எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் நேர்காணல் (4)

13) நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் உங்களுடைய படைப்பு எது?

என்னுடைய "முதல் பகல்" நாவல்.

14) உங்களுடைய எழுத்துக்களின் தனித்துவமாக நீங்கள் கருதுவது…

இரண்டு விஷயங்களை என்னுடைய தனித்துவங்களாகக் கருதுகிறேன். ஒன்று, சின்னச் சின்ன உரையாடல்களான "கட் டயலாக்ஸ்". ஒரு விஷயத்தை, விரிவாகச் சொல்லாமல் எளிமையான சின்னச் சின்ன உரையாடல்களின் உதவியுடன் சொல்லும்போது, அந்தக் கதையைப் படிக்கும்போது கதை நம் கண் எதிரில் நிகழ்வதைப் போல நமக்குத் தோன்றும். இது படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதோடு கதையில் அவர்கள் ஒன்றிட உதவுகிறது. இரண்டாவதாக, என்னுடைய கதைகளில் எப்போதும் மூன்று விதமான தடங்களில் செல்வதுபோல் கதை எழுதப்பட்டிருக்கும். ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாதது போல் தோன்றினாலும் கடைசி அத்தியாயங்களில் அவற்றுக்கிடையே இருக்கும் சம்பந்தம் வெளிப்படும். இந்த இரண்டு விஷயங்களை என்னுடைய பாணி அல்லது எழுத்துக்களின் தனித்துவமாகச் சொல்லலாம்.

15) உங்கள் எழுத்துக்களுக்குக் கிடைத்த பெருமை மிக்கப் பாராட்டாக நீங்கள் கருதுவது…

ஜேசீஸ், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற பல அமைப்புகள் என்னைப் பாராட்டி விருதுகள் வழங்கியிருக்கிறார்கள். கடந்த வருடம் எனக்குத் தமிழக அரசு "கலைமாமணி விருது" வழங்கியது. இவை எல்லாவற்றையும் விட, என்னுடைய கதையைப் படித்து, அது நன்றாக இருப்பதைத் தெரிவிப்பதற்காக ஒரு போஸ்ட் கார்டின் வாயிலாக (ஒரு முழுமையான கடிதமாக இல்லாதபோதும்) தன்னுடைய அன்பைத் தெரியப்படுத்த விரும்பி எழுதி அனுப்பும் ஒரு கிராம இளைஞனின் பாராட்டை எனக்குக் கிடைக்கக் கூடிய பெருமை மிக்கப் பாராட்டாக நினைக்கிறேன். 

16) திரில்லர் அல்லாது நீங்கள் எழுத விரும்பும் கதைக்களம் எது?

ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருப்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது சில காலமாகவே எனக்கு வேறுவிதமாக எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவருகிறது. கடவுள் நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் இடையே அவசியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு சமூகம் நல்ல முறையில் இருக்கும். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஆன்மிகம் பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. ஆன்மிகம் பற்றிய உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சமீபத்தில் சித்தர்கள் பற்றிய கட்டுரைகள் நிறைந்த புத்தகம் ஒன்றை நான் எழுதினேன். ஒரு மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைப் பல பாட்டுக்களில் சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சித்தர்கள் வெறும் பித்தர்கள், வாய்க்கு வந்ததை அவர்கள் பாடியிருக்கிறார்கள், அவற்றில் எதுவும் இல்லை என்று தவறாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. சித்தர்கள், சொல்ல விரும்பிய விஷயங்கள் தவறான மனிதர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, மறைமுகமாகத் தங்களுடைய பாடல்களின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள். இவை கடவுளுடைய ஞானத்தையும், அறிவையும் பெற்றவர்களுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே புரியவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். சித்தர்கள் சொல்லிய நல்ல விஷயங்கள் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு "சித்தர்கள் பித்தர்களா?" என்ற தலைப்பில் என்னுடைய பாணியில் எழுதினேன். இப்புத்தகத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்புத்தகத்தைப் பாராட்டிப் பல எழுத்தாளர்களும் மதிப்புரை எழுதியுள்ளார்கள். சில கிரைம் நாவல்களுக்கிடையே ஒரு ஆன்மிகப் புத்தகம் எழுதும் விருப்பம் எனக்கிருக்கிறது. 

