ஒரு அடிமையின் கதை- 10

அடிமைகளை விற்க முடியாது என்று சொன்ன எங்கள் எஜமானர் வழக்கத்துக்கு மாறாக எங்களை நிறுத்தி அந்தப் புதிய ஆளிடம், "இவர்களைப் பாருங்கள்- நன்கு உழைக்கக் கூடியவர்கள்- முதல்தரமான அடிமைகள்- இவர்களை ஜார்ஜியாவில் விற்றால் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள்" என்று சொன்னார். அவருக்கு எங்களை நல்ல விலை வந்தால் விற்கலாம் என்பது எண்ணம்.

நோஞ்சானாக வெயிலில் உடல் கருத்திருந்த அந்தப் புது ஆள், ‘எனக்கு இரண்டு, வயதுக்கு வந்த பெண்கள் வேண்டும்- அவர்களுக்கு ஜார்ஜியாவில் என்ன விலை கிடைக்குமோ அதை நான் கொடுக்கிறேன்’ என்று சொன்னான். ஜார்ஜியாவில் கொலம்பியாவைவிட அதிக விலைக்கு அடிமைகளை விற்க முடியாது என்பது எனக்குத் தெரியும் என்றான் அவன். சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த எங்களை ஒருவர் ஒருவராகப் பார்த்து வந்த அவன் கண்கள் கருவுற்றிருந்த இரண்டு பெண்கள் மேல் விழுந்தன. அந்த இருவரில் ஒருத்திக்கு வயது 22. மற்றவருக்கு 19 வயது. ‘இவர்கள் தான் நீ கேட்ட மாதிரியான பெண்கள்- முதல் பெண்ணுக்கு ஏழு குழந்தைகள் – இரண்டாவது அடிமைக்கு மூன்று குழந்தைகள்’ என்று எங்கள் எஜமானர் கூறினார்,. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 1200 டாலர் விலை கிடைக்கும்- ஆனால் இவர்களால் எங்களுடன் தொடர்ந்து வர முடியாததால் இருவரையும் 1200 டாலருக்குக் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். . அவன் மறுக்க, எங்கள் எஜமானர் விலையைக் குறைக்க முடியாது என்று சொல்ல பேரம் தொடர்ந்தது. கடைசியாக அந்தப் பெண்கள் இருவரையும் அந்தப் புதிய ஆளிடம் 1000 டாலருக்கு விற்பது என்றும் அவன் அதற்குப் பதிலாக எங்களைப் பக்கத்திலுள்ள கொல்லன் பட்டறைக்கு அழைத்துச் சென்று எங்கள் சங்கிலிகளை விடுவிப்பதற்கான செலவை ஏற்கவேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார்கள். காலை ஒன்பது மணி ஆகிவிட்டதால் எங்களுக்கு அங்கே காலை உணவு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து கொல்லனின் இடம் பத்து மைல் தொலைவு என்றும் ஒப்புக் கொண்டபடி அந்தப் புதிய மனிதன் எங்களுடன் வருவான் என்றும் சொன்னார்கள். காலை உணவிற்குப் பிறகு பயணம் தொடர்ந்தது- கொல்லனின் இருப்பிடத்தை நோக்கி! எங்களைச் சங்கிலியிலிருந்து விடுவிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமே மகிழ்ச்சியாக இருந்தது. மதியம் இரண்டு மணி அளவில் நாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த அந்தக் கொல்லனின் வீட்டை அடைந்தோம். ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது கொல்லன் வீட்டில் இல்லை. அவர் திரும்பிவர மாலைப் பொழுதாகும் என்று சொன்னார்கள். மாலை வரை அங்கேயே தங்கியிருப்பதா, அல்லது பக்கத்தில் ஐந்துமைல் தூரத்தில் இருக்கும் இன்னொரு கொல்லன் வீட்டிற்குச் செல்வதா என்பது பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சண்டை சீக்கிரம் ஒரு முடிவிற்கு வரவில்லை. என் எஜமானர் மற்றும் அந்தப் புதிய மனிதன் இரண்டுபேருமே ஒருவரிடம் மேற்பார்வையாளராக இருந்து எஜமானராக ஆனவர்கள் . அந்தப் புதிய மனிதன் கோபமாகச் சொன்னான், " தெற்குக் கரோலினாவைச் சேர்ந்த சுதந்திர மனிதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது எங்கிருந்தோ பிழைக்க வந்தவர்கள் எங்களுக்குக் கட்டளையிட முடியாது. இப்படித்தான் ஒரு நெல் வயலில் மேற்பார்வையளராக இருந்தபோது மாரிலாந்திலிருந்து பிழைக்க வந்த இரண்டு அடிமைகள் தினமும் ஓடிப்போய் விடுவார்கள்- அவர்களுக்கு நூறு கசை அடிகள் ஒரு டசன் முறைக்கு மேல் நான் கொடுத்திருக்கிறேன். பின்னர் அவர்களை இணைத்து சங்கிலியால் கட்டி கழுத்தில் இரும்பு வளையமும் போட்டேன். அவர்கள் நகர முடியாதபடி ஒரு முளையில் கட்டி நீர் வடிவதற்காக அங்கிருந்த படியே பள்ளம் பறிக்கச் சொல்வேன். அவர்களால் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது- இப்படி இரண்டு வருஷங்கள் ஆனதும் ஒருவன் இறந்து விட்டான். இன்னொருவன் எதற்குமே லாயக்கிலாதவனாகி விட்டான்" என்று சொன்னான்.

