்யப்படும் உணவுத் தொழிற்கூடம் இயங்காமல் சிதைவுற்றுப் போகிறது; இதனால் எப்போதும் மறையாமல் இருக்கும் மற்ற நிறமிகள் நன்கு காணப்படுகின்றன. இதனால்தான் இலைகள் பல வண்ணங்களில் காட்சியளித்துக் காண்போர் உள்ளங்களைக் கவர்கின்றன.

About The Author