17) மற்ற எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிப்பதுண்டா? யாருடைய எழுத்து உங்களைப் பாதித்துள்ளது? எவ்வகையில்?

முதலில் நிறைய படித்துக்கொண்டிருந்தேன். யார் என்ன எழுதுகிறார்கள், மற்றவர்கள் எழுதும் பாணியில் நானும் எழுதுகிறேனா என்று அறிந்து கொள்ள முன்பு நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது நேரமின்மை காரணமாக என்னால் படிக்க முடிவதில்லை. ஆனால், அன்றும் இன்றும் என்றும் எனக்குப் பிடித்த எழுத்தாளர் திரு.தி.ஜானகிராமன் அவர்கள். அவர் எழுதிய "அம்மா வந்தாள்" நாவல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எழுத்தாளர் சாவி அவர்களின் எழுத்துக்களில் ஒரு விதமான கேலியும் கிண்டலும் நிறைந்து இருக்கும். அவருடைய எழுத்துக்களும் எனக்குப் பிடிக்கும். 

18) கதை, நாவல்கள் எழுதும்போது உங்களுக்கேற்படும் உணர்வுகள் பற்றிச் சொல்ல முடியுமா?

ஒரு கதை எழுதும்போது இந்தக் கதை, வாசகர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்டுள்ளதா என்பதைப் பலமுறை உறுதி செய்து கொள்வேன். ஒரு பத்திரிக்கையில் வெளியாகும் கதை சரியாக இல்லாதபோது, "இந்தப் பத்திரிக்கையில் இப்படி ஒரு கதையா!" என்று சொல்லமாட்டார்கள். "என்ன ராஜேஷ்குமார் இப்படி ஒரு கதையை எழுதியிருக்கிறார்!" என்றுதான் சொல்வார்கள். கதையைப் பற்றிய கெட்ட பெயரோ நல்ல பெயரோ அது எழுத்தாளரையே வந்து சேரும். அதுபோல யாரும் குறை சொல்லிவிடக்கூடாது என்பது மட்டுமில்லாமல் இந்தக் கதையின் மூலமாக ஒரு நல்ல செய்தியை வாசகர்களுக்குச் சொல்லவேண்டும் என்று கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு பலமுறை யோசித்து, பின்பு எழுதத் தொடங்குவேன்.

19) வாசகர்கள் உங்களுடைய கதைகளில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? உங்களுடைய ரசிகர்களின் பாராட்டுக்கள், விமர்சனங்கள் பற்றி உங்கள் பார்வையில்…

இதுவரை வாசகர்கள் தொலைபேசியிலோ நேரிலோ கடிதத்திலோ என்னுடைய கதைகளைப் பற்றிக் கோபமாகத் திட்டி விமரிசித்ததில்லை. ஒன்றைவிட ஒன்று நன்றாக உள்ளது என்றே பாராட்டியுள்ளார்கள். அறிவியல், ராணுவம், பொது அறிவு சம்பந்தமான கதைகளை எங்களுக்காக எழுதுங்கள் என்றே வாசகர்கள் கேட்கிறார்கள். சில நேரங்களில், "எங்களுடைய கிராமத்தில் இப்படிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை வைத்து நீங்கள் ஒரு கதை எழுதலாமே; இன்றைய பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்துள்ளது இதை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுங்களேன்" என்று சொல்பவர்களும் உண்டு. வாசகர்கள் மட்டுமில்லாது பல நண்பர்களும் எழுத்தாளர்களும், "இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் கதை எழுதினால் நன்றாக இருக்கும்" என்றும் சொல்வதுண்டு. சில நேரங்களில், எனக்கு வாசகர்கள் தலைப்புகளையும் எழுதி அனுப்புவார்கள். 

