என்.எஸ்.கே – ஒரு சகாப்தம் (2)

காந்தி பக்தி

காந்திமேல அவருக்கு ரொம்ப பக்தி. வில்லுப் பாட்டு பாடினது மட்டுமல்லாது நாகர்கோவில்ல அவருக்காக மணிமண்டபம் கட்டினார். அவர் அறையிலே காந்தியோட சிலையும் படமும் இருக்கும். அவர் நடிக்கும் படங்கள்ல காந்தி பத்திப் பாட்டு இருக்கும்

ஒருமுறை ரஷ்யா போனப்போ காந்தி பற்றி இவர் பேசினதை அவங்க மொழி பெயர்க்காததினால் உண்ணாவிரதம் இருந்தார். கூடப் போன டைரக்டர் கே.சுப்ரமண்யம் கூட, "வேண்டாம், கிருஷ்ணா, இது கம்யூனிஸ்ட் நாடு. சுட்டாக்கூட ஏன்னு கேக்க முடியாது" என்று சொன்னாலும் பிடிவாதமாக உண்ணாவிரதமிருந்தார். அப்புறம் தூதரகத்தில் பேசி அவர்கள் மொழிபெயர்க்க ஒத்துக் கொண்டார்கள் அப்புறம்தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

ரஷ்யாவைத் தவிர வேறெந்த நாடுகளுக்குப் போயிருக்கிறார்?

சிலோன் மட்டும்தான் போனார். அப்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு இப்போதுபோல போக முடியாது. ரஷ்யாவிலேருந்து கலைஞர்கள் வந்தப்போ அவங்களுக்கு இங்க பெரிய விருந்து வைச்சார்.

மதுரம் பற்றி சொல்லுங்களேன்!

அப்பா செஞ்ச எல்லாக் காரியங்களுக்கும் ரொம்ப உதவியாயிருந்தாங்க அம்மா. அவர் என்ன உதவி யாருக்கு செஞ்சாலும் அவங்க தடையாய் இருக்க மாட்டாங்க. அப்பா நடிக்கிறதோட சரி, வீடு, பண விவகாரம் எல்லாத்தையும் அவங்கதான் பாத்துப்பாங்க. அப்பா ஜெயில்ல இருந்தபோது அவங்கதான் முழு மூச்சாய் முயற்சி செய்து அவங்களை வெளில கொண்டுவர பாடுபட்டாங்க. அவரோட விடாமுயற்சியாலதான் அப்பாவை வெளியில் கொண்டுவந்தாங்க.

உங்கள் அப்பாவிடம் உங்களைக் கவர்ந்த வேறு விஷயங்கள்

அவரது மனிதநேயம்தான். ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார். பாண்டி பஜார்ல ஒரு பெரிய ஹோட்டல். அதில அப்பா சீட்டு வாங்கி வச்சுட்டு வீட்டுக்கு வர்ற பிச்சைக்காரங்க, குறவர்கள் என்று எல்லாருக்கும் கொடுத்துவிடுவார், அந்த ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக. அந்த ஹோட்டல் முதலாளி கூட, ‘என்னங்க! இப்படி எல்லாரையும் அனுப்பறீங்க’ன்னு கேப்பார். அப்பா, ‘ஆமாம், அதுக்குத்தானே நீ ஹோட்டல் வச்சுருக்கே’ என்று சொல்லிவிடுவார். அவரது டிரைவர் 25 வருஷம் தொடர்ந்து விபத்தில்லாமல் கார் ஓட்டியதற்காக வாணி மகாலில் ஒரு விழா எடுத்தார். அப்போ அவருக்கு 25 பவுனும் பண முடிப்பும் கொடுத்தார். டிரைவருக்குப் பாராட்டு விழா நடத்தினது இவர் ஒருத்தர்தான். பல நடிகர் நடிகைகள் கல்யாணத்திற்கெல்லாம் நிறையப் பணம் கொடுப்பாரு. அப்பா கையில் காசில்லாத கஷ்ட நேரத்தில் கூட அம்மா அந்தக் கஷ்டம் அப்பாவுக்குத் தெரியாம பாத்துப்பாங்க.

அப்பாவுக்கு சினிமாவுல எல்லா விஷயமும் தெரியும். காமரா, எடிட்டிங், இசைன்னு எல்லாம் தெரியும். அப்பாகிட்ட பதிமூணு கார் இருந்தது. பாக்கார்ட்ங்கிற வெளிநாட்டுக் கார் மூணுபேர்கிட்டதான் இந்தியாவிலேயே இருந்தது. ஒன்னு டாட்டா கிட்ட. இன்னொன்னு காஷ்மீர் மகாராஜா கிட்ட மூணாவது அப்பாகிட்ட. ஆனா கடைசியில அவர் இறந்தப்போ அவர்கிட்ட ஒரே ஒரு கார்தான் இருந்தது..

அப்பா உங்ககிட்ட கோபப்பட்டிருக்காரா?

கோபப்படவே மாட்டார். என் தம்பி பெரிய வால். அவன் இப்போ இல்லை. ஒரு நாள் அவன் என்னை அடிச்சுட்டான். அதனால கோபப்பட்டு அப்பா அவனை அடிச்சுட்டார். அதைத் தவிர, அவர் கோபப்பட்டு பார்த்ததே கிடையாது.