பிறகு தான் விலைக்கு வாங்கிய அந்தப் பெண் அடிமைகளிடம் அவர்கள் தப்பித்துச் செல்ல முயற்சி செய்தால் அவர்களுக்கும் அதே கதிதான் என்று கடுமையாகச் சொன்னான். நானே மனம் வெறுத்திருந்த அந்த நிலையில் அந்தப் பெண்களின் நிலையைக் கண்டபோது ரத்தக் கண்னீர் வந்தது. புதியவனுக்கும் எங்கள் எஜமானருக்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்தபோது, அந்த இரும்புக் கொல்லனே தன்னுடைய மெலிந்த குதிரையில் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடான். அவன் தன் மனைவியிடம் ‘யார் இவர்கள்? இப்படிக் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களே? என வினவ அவள் என்ன பதில் சொன்னாள் என்பது தெரியவில்லை. அதற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரும் அந்தக் கொல்லனிடம் பேசினார்க்ள். அந்தப் புதியவன், சங்கிலிகளை எடுக்க என்ன விலையாகும்?’ என்று கேட்க எங்கள் எஜமானரோ. ‘எத்தனை நேரமாகும்?’ என்று கேட்டார்.

அந்தக் கொல்லன் சங்கிலிகளைக் கழட்ட இரண்டு டாலர் ஐம்பது சென்ட்டுகள் ஆகும் என்று சொல்லி தன் வேலையைத் துவங்கினான். அவனுக்குத் தன் வேலை முடிந்தால் சரி- மனிதத்தன்மையே இல்லாமல் ஏதோ குதிரையின் கால்களிலிருந்து பழைய லாடங்களைக் கழட்டுவதுபோலச் செயல் பட்டான். எங்களைச் சங்கிலியால் பிணைத்து ஒரு மாசத்திற்கு மேல் ஆகிவிட்டது- எனக்கு ஒன்றும் சங்கிலியிலிருந்து விடுபடுவதால் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. ‘இங்கிருந்து விடுபட்டு இன்னொரு மிருகத்திடம் மாட்டிக் கொள்ளப்போகிறேன். அதற்கான சடங்குதான் இது’ எனத் தோன்றியது. எங்கள் நிலைமை இப்போது, அந்தப் புதியவனிடம் மாட்டிக் கொண்டு தங்கள் உயிரையே எங்கள் எஜமானர் பெறும் 1000 டாலருக்காகப் பணயம் வைத்திருக்கும் அந்த இரு பெண்களைவிட எந்த நிலையிலும் நன்றாக இருக்கப் போவதில்லை. எங்களை விடுவித்தபிறகு அந்த சங்கிலியை ஏழு டாலருக்கு அந்தக் கொல்லனிடமே விற்றுவிட்டார் எங்கள் எஜமானர்.

எல்லாம் முடிந்த பிறகு அடிமைப் பெண்களை வாங்கியவன் அவர்களை மேற்குத் திசையில் அழைத்துச் சென்றான். போகும்போது பெண்கள் இருவரும் அழுது புலம்பினார்கள். இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று அரற்றினார்கள். நாங்கள் அனைவரும் அவர்களுக்கு விடை கொடுத்தோம். அவர்களது பாதை காட்டை நோக்கிச் சென்றது.