20) உங்களுடைய வெற்றியின் ரகசியமாக நீங்கள் கருதுவது?

என்னுடைய வெற்றியின் ரகசியமாக நான் கருதுவது என்னுடைய கடின உழைப்பு. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் கடின உழைப்போடும் பாடுபட்டால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். ஒரு தொழிலில் லாபம் இல்லை என்றால் அதில் சரியான உழைப்பு இல்லை என்றுதான் அர்த்தமாகிறது. எழுத்தாளருக்குப் பொறுமை மிகவும் அவசியம். ஓர் இடத்தில் உட்கார்ந்து பேப்பர், பேனாவை வைத்துக் கொண்டு ஒரு கதையை எழுதுவதற்கு அளவிற்கு மீறிய பொறுமை வேண்டும். அதே போல், கிணற்றுத் தவளையாக இல்லாமல் நடப்பில் நடைபெறும் புதுப்புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதின் மூலம் பலவகையான வித்தியாசமான கதைகளை எழுத முடியும்.

21) தமிழ் இலக்கியத்தின், எழுத்துலகின் எதிர்காலம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

புத்தகம் என்ற ஒன்று வருங்காலத்தில் இருக்குமா என்ற சந்தேகம் எனக்குப் பலமுறை தோன்றுவதுண்டு. ஏனென்றால், இப்போது எல்லோருமே எல்லாவற்றிற்கும் இணையத்தளத்தையே நாடுகிறார்கள். நொடிகளில் நமக்கு வேண்டிய பல விவரங்கள் நம்முடைய விரல் நுனிகளில் கிடைக்கின்றன. கைப்பேசிகளில் கதைகளைப் படிக்கிறார்கள். அமெரிக்காவில், புத்தகம் பிரசுரிப்பது பாதிக்கு மேல் குறைந்துவிட்டது என்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன். என்னதான் விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்தாலும், இன்னமும் ஒரு கதையைப் புத்தகத்தில் படிக்கும்போது கிடைக்கும் ஒரு திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்கிறார்கள். அதனாலேயே இன்னமும் புத்தகங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன; இன்னமும் உயிர் வாழும் என்கின்றனர். ஆனால், முன்பு போல் புத்தகங்கள் விற்பனையாவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

22) எழுத்தாளர்களின் படைப்புகளின் அடிப்படையில் அவர்களை உருவகப்படுத்துவது சரியா?

எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் உருவகப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் கிரைம் மற்றும் சமூக நாவல்களை எழுதியுள்ளேன். ஆன்மிகக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கடவுள் பக்தியைக் கொண்டு நிறைய கதைகளை எழுதியுள்ளேன். நான் எழுதிய கதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தவை சமூக நாவல்களே. சரித்திரக் கதையும் நான் எழுதியிருக்கிறேன். அந்தக் கதையைப் படித்து எழுத்தாளர் கோவை.மணிசேகரன் என்னை மிகவும் பாராட்டியிருந்தார். கிரைம் கதைகளைப் பத்திரிக்கை ஆசிரியர்கள் விரும்பிக் கேட்பதால் எழுதுகிறேன். அதனால் எனக்கே தெரியாமல் கிரைம் கதைகளின் மன்னன் என்கிற முத்திரை எனக்கு வந்துவிட்டது. அது சரியான முத்திரை கிடையாது. நடிகர் ரஜினிகாந்த் பல வேடங்களில் நடித்தாலும் அவருடைய ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவரை "ஸ்டைல் மன்னன்" என்றே அழைக்கின்றனர். அதேபோல் என்னுடைய கிரைம் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற ஒரு சின்ன வட்டத்துக்குள் வருவதை நான் விரும்பவில்லை. “

About The Author