ஒரு அடிமையின் கதை-4

ஒருவர் ஒருவராக எனக்கு எஜமானகள் மாறுவது வழக்கமாகிவிட்டது. என்னுடைய பழைய எஜமானர் ஜேக் காக்சிடமிருந்து வாங்கி என்னைத் தன் அடிமையாக வைத்திருந்த கிப்சனுக்கும் லெவின் பெல்லார்ட் என்பவருக்கும் இடையில் நான் யாருக்கு சொந்தம் என்று நடந்த வழக்கில் பெல்லார்ட் பக்கம் தீர்ப்பாயிற்று. ஒரு நாள் நான் சோளக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது பெல்லார்ட் என்னை அழைத்து ‘நான் அவருக்கு சொந்தம் என்றும், அவருடன் வர விருப்பமா? என்றும் கேட்டார்- என்னவோ நான் விருப்பம் இல்லை என்று சொன்னால் விட்டு விடுபவர் போல.திருமதி கிப்சனும் என்னை பெல்லார்டுடன் செல்லும்படிக் கூறினார்.

நானும் பெல்லார்டுடன் சென்றேன். அவருக்கு உண்மையாக உழைத்து நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன். அவரிடம் மூன்று வருடங்கள் அடிமையாய் வேலை செய்தேன். பெல்லார்டின் வீடும் என் மனைவி வேலைபார்த்த வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால் என் மனைவியை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

மனைவியின் எஜமானி திருமதி சிம்ஸ் அவர்களைப் போலவே தோட்டங்கள் வைத்திருப்பவர்களை சந்திப்பதற்கு அடிக்கடி வெளியே செல்வார்.அதனால் என் மனைவி மூலம் எனக்கு மாரிலான்டில் உள்ள முக்கிய நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நான் பயந்தது போலவே என் புது எஜமானர் மிகவும் கோபக்காராக இருந்தார்.நான் செய்யும் எல்லாவேலைகளிலும் தப்புக் கண்டுபிடிப்பார்.அவர் என்ன சொன்னாலும் சரியோ தப்போ செய்துவிடவேண்டும்- ஒரு நல்ல விஷயம்- அவர் என்னை அடித்ததில்லை.இதற்கு நான் என்னுடைய நல்ல நடத்தையாலும், பணிவாலும் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம் கவர்ந்ததுதான் காரணமாக இருக்கவேண்டும்-மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம்தான் அவர் என்னை அடிக்காமலிருக்க வைத்திருக்கும்.அவர் என்னைக் காடுகளில் வேலை செய்யச் சொல்வார்- பனிக்காலத்தில் தேவையான உடைகள் தரமாட்டார்.நான் அவரிடம் பக்கத்தில் உள்ளவர் யாருக்காவது என்னை விற்றுவிடும்படி கேட்க நினைத்திருந்தேன்- என் மனைவியின் அருகாமையில் இருக்கும் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை. ஆனால் விதி என்னவோ வேறுவிதமாக முடிவு செய்திருந்தது.

என்னுடைய எஜமானருக்கு பாடுக்சென்ட் என்ற ஆற்றின் கரையில் ஒரு கடை இருந்தது. ஆனால் அவர் சற்றுத் தள்ளி ஒரு பண்ணையில் குடியிருந்தார். ஒருநாள் அவர் என்னை அழைத்து அவரது கடையிருந்த கிராமத்திற்கு எருதுகளுடன் செல்லச் சொன்னார்- அங்குபோய் அங்கிருந்த வண்டியை எடுத்துவரவேண்டும் என்பது அவர் கட்டளை. நான் அந்த கிராமத்திற்குச் சென்ற சற்றுநேரத்திற்கெல்லாம் அவரும் அங்கு வந்துவிட்டார். அங்கிருந்து கணக்காளரிடம் காலை உணவு சாப்பிட்டார். பிறகு அவர் என்னை வீட்டுக்குள் வந்து காலை உணவு சாப்பிடச் சொன்னார். அப்போது அவர் அடுத்த அறையில் ஒரு புது ஆளிடம் குசு குசு வென்று ரகசியமான குரலில் பேசுவதைக் கவனித்தேன். நான் சாப்பிட்டுவிட்டு எருதுகளை வண்டியில் பூட்ட வெளியே சென்றேன். வண்டியில் கிளம்புவதற்குத் தயாராக இருந்தபோது என்னைப் பலபேர் திடீரெனச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களில் என்னுடைய எஜமானரிடம் ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தவரும் இருந்தார். அவர் என்னருகில் வந்து என் காலரைப் பிடித்துப் பலமாக இழுத்து என்னைக் குலுக்கினார். நான் அவரது அடிமை என்று சொன்னார். அவரோடு நானும் ஜார்ஜியா செல்லவேண்டுமென்று கூறினார். அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு உலகமே சுழன்றது. என்னுடைய மனைவி, குழந்தைகள் என் கண்முன்னே வந்து நின்றார்கள். அவர்களைப் பிரியப்போகின்றோம் என்ற எண்ணத்தில் என் இதயம் சுக்குநூறாக உடைந்தது. நான் கையாலாகதவன், இவர்களை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதை உணர்ந்தேன். அந்த ஆளுடன் இருபது அடியாட்கள் உதவிக்குஇருந்தார்கள் நான் ஏதாவது தப்பிக்க முயற்சி செய்தால் என் உயிர் தங்காது என்பதை அறிந்தேன். என்னால் பேசவோ அழவோ கூட முடியவில்லை. என் இயலாமையைக் குறித்து எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