என் தம்பி ரொம்பப் படுத்துவான். அப்பா அவன்கிட்டா ‘ராதா ( எம். ஆர். ராதா) வரார் பாரு’ என்று சொன்னால் கப்சிப்பென்று அடங்கிவிடுவான். அவர்கிட்ட மட்டும்தான் அவனுக்கு பயம்

பெற்ற விருதுகள்

கலைவாணர்ங்கிற பட்டத்தைத் தவிர வேற ஒன்னும் வாங்கலை. அந்தப் பட்டம் பம்மல் சம்பந்த முதலியார்தான் கொடுத்தார். என்னுடைய சகோதரி திருமணம் பாலர் அரங்கில் நடந்தபோதுதான் இன்று முதல் பாலர் அரங்கம் கலைவாணர் அரங்கம்னு அழைக்கப்படும்னு அறிவிச்சாங்க

அப்பாவின் நினைவில்

அப்பா நினைவாக போட்டோக்கள், அவரது கையெழுத்தில் கடிதங்கள் இருக்கிறதா?

‘நிறையப் பேர் கேட்டு வாங்கிட்டுப் போனாங்க. திரும்பக் கிடைக்கவே இல்லை. இப்போது எங்களிடமே ஒண்ணுமில்லை’.

அவர்கள் சொன்ன மேலும் சில சுவாரசியமான செய்திகள்

கருணாநிதி அவர்களுக்கு முதலில் பியட் கார் ஒன்றை பெட்ரோல் நிரப்பிப் பரிசாகக் கொடுத்தது என். எஸ்.கே தான்.

என்.எஸ்.கே இறப்பதற்கு முன் கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி, அண்ணாவின் உருவப்படத்தைத் திறந்தது வைத்ததுதான்.

தர்மம் தலை காக்கும் என்பார்கள். அவர் செய்த தர்மம்தான் எங்களை இன்று இந்த நல்ல நிலையில் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். சகோதரிகள். திருமதி பத்மினியின் பெண் அனு (டைரக்டர் விஷ்ணுவர்தனின் துணைவி) சிறு வயதாய் இருந்த போது தாத்தா பற்றிக் கேட்பாராம். அப்போது திருமதி பத்மினி தன் பெண்ணிற்காக அப்பா பற்றி எழுதிய கவிதை

கொடுத்துக் கொடுத்து சிவந்ததாமே என் தாத்தாவின் கை
உனக்கு என்ன கொடுத்தார் என்றாள் என் மழலை
ஸ்ரீதேவியை அள்ளிக் கொடுத்தார் இல்லாதவர்க்கு என் கண்ணே
அதன் அருளால் சரஸ்வதியை எங்கள் நாவில் வைத்தார் என் கண்ணே
நிலையானது கல்விச் செல்வம் என்று நினைத்தாரோ உன் தாத்தா
நிலையில்லாத பொருட் செல்வம் நமக்கெதற்கு என்று பிரிந்தாரோ உன் தாத்தா?

‘மணமகள்’ படத்தில் நடித்தபோது பிறந்தவர் இந்த பத்மினி. (மருத்துவராகப் பணி புரிகிறார்) அப்போது அந்தப் படத்தில் நடித்த நடிகை பத்மினி தன் பெயரை குழந்தைக்கு வைக்கும்படி சொன்னாராம். ‘நல்ல தம்பி’ படத்தின்போது பிறந்த ஆண் குழந்தைக்கு நல்ல தம்பி என்று பெயர் வைத்தார்.

மனிதநேயம், நாட்டுப் பற்று, நாட்டின் அறிவியல் முன்னேற்றம் பற்றிய கனவு, இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் பண்பு, நகைச்சுவை உணர்வு எல்லாம் கலந்த மொத்த உருவம்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரது 102 வது பிறந்த நாள் நவம்பர் 29.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள்ளளவும் அவர் புகழ் நீடித்து நிற்கும்.

About The Author

3 Comments

 1. கீதா

  வள்ளன்மையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த என்.எஸ்.கே அவர்கள் சர்வநிச்சயமாய் ஒரு மாபெரும் சகாப்தம்தான். அவரது மகள் எழுதிய பாடல் மனதைத் தொடுகிறது. அவரைப் பற்றி அரிய விவரங்களைத் தொகுத்து வழங்கிய டி.எஸ்.பத்மநாபன் சாருக்கு நன்றி.

 2. S.M.Guptha

  This is an excellent-informative article. I read many articles about NSK but I could not get such valuable informaton. Many many thanks to Thiru Padmanabhan. S.M.Guptha

 3. Mannai Pasanthy

  சிலரை பார்த்தால்தான் சிரிப்பு வரும். சிலர் பேசினாலே சிரிப்பு வரும்.
  என்.எச்.கே அவர்களை நினைத்தாலே சிரிப்பு வரும்
  அன்பர் பத்மனாபன் அவர்களுக்கு மிக்க நன்றி.
  மன்னை பாசந்தி

Comments are closed.