இயற்கை உலகம் (35)

சிலந்தி (spider) பொதுவான பூச்சி வகைகளில் (insects) சேர்வதில்லை:

சிலந்தி எட்டுக் கால்களையுடைய (arachnids) ஓர் உயிரினம் ஆகும்; தேள் (scorpion), ஆடுமாடுகளைக் கடிக்கும் உண்ணி (tick) மற்றும் மைட் (mite) எனப்படும் மிகச் சிறிய உயிரினம் ஆகியனவும் இவ்வகை சார்ந்தவையே. பிற பூச்சிகளைப் போலன்றி இவை எட்டு கால்களையும், பெரும்பாலானவை எட்டு கண்களையும் கொண்டிருக்கும்; இவைகட்கு இறக்கைகள் இருப்பதில்லை.

சிலந்தி பொதுவாக எல்லா தட்ப வெப்ப நிலைகளிலும் இருப்பவை; இவை தரையில் ஓடும், தாவரங்களின் மேல் ஏறும், தண்ணீரில் நீந்தும், சில நீரிலேயே வாழும். சிலந்தி தன் அடிவயிறு அல்லது வயிற்றிலுள்ள சில சுரப்பிகளிலிருந்து பட்டு போன்ற மெல்லிய இழைகளைச் சுரந்து தனக்குரிய வலையைப் பின்னிக்கொள்கிறது. இதன் அடிவயிற்றின் நுனிப்பகுதியில் நூலிழையை உற்பத்தி செய்யும் மெல்லிய துளைகளைக் கொண்ட நூற்கும் உறுப்புகள் உள்ளன. நெய்யப்பட்ட பட்டு போன்ற இழைகள் இத்துளைகள் வழியே வெளியேற்றப்படுகின்றன. வெளியே வரும் போது இவை திரவ நிலையில் இருந்தாலும் காற்று பட்டவுடனே திட நிலைக்கு மாறிவிடுகின்றன. சிலந்திகள் புலால் உணவை உண்பவை; சிறு பூச்சிகள், தம் வலையில் சிக்கிக்கொள்ளும் பிற உயிரினங்கள் ஆகியவற்றை உண்ணும்.

தேள், சிலந்தி வகையைச் சார்ந்த ஓர் உயிரினமே. இதற்கு நடப்பதற்கான எட்டுக் கால்கள், இரையைக் கவ்விப் பிடிப்பதற்கான இரு முன்பகுதி இடுக்கிப் பிடிப்புகள் (pincers) ஆகிய உறுப்புகள் உள்ளன. மேலும் இதற்கு நீண்ட, மெல்லிய, வளைந்த, கூர்மையான கொடுக்கு (sting) ஒன்றும் உள்ளது. இக்கொடுக்கு நச்சுச் சுரப்பிகளுடன் இணைந்திருக்கும்.

சில பூச்சிகளின் ஒளிரும் வண்ணங்கள்:

பூச்சிகள் தம் பகைவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்க பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. குளவிகள் (wasps) எறும்புகள் போன்றவை ஆற்றல் மிக்க தம் கொடுக்குகளைக் (stings) கொண்டு அல்லது தம்மைத் தாக்க வருவோர் மீது நச்சுத் திரவத்தைத் தெளித்துத் தம்மைக் காத்துக் கொள்கின்றன. வட்டமிடும் ஈ (hoverfly) கொடுக்கைப் பயன்படுத்துவதில்லை; ஆனால் அதன் நிறம் குளவி அல்லது தேனீக்களின் நிறத்தை ஒத்திருப்பதால், அதன் பகை உயிரினங்கள் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்கின்றன. ஒட்டுப் பூச்சிகள் போன்ற பிறவகைப் பூச்சிகள் வண்ணப்பூசுத் திரை (camouflage) அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவை இலைகள் மற்றும் குருத்துத் தண்டுகள் (twigs) போன்று காட்சியளிப்பதால் தம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது. சில பூச்சிகளின் ஒளிரும் வண்ணங்கள் நச்சுப் பொருள் இருப்பதாக பிற உயிரினங்களை நினைக்க வைத்து எச்சரிக்கின்றன.

செந்நிறச் சிறு வண்டுகள் (ladybirds) மிகவும் வண்ணமயமாகக் காட்சி தருபவை; இவை தோட்டங்களில் தாவரங்களையும் மலர்களையும் தின்றுவிடக்கூடிய பயிர்க்கொல்லிப் பூச்சிகளைத் (aphids) தின்று தோட்டத்தினைப் பாதுகாப்பவை.

About The Author