இயற்கை உலகம் (44)

வாலில்லாக் குரங்குகள் (apes) மனிதரை ஒத்திருத்தல் :

மனிதருக்கு மிக நெருங்கிய உறவுள்ள விலங்காகக் கருதப்படுவது வாலில்லாக் குரங்குகள்தான். வாலில்லாக் குரங்குகளில் நான்கு வகைகள் உள்ளன; அவை முறையே: ஆரங்-உடான் (orangutan), சிம்பாஞ்சி (chimpanzee), கொரில்லா (gorilla), ஜிப்பான் (gibbon) என்பன. சிம்பாஞ்சி குரங்குகள் மனிதரைப் போன்று மூளையுடன் செயல் படுபவை; ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. வாலில்லாக் குரங்குகள் நான்கு கால்களையும் பயன்படுத்தி நடந்து செல்பவை எனினும், மனிதரைப் போன்றே இரு கால்களால் நின்று கொண்டு நடக்கவும் செய்யும். இவற்றிற்குக் கைகளில் விரல்களும் பெரு விரலும் உண்டு; இதனால் நம்மைப் போன்றே பொருட்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளவும் வைத்துக் கொள்ளவும் இயலும். இவ்வகைக் குரங்குகளின் தலை முடியும் வயதாக ஆக மனிதர்களுடையது போன்றே நரைத்துப் போகின்றது. கொரில்லாக் குரங்குக் குட்டிகள் பிறந்து பத்து வாரங்களில் மனிதக் குழந்தைகள் போன்றே தவழ்ந்து செல்லவும் எட்டு மாதங்களில் நடக்கவும் கற்றுக் கொள்கின்றன.

குரங்குகள் பிற பாலூட்டி விலங்குகளிடமிருந்து வேறுபடுதல்:

எல்லாக் குரங்குகளும் பாலூட்டிகளே; அறிவுக் கூர்மையுள்ள பாலூட்டிகளான மனிதர்கள், வாலில்லாக் குரங்குகள் (apes) ஆகியவர்களிடம் இருந்து குரங்குகள் வேறுபட்டிருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவற்றிற்கு உள்ள வால்(tail) தான். நீண்ட வாலானது குரங்ககளுக்குக் கூடுதல் கை அல்லது கால் போன்று அமைந்து எளிதாக மரத்தில் ஏறவும் அதில் தொற்றிக் கொள்ளவும் உதவுகிறது. தென் அமெரிக்க நாட்டில் வாழும் ஸ்பைடர் மங்கி (Spider monkey) என்னும் ஒரு வகைக் குரங்கு இரு கைகளையும் விட்டுவிட்டுத் தன் வாலைக் கொண்டே மரத்தில் தொங்கி தன் குட்டிக்குப் பாலூட்டக் கூடியதாகும். இவ்வகைக் குரங்குகள் தம் குடும்ப உறுப்பினர்களோடு பெரும்பாலான நேரத்தை மரத்திலேயே கழிக்கின்றன. குரங்குகள் தமக்கு ஆபத்து நெருங்குவதை அறிந்த உடனே ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்குத் தாவித் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. பெரிய கழுகு ஒன்றினால் மேலே இருந்தும் சிறுத்தைப் புலியினால் கீழே இருந்தும் குரங்குகளுக்கு ஆபத்து விளையக்கூடும்; எனவே குரங்குகள் தம்மை மேலிருந்தும் கீழிருந்தும் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். குரங்குகள் பல்வகை உணவை உட்கொள்ளக்கூடியன. பூக்கள், பழங்கள், இலைகள் முதற்கொண்டு பூச்சிகள் மற்றும் சிறு தவளைகள் வரை பலவற்றையும் உட்கொள்ளும்.

About The Author