இயற்கை உலகம் (30)

ஒட்டுண்ணிகள் /புல்லுருவிகள் (parasites) :

பிற விலங்குகளை வருத்தி உயிர் வாழும் ஒரு விலங்கு வகையே ஒட்டுண்ணி அல்லது புல்லுருவி எனப்படுகிறது. மற்றொரு விலங்கை காயப்படுத்தி, நோய்க்கு ஆட்படுத்தி, அதன் உணவைக் கொள்ளையடித்து இவை உயிர் வாழ்கின்றன. தெள்ளுப் பூச்சி (flea) எனப்படும் ஓர் ஒட்டுண்ணி நாய், பூனை மற்றும் பிற கதகதப்பான (warm blooded) விலங்குகளிடம் காணப்படுவது; இது அவ்விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழ்கின்றன.

இருப்பினும், பிற உறவு முறை வடிவங்களில் பல்வேறு உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, சில நண்டு (crabs) வகைகள் மலர்ச்செடி போன்ற ஒருவகைக் கடல் உயிரினத்தை (sea anemones) தம் சிப்பிகளில் வைத்துவிட்டு அவற்றின் கூரிய (stinging) பாதுகாப்பான கொம்புகளின் (tentacles) கீழே மறைந்து கொள்கின்றன. அதே வேளையில் கடல் உயிரினம் நண்டின் உணவைப் பகிர்ந்து உண்டு லாபமடைகின்றது.

இதைப்போன்றே, ஒரு வகைச் சிறு நண்டு வகை உயிரினம் (shrimp) வளையைத் தோண்டி அதனை கோபி மீன்கள் (goby fish) எனப்படும் சின்னஞ்சிறு மீன் இனத்துடன் பகிர்ந்து கொள்கிறது. மீன் இனம் தான் உயிர் வாழ, வளையில் இடம் பெறுகின்ற அதே நேரத்தில், பிற உயிரினங்களை உண்டு உயிர் வாழும் விலங்குகளின் (predators) வருகையை சிறு நண்டுகளுக்குத் தெரிவித்து அவற்றையும் காப்பாற்றுகின்றது.

பெரும்பாலான ஒட்டுண்ணிகள் மிக எளிய சாதாரணமான உயிரினமாகும்; தம் உணவைச் செரிமானம் செய்துகொள்ளச் சிக்கலான உடலுறுப்புகள் அவைகட்கு இல்லை. .உண்மையில் ஒட்டுண்ணிகள் இனப்பெருக்க உறுப்புகளின் திரட்சியாக அமைந்துள்ளன எனலாம்.

தூய்மைப் படுத்தும் மீன் (cleaner fish) எனப்படுவது கடலடிப் பவழப் பாறைகளில் வாழ்பவை. இவை பெரிய மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை நீக்கித் தூய்மைப் படுத்துகின்றன. பிற மீன்களை உண்டு உயிர் வாழும் பெரிய மீன்களும் கூட தம் தோலிலுள்ள ஒட்டுண்ணிகளை நீக்கிக்கொள்ள, தூய்மைப்படுத்தும் மீன்களிடம் வருவதுண்டு. இச்சிறு மீன்களும் அவற்றின் வாயினுள் நீந்திச் சென்று அவற்றுக்கு இரையாகாமல் தம்மைக் காப்பாற்றிக்கொண்டு வெளிவரக்கூடியவை.

வெட்டுக்கிளிச் சீரழிவுகள் (Plagues of locusts) :

பல்லாயிரம் ஆண்டுகளாக வெட்டுக்கிளிப் பூச்சிக் கூட்டங்கள் விளை நிலங்களின் பயிர்களை அழித்து பாழாக்கி வந்துள்ளன; இச்சீரழிவு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மிகுதியாகும். ஒரு வெட்டுக்கிளிப் பூச்சிக் கூட்டம் (swarm) சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு லட்சம் மில்லியன் பூச்சிகளைக் கொண்டிருப்பதுண்டு. ஒரு பூச்சிக் கூட்டம் வானத்தையே இருளாக்கி வேளாண் பயிர்களை முழுமையாக நாசமாக்கிவிட முடியும்.

வெட்டுக்கிளி உண்மையில் தனித்து வாழ்கின்ற பிறருக்குத் தீங்கு விளைவிக்காத ஓர் உயிரினமே. அவற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்போது கூட்டங்கூட்டமாக தமக்கு உணவு தேடி இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சி பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் கூட நீள்வதுண்டு.

About The Author