இராமருக்கு அருளிய ஆதி ஜெகந்நாதர்

புதிதாக வீடு கட்டும்போது கட்டட சாமான்களைப் போட்டு வைப்பதற்காகத் தற்காலிகக் குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும்போது அந்த இடத்திற்குரியவரிடம் அதற்கான அனுமதியைக் கேட்போமில்லையா? அது போல சீதையை மீட்கக் கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர், கடலரசனிடம் கடல் அலைகளின் சீற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாகக் கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார்.

அப்படி இராமர் சயனித்திருந்த தலம் ‘திருப்புல்லணை’ என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவி ‘திருப்புல்லாணி’ என்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர் ‘தர்ப்பசயனம்’ என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம் – புல்; சயனம் – உறங்குதல். தமிழ்நாட்டில் இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகந்நாத பெருமாள். பஞ்சதரிசனத் தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகந்நாதர் இங்கு முழுமையாகக் காட்சி தருவதால் இத்தலம் ‘தட்சிண ஜெகந்நாதம்’ என்று அழைக்கப்படுகிறது.
72 சதுர் யுகங்களுக்கு முன் புல்லவர், காலவர், கண்ணவர் என்ற மூன்று மகரிஷிகளும் தர்ப்பைப் புல் நிரம்பி இருந்த இத்தலத்தில் அமர்ந்து கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகமகிழ்ந்த பெருமாள், அரசமரமாக அவர்கள் முன் காட்சி கொடுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அம்மகரிஷிகள், பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்ட, அவர்களின் விருப்பத்தை ஏற்று அசுவத்த நாராயணனாய் அமர்ந்து காட்சி கொடுத்தார். அதனால் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் ‘ஆதிப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார்.

சீதையை மீட்கச் சென்ற இராமர் தனக்கு அருளும்படி இப்பெருமாளை வேண்டி நிற்க, அவரின் யோசனைப்படியே, வருணன் மூலம் கடலை வற்றச் செய்வதை விட சேது பந்தனம் (சேது அணை) அமைப்பது மேல் என்று முடிவு செய்து, கட்டப்பட்டது. அதோடு, அப்பொழுது அவர் அளித்த ஒரு பாணம் (வில்) மூலம்தான் இராமர் இராவணனை அழித்தார். இப்படி இராமருக்கு வெற்றி தேடிக் கொடுத்த ஜெகந்நாதரை வேண்டிச் செய்யும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பதால் இவருக்கு ‘வெற்றிப் பெருமாள்’ எனும் பெயரும், இராமர் வணங்கி வழிபட்டதால் ‘பெரிய பெருமாள்’ எனும் பெயரும் உண்டு. தவிர, இத்தலத்தில் உள்ள பெருமாளும், அவருடைய தேவியாரும், ஆலயத்தின் விமானமும் கல்யாணம் எனும் மங்கலத் திருப்பெயரைத் தாங்கி இருப்பதால் இவருக்கு ‘ஸ்ரீ கல்யாண ஜெகந்நாதர்’ என்கிற சிறப்புப் பெயருமுண்டு.

"மரங்களில் நான் அரசமரமாய் இருக்கிறேன்" என்று கண்ணன் கூறியதைப் போல இத்தலத்தில் உள்ள விருட்சம் அரசமரம் (அஸ்வத்த விருட்சம்). இத்தலமரத்திற்கு வடக்கே சற்று தூரத்தில் நாகச் சிலைகளுடன் கூடிய பெரிய மேடை அமைந்துள்ளது. ஆரம்பத்தில் தலமரம் இங்குதான் இருந்ததாகவும் பின் தானாகவே கிளைகளைத் தாழ்த்தி, மண்ணில் புதைந்து தற்போது இருக்கும் இடத்திற்கு அது நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது!

புத்திரபாக்கியம் வேண்டி வந்த தசரதர் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி, அந்த யாககுண்டத்திலிருந்து வந்த பாயசத்தைத் தன் மனைவியருக்கு வழங்க, அவர்கள் கருவுற்றனர் என்பது ஐதீகம். புத்திரபாக்கியத்திற்கான மூல மந்திரத்தைப் பெருமாள் தசரதனுக்கு உபதேசித்த தலமான இங்கு தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் உள்ளது. இத்தலத்தில் நாகலிங்கப் பிரதிஷ்டை செய்து நிவேதனம் செய்த பால் பாயசத்தை அருந்தினால் புத்திரபேறு கிடைக்கும் என்ற ஐதீகம் இன்றும் பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.