அவர்களைக் கடைசியாகப் பார்த்தது அதுதான். அப்புறம் அவர்களுக்கு என்ன ஆயிற்று என்றுகூட எங்களுக்குத் தெரியாது. இந்த இரண்டு பெண்களும் நான் வசித்த கால்வெர்ட் எனும் இடத்திலிருந்து அழைக்கப்பட்டு வந்தவர்கள். இளைய பெண்ணின் விதி மிகவும் கொடியது. அவள் ஒரு கனவானின் பெண்ணுக்கு வேலைக்காரியாக இருந்தாள். அந்தக் கனவானின் மனைவி என் மனைவி வேலை பார்த்து வந்த எஜமானியின் வீட்டிற்கு அடிக்கடி வருவாள். நான் அவளை சின்னப் பெண்ணாக இருந்தபோது அடிக்கடி பார்த்திருக்கிறேன். கனவானின் பெண் தந்தை இறந்தபிறகு ஒரு இளைஞனை மணந்தாள். அவனுக்கு மணப்பெண்ணோடு பொருளும் வந்து சேர்ந்தது- இதைவிட அந்த எஜமானியிடம் வேலைபார்த்த கருப்புப் பெண்ணும் போனசாகக் கிடைத்தாள். அவன் குதிரைப் பந்தயத்திற்கு அடிமையானவன். பயங்கரக் குடிகாரன். திருமணத்திற்குப் பின்னரும் அவன் திருந்தவில்லை. இன்னும் மோசமாகத்தான் நடந்து கொண்டான். அவன் மனைவி கணவனைப் பற்றிய சோகத்திலேயே இறந்துபோனாள். அவள் இறந்ததும் சொத்துக்கள் கடன்காரர்களுக்குப் போய்விட்டது. வேலை பார்த்து வந்த அடிமைப் பெண்ணை என் எஜமானர் 300 டாலருக்கு வாங்கிக் கொண்டார் . அந்தப் பெண்ணுக்குப் பல குழந்தைகள். சின்ன எஜமானியைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த அப்பாவிப்பெண் கணவனிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் பிரிக்கப்பட்டு என் எஜமானருடன் வர நேர்ந்தது. இப்போதோ அந்தப் பரிதாபமான பெண்மணி மனிதத்தன்மையே அற்ற ஒரு அரக்கனுடன் செல்லவேண்டிய சூழ்நிலை. !

மாலைப் பொழுதாகிவிட்டது. அன்று பூராவும் பயணம் முழுதும் தடைப்பட்டிருந்ததால் எங்களை துரிதமாக நடந்து வரச் சொன்னார் எஜமானர்- மேலும் இப்போது சங்கிலியில்லை- எங்கள் நடைக்கு வேகத்தடையாயிருந்த அந்தப் பெண்களும் இல்லை. இத்தனை நாள் சங்கிலியோடும் கழுத்தில் இரும்பு வளையத்தோடும் நடந்த எனக்கு இப்போது தடையேதும் இல்லாமல் சுதந்திரமாக நடப்பது புதிதாக இருந்தது. தலை ஏதோ லேசானது போல் இருந்தது. என்னுடன் கூட இருந்தவர்களும் அப்படியே கூறினார்கள். ஒருநாள் முழுத்தூக்கத்திற்குப் பிறகுதான் நாங்கள் வழக்கமான நிலையை அடைந்தோம்.
இரவில் ஒரு பருத்தித் தோட்டக்காரரின் வீட்டில் தங்கினோம். அவரும் எங்கள் எஜமானரும் ஏற்கெனவே பழக்கப்பட்டவர்கள் போலிருந்தது. நாங்கள் இருந்த இடம் என் எஜமானரும் அந்த நண்பரும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே இருந்ததால் அவர்கள் பேசுவதை என்னால் கேட்கமுடிந்தது. அவர் எங்கள் எஜமானரிடம் ‘இந்த அடிமைகளை என்ன செய்யப்போகிறீர்கள்?’ ‘என்று கேட்டார். இதுவரை தான் என்ன செய்யப்போகிறோம் என்பதை அவர் சொல்லவேயில்லை. அதனால் அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை ஆர்வத்துடன் கேட்கமுயன்றேன். நான் இருந்த இடத்திலிருந்து சமையலறை ஜன்னல் வழியாக அவர்கள் மெதுவான குரலில் பேசினால்கூட என்னால் தெளிவாகவே கேட்க முடிந்தது. என் எஜமானர் ‘எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரை கொலம்பியாவில் நல்லவிலைக்கு விற்று விடுவது- மற்றவர்களை அகஸ்டா எனும் இடத்தில் விற்பது’ என்ற தன் நோக்கத்தைச் சொன்னார். அவரது நண்பரும் இப்போது பருத்தித் தோட்டங்களில் அடிமைகளுக்கு நல்ல தேவையிருக்கிறது- ஒவ்வொரு அடிமையாகப் பத்திரிகையில் விளம்பரம் செய்து விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்று சொன்னார்.

(தொடரும்)

About The Author