ஒரு அடிமையின் கதை – 2

இனி சார்ல்ஸ் பாலின் கதை:

என்னுடைய தாத்தா ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு மாரிலாந்திலுள்ள கால்வர்ட் என்ற நகராட்சியில் ஒரு இடத்தில் 1730ல் விற்கப்பட்டார். என்னுடைய தந்தையும் ஹான்ட்ஸ் என்பவரின் குடும்பத்தில் அடிமையாக இருந்தார். என்னுடய தாய் புகையிலை பயிரிடும் ஒரு குடும்பத்தில் அடிமை. அவரது எஜமானர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட, (அப்போது எனக்கு வயது நாலு) அவரது குடும்பம் அடிமைகளை வைத்துக்கொள்ள வசதியின்றி விற்றுவிடும் நிலை ஏற்பட்டது. எனவே நாங்களும் மற்றும் நிறைய அடிமைகளும் ஏலத்தில் விற்கப்பட்டோம். என் அம்மாவிற்கு நிறையக் குழந்தைகள். நான், எனது சகோதர சகோதரிகள், என் தாயார் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு விற்கப்பட்டோம். என்னுடைய புது எஜமானர் என்னை அழைத்துச் செல்ல, அதற்குப் பிறகு என் தாயையோ மற்ற சகோதர சகோதரிகளையோ நான் பார்க்கவேயில்லை. மற்ற எல்லோரும் வேறுஇடங்களுக்குச் செல்ல நான் மட்டும் கால்வெர்ட்டிலேயே புது எஜமானனுடன் இருந்தேன். இது நடந்தது 1785ல் என்று நினைவு. எனது அப்பாவும் அதே மாரிலான்டில் என் இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தார்.

நான் அடிமையாக விற்கப்பட்டபோது என் உடம்பில் ஒரு துளிகூட துணி கிடையாது நான் நிர்வாணமாக இருந்தேன். அந்த நாள்வரை நான் உடையே உடுத்தது இல்லை. ஆனால் என் புது எஜமானர் கொஞ்சம் நல்லவர். அவர் தன்னுடன் ஒரு குழந்தைக்கான உடையை எடுத்து வந்திருந்தார். என்னை வாங்கிய பிறகு அதை எனக்குப் போட்டுவிட்டு குதிரையில் அழைத்துச் சென்றார். என்னைப் புதிதாக யாரோ அழைத்துச் செல்வதைக் கண்டு மனம் பொறுக்காமல் என் தாய் என் பின்னாலேயே ஓடிவந்தார். ஓடிவந்து என்னைக் குதிரை மீதிலிருந்து இறக்கி கட்டிப் பிடித்து அழுதார். என்னுடைய எஜமானர் அவரிடம், ‘கவலைப்படாதீர்கள்- நான் உங்கள் பிள்ளையை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆறுதல் கூறினார். ஆனாலும் மனது கேட்காமல் அவர் எங்கள் குதிரையோடு கூடவே நடந்து வந்து தன்னையும் மற்ற தன் குடும்பத்தவரையும் அவரையே வாங்கிகொள்ளும்படிக் கூறிக் கதறினார். என் அம்மாவை வாங்கிய அந்த கொடுமைக்காரன் என் அம்மாவின் பின்னால் கத்திக் கொண்டே சவுக்குடன் ஓடி வந்தான். அவரைத் தன்னுடன் வரும்படிக் கூறிசாட்டையால் என் அம்மாவின்முதுகில் பலமாக அடிக்கத் துவங்கினான். என்னை என் அம்மாவின் பிடியிலிருந்து பிரித்துவிட்டு அவரைத் தர தரவென்று இழுத்துச் சென்றான். எங்கள் குதிரை வேகமாகச் செல்லத் துவங்க என் அம்மாவின் கதறல் பின்னால் கேட்டுக் கொண்டே வந்தது. அம்மா அந்தக் கொடுமைக் காரனிடம் பட்ட துன்பங்களைப் பார்த்தபோது என் கவலை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அந்த மனித மிருகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்கு என் புது எஜமானர் ஒரு கடவுளாகவே காட்சி அளித்தார்.

என் அம்மா அந்த வறுமையிலும் என்னை மிகவும் ஆசையோடு பார்த்துக் கொள்வார். கிடைக்கும் கொஞ்சம் உணவையும் எனக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் கொடுத்து விடுவாள். பனிக்காலங்களில் என்னைத் தன் மார்பில் புதைத்து எனக்கு கதகதப்பு ஏற்படுத்துவார். அந்தக் கொடியவர்கள் என் அம்மாவைச் சங்கிலியிட்டு வேறு மாகாணத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். அங்கே அவர் தன் கடைசிக்காலம் வரை சித்ரவதை அனுபவித்து இறந்திருப்பார் என நினைக்கிறேன்.

என்னை ஏலத்தில் எடுத்தவர் பெயர் ஜான் காக்ஸ். அவர் ஒரு அன்பான நல்ல குடும்பத் தலைவர். தனது மனைவியிடமும், குழந்தைகளுடனும் மிகவும் ஆசையாய் இருப்பார். அவரிடம் அடிமையாக இருந்தவர்களிடமும் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வார். அவர் என்னைத் தனக்கு உதவியாளனாக வைத்துக் கொண்டதுடன் நான் நன்றாக நடந்து கொண்டால் ஒரு மேற்பார்வையாளராகவும் ஆக்குவதாகச் சொன்னார். இந்த பதவிகள்தான் அப்போது உலகத்திலேயே உயர்ந்தவையாகத் தோன்றியது. சூழ்நிலைகள் மட்டும் மாறாமல் இருந்திருந்தால் நான் பருத்தித் தோட்டத்திலோ, புகையிலைத் தோட்டத்திலோ ஒரு மேஸ்திரியாக இருந்திருப்பேன்.

ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. என் எஜமானன் நான் பன்னிரண்டு வயதிருக்கும்போது இறந்து விட்டார். அவரது மறைவு எனக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. என் வாழ்க்கையையும் அவரது மறைவு திசை திருப்பியது. மறைந்த என் எஜமானருக்கு நிறையக் குழந்தைகள். அவர்களில் ஒருவனுக்கு என் வயது. எஜமானரின் இறப்பிற்குப் பிறகு அவரது தந்தை தோட்டங்களைப் பராமரிக்கும் வேலைகளை எடுத்துக் கொண்டார். அவரிடம் வேலை பார்க்க வேண்டிய அடிமைகளில் நானும் ஒருவன். அவர் பழைய எஜமானர் போல இல்லை. எங்களை மிகவும் கடுமையாக நடத்துவார். அவர் என்னைத் தோட்ட வெலையில் தினமும் பல மணிநேரங்கள் மிகவும் கடுமையாக உழைக்கச் சொல்லுவார். இந்தக் கொடுமை நான் இருபது வயதடையும் வரை தொடர்ந்தது. நான் அவர் சொல்லும் வேலையைத் தட்டாமல் செய்துவிடுவேன். அவரிடம் மிகவும் பணிவாக நடப்பேன். அதனால் பலநேரங்களில் அவரது சாட்டையடியிலிருந்து தப்பியிருக்கிறேன்.

About The Author