தலபுராணமோ தலமரத்திற்கு வேறு கதை சொல்கிறது. தொடக்கக் காலத்தில் படைப்புத் தொழிலைப் பரந்தாமனே செய்து வந்தாராம். அவரே முதன் முதலில் பிரம்மா, நவ பிரஜாபதிகள், இந்திரன் ஆகியோரைப் படைத்து, பின் படைப்புத் தொழிலை பிரம்மாவிடம் அளித்தாராம். பிரம்மா தன் படைப்புத் தொழிலைச் செய்வதற்காகத் தென்திசை நோக்கி வருகையில் பேரொளிப் பிழம்பு ஒன்று தோன்றி அதே நொடியிலேயே மறைவதைக் கண்டு அது பற்றிக் கேட்டபோது "அது ‘போத ஸ்வரூபமான மரம்’; அதாவது, அரச மரம்; அதன் நிழலில்தான் ஜெகந்நாதர் தங்கி வருகிறார்” என்று அசரிரி வழி பதில் கிடைத்ததாம்.

இத்தலத்தில், அமர்ந்த கோலம் (ஆதி ஜெகந்நாதர்), சயனக்கோலம் (ஸ்ரீ தர்ப்பசயன இராமர்), நின்ற கோலம் (ஸ்ரீ பட்டாபி இராமர்) என மூன்று கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். மூலவர்கள் மூவருக்கும் தனித் தனி ஆலயங்கள் உள்ளன. மூலவர் ஜெகந்நாதர் கல்யாணவல்லி, பத்மாசனித் தாயாருடன் காட்சி தருகிறார். ஸ்வஸ்திக விமானம், கல்யாண விமானம், புஷ்பக விமானம் என விமானங்களால் சிறந்து விளங்கும் இத்தலத்தில் புராதனக் கோயில்களில் மட்டும் காணக்கூடிய வகையில் மகாலட்சுமியை மடியில் இருத்தி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இவருக்கு பக்தர்கள் சந்தனக் காப்பிட்டு வழிபடுகின்றனர். நாகத்தின் மீது நடனமாடும் ஸ்ரீ சந்தானக் கண்ணன் இன்னுமொரு சிறப்பு.

இத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் இராமேஸ்வர யாத்திரையில் முக்கியமான ‘சேதுக்கரை’ என்கிற தலம் அமைந்துள்ளது. சேது என்றால் அணை என்று பொருள். அணை கட்டிய இடத்தில் உள்ள ஊர் என்பதால் சேதுக்கரை என்று பெயர் பெற்றது. இங்கு அணை கட்டும் சமயத்தில்தான் தனக்கு கைங்கர்யம் செய்த அணில்களை முதுகில் இராமர் தன் திருக்கைகளினால் தடவிப் பாராட்டினாராம். முன்பு இராமேஸ்வரத்தோடு இணைந்திருந்த இப்பகுதி, பின் கடல்கோளால் (tsunami) அதிலிருந்து பிரிக்கப்பட்டது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தீர்த்தம் ‘ரத்னாகரத் தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமைகளை ஒருங்கே கொண்டிருப்பது இத்தலத்தின் மற்றும் ஒரு சிறப்பாகும்.

சேதுவின் கரையைக் கொண்ட பிரதேசத்தை ஆண்ட இப்பகுதி மன்னர்கள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சி செய்தபோது பரராஜசேகர மன்னர் காலத்தில்தான் ஆதி ஜெகந்நாத பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அதன் காலம் சரியாக அறியப்படவில்லை. அதன் பின் 17ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கிழவன் சேதுபதி மற்றும் விஜயரகுநாத சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி ஆகியோரால் இக்கோயிலுக்கென ஊர்களும், உதவிகளும் வழங்கப்பட்டன. இக்கோயிலுக்கெனப் பல உப்பளங்கள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் மூழ்கி எடுக்கப்படும் முத்துக்குளியலில் ஒரு பங்கு இவ்வாலயத்திற்கு உரியது.
திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்திற்கு வந்து 20 பாசுரங்களை எம்பெருமான் மீது பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி ஆகியோர் கீர்த்தனைகளிலும், திருஞான சம்பந்தர், அப்பர் ஆகியோர் தத்தமது தேவாரப் பதிகங்களிலும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். ஆண்டாளும், திருமாழிசையில் சேதுவைப் பாடி உள்ளார்.

108 திவ்ய தேசங்களில் 96ஆவது திவ்ய தேசமாகவும், பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் நான்காவது திவ்ய தேசமாகவும் திகழும் இத்தலம் தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமைகளையும் உடையது. இராமபிரானின் திருவடிகளில் தன் மனைவியோடு கடலரசனும், அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரோடு வீடணனும், இராவணனால் வேவு பார்க்க அனுப்பப்பட்ட சுகன், சாரணன் ஆகியோரும் சரணடைந்த தலம் என்பதால் இத்தலம் சரணாகதித் தலமாகவும் திகழ்கிறது.

நாமும் இவர்களைப் போல சரணடைந்து, இராமனுக்கு அருளிய ஆதி ஜெகந்நாதரை வேண்டி, துன்பங்கள் நீங்கி வெற்றி பெற ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று வரலாமே!

About The Author