ஏகசிலா நகரம்

இசை என்றால் எனக்கு ரொம்ப உயிர். என் சகோதரி திருமதி.கல்யாணி அன்னமாச்சார்யர் பாடல்களில் பலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பாடிக் கேசட்டுகளும் வெளியிட்டாள். அன்றைய தினத்திலிருந்து எனக்கு மகான் அன்னமாச்சார்யர் பிறந்த இடத்தைப் பார்க்க ஆவலாக இருந்தது. என் சகோதரி ஹைதராபாத்தில் இருந்ததால் எனக்கு அந்தப் பக்கம் போக வாய்ப்புக் கிடைத்தது. அப்போது நான் கண்ட இடம்தான் ‘ஏகசிலா நகரம்’!

ஆந்திராவில், கடப்பாவிலிருந்து திருப்பதி செல்லும் பாதையில் சுமார் 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது இந்தத் திருத்தலம். ஆனால், தற்போது அதன் பெயர் ‘ஒண்டிமிட்டா’. இந்த இடம் திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று மூன்று யுகங்களும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் கடைசியில், கலியுகத்தில் ‘ஒண்டன், மிட்டன்’ என்ற சகோதரர்கள் பெயரால் ‘ஒண்டிமிட்டா’ எனப் பெயர் பெற்றிருக்கிறது.

திரேதாயுகத்தில், மிருகண்டு மகரிஷி ஒரு யாகம் ஆரம்பித்தார். அவருடன் சேர்ந்து மேலும் ரிஷிகள் பலர் அதில் பங்குபெற்றனர். ஆனால், வழக்கம் போல் அரக்கர் தொல்லை தாங்க முடியவில்லை. யாகத்தைத் தடங்கல் இல்லாமல் முடிக்க ஸ்ரீராமரை வேண்டினார்கள் மகரிஷிகள். ஸ்ரீராமரும் சீதை, லக்ஷ்மணருடன் வந்து அரக்கர்களை அழித்தார். பின், அவர்களுக்கு அருளினார்.

அடுத்ததாக துவாபரயுகம். ஜாம்பவான் இந்த இடம் வந்தபோது ஸ்ரீராமர் சீதா, லக்ஷ்மண சகிதமாகக் காட்சி அளித்ததை அறிந்தார். அவர்களுக்குப் பூஜை செய்ய ஒரே கல்லைக்கொண்டு மூன்று பேர்களுக்கும் சிலைகள் அமைத்தார். பின் அதற்குப் பிராணப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க ஆரம்பித்தார்.

அடுத்து வருவது கலியுகம். கலியுக ஆரம்பத்தில் ஒண்டன், மிட்டன் என்ற இரு திருடர்கள் வாழ்ந்தனர். இருவரும் சகோதரர்கள். அவர்கள் அவ்வப்போது திருடிய பொன் ஆபரணங்களை மறைத்து வைக்க ஒரு நல்ல இடம் தேடினர். அப்போது அவர்களுக்கு ஒரு குகை தென்பட்டது. குகையில் இருந்த சுவரில் ஒரு பெரிய குழி இருக்க, அந்தப் பொந்தில் எல்லாவற்றையும் ஒளித்து வைத்தனர். சில நாட்களுக்குப் பிறகு குகைக்கு வந்தனர். உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் உடம்பு சிலிர்த்தது. ஒரு பேரொளி தோன்றியது. அதில் ஸ்ரீராம, லக்ஷ்மண, சீதா தேவி தெரிந்தனர். விக்ரக ரூபமாகக் காட்சியளித்தனர். திடீரென்று மனதைக் கௌவும் தெய்விகக் குரல் கேட்டது. அதில் பல உபதேசங்கள் இருந்தன. உடனே ஒண்டன் சொன்னான், "தம்பி! இத்தனை நாட்கள் என்ன பாப காரியம் செய்திருக்கிறோம்! இனி இந்தத் தொழிலை விட்டுவிட வேண்டும்" என்றான்.

"ஆம் அண்ணா! அன்பால் சேவையினால் மற்றவர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள வேண்டும். நாம் பொருட்களையல்லவா கொள்ளை அடித்தோம்! மிகவும் வருந்துகிறேன் அண்ணா!" என்றான் தம்பி மிட்டனும்.

இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ஆனது. கிடைத்த சிலைகளை அழகுபடுத்தி ஒரு கருவறை எழுப்பி அதில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிலிருந்து ஏகசிலா நகரம் ‘ஒண்டிமிட்டா’ ஆனது.

இனி கோயிலில் வலம் வருவோம்! கோயிலில் அநேகச் சிற்பங்கள் சோழர் பாணியில் கட்டப்பட்டு அழகு மிளிர்கின்றன. உள்ளே மண்டபத்தில், தெலுங்கில் அழகான இசை. ஸ்ரீ அன்னமாச்சார்யரின் கீர்த்தனைகள் தென்றலில் கலந்து காதில் விழுகின்றன. முதலில், சின்னக் கோயிலாக இருந்தது. பின்னால், சோழர் இதனுடைய மகத்துவம் தெரிந்து விரிவுபடுத்தினர். ஆலயத்தில் பல சிற்பங்கள் உள்ளன. தசாவதாரம், மகாபாரதக் காட்சிகள், காளிங்க நர்த்தனம், சேது பந்தனம், சீதா கல்யாணம் போன்ற பல சித்திரங்கள் மனதை அள்ளுகின்றன. கருவறையில் ஸ்ரீராமர் கோதண்டராமராக வலது கையில் ராமபாணத்துடன் ஆசி வழங்குகிறார். அவர் முகத்தின் அழகு சொல்ல இயலாது. அருகில் அருள்மிகு சீதாபிராட்டியும், தம்பி லக்ஷ்மணரும் அருள்பாலிக்கின்றனர். ஆஞ்சநேயருக்கும் தனி சன்னிதி உண்டு. அத்துடன், ஆதிசேஷன் குடைபிடிக்க ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாராயணமூர்த்தியையும் காணமுடிகிறது. முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராமநவமி மிகவும் விமரிசையாக நடத்தப்பெறுகிறது. இங்கு வந்தால் சத்ரு பயம் நீங்குமாம்.

கோயில் பற்றி இன்னொரு சிறப்புச் செய்தியும் சொல்லப்படுகிறது. நவாப் ஒருவர் கோட்டைக்குச் செல்லும் வழியில் இங்கு இளைப்பாற வந்தார். வந்த இடத்தில் இன்னும் சிலர் அமர்ந்து கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று இங்கு தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அதைக் கேட்டுக்கொண்டிருந்த நவாப், ஒரு கட்டத்தில் தேவஸ்தான வாயிலை மூடச் சென்றார். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

"ராம ராம ராம" என்ற ஒலி திடீரென்று எழுந்து எங்கும் வியாபித்தது. நவாப் வியந்து மெய்மறந்து நின்றார். பின், இந்தக் கோயிலுக்காக ஒரு கிணறு வெட்டிக் கொடுத்தார். இன்றும் அதிலிருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் நடக்கிறதாம். இது செவி வழியே விழுந்த செய்தி.

இந்த இடத்தின் அருகில்தான் ஸ்ரீ அன்னமாச்சார்யர் பிறந்த இடமான தாளப்பாக்கம் உள்ளது. அகோபிலம் போகும் பக்தர்கள் இந்தக் கோயில்களையும் தரிசித்து வரலாமே!

About The Author