என்னை விலைக்கு வாங்கியவர் கூடஇருந்த அடியாட்களைக் கூப்பிட்டு என் கைகளைப் பின்னால் வைத்து பலமான கயிற்றினால் கட்டச் செய்தார். அவர் அன்றே தெற்கு நோக்கிச் செல்லவேண்டும் என்று சொன்னார். நான் அவரிடம் என் மனைவி குழந்தைகளைப் பார்க்க ஒருநாளாவது அனுமதிக்கச் சொல்லிக் கெஞ்சினேன். இல்லையென்றால் அவர்களாவது என்னை வந்து பார்க்க அனுமதி தரச் சொன்னேன். அதற்கு அவர் "உனக்கு வேறு மனைவி ஜார்ஜியாவில் கிடைப்பாள்" என்று கேலியாகச் சொல்லி அனுமதி தர மறுத்துவிட்டார்.

என்னுடைய புது எஜமானர் அன்றே என்னை பாடுசென்ட் நதி வழியாக அழைத்துச் சென்றார். என்னுடன் கூட ஐம்பத்தொரு அடிமைகள் இருந்தார்கள். அவர்களை அவர் மாரிலான்டில் விலைக்கு வாங்கியிருந்தார். அடிமைகளில் 32பேர் ஆண்கள்-19 பெண்கள். பெண்களை ஒரு கயிற்றால் ஒருவரோடொருவர் கட்டியிருந்தார்கள். ஆனால் ஆண் அடிமைகளைக் கட்டியிருந்ததோ கடுமையாக இருந்தது- ஆண் அடிமைகளில் நான்தான் கொஞ்சம் பலசாலியாகவும் குண்டாகவும் இருந்தேன். ஒரு இரும்பு வளையத்தை எங்கள் கழுத்தைச் சுற்றிப் போட்டு அதைப் பூட்டியிருந்தார்கள். ஒரு நூறடி நீள இரும்புச் சங்கிலி அந்தப் பூட்டுக் கொக்கிகளின் ஊடாகச் சென்றது. இதைத் தவிர ஒருவரோடொருவர் கைகளை இணைத்து கை விலங்கால் பிணைத்திருந்தார்கள். ஒருவருடைய வலதுகை அடுத்தவருடைய இடது கையோடு பிணைக்கப் பட்டிருக்கும். எனக்குப் பக்கத்திலிருந்தவன்அவனது சங்கிலிகளைப் பிணைத்தபோது ஒரு குழந்தைபோல் அழுது கொண்டிருந்தான். நான் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ‘என்ன மோசமாக நடக்க வேண்டுமோ அது நடந்துவிட்டது- அதனால் இனி என்ன நடந்தாலும் அதைப் பற்றிக்கவலையில்லை’என்ற நிலைக்கு நான் வந்துவிட்டேன்.

எங்களைச் சங்கிலியால் பிணைத்து கைவிலங்கும் போட்ட பிறகு நாங்கள் தரையில் அமர்ந்தோம். நான் அமர்ந்தவாறே எனக்குத் திடீரென ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தையும், இனி என்ன பயங்கரங்கள் என்னை எதிர்நோக்கி இருக்கிறதோ என்பதையும் எண்ணிப் பார்த்தேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது நான் ஏன் பிறந்தேன் என்று எனக்குத் தோன்றியது. விதி இப்படித்தான் என்னை வாழ்நாள் முழுதும் துன்பத்திலேயே சுழலச் செய்யப் போகிறதா?- நான் இறக்கும்வரை எனக்கு விடிவே இல்லையா என்று ஏதேதோ எண்ணங்கள். இந்தக் கொடுங்கோலர்கள் கையிலிருப்பதைவிட இறந்து விடலாம் என்று தோன்றியது.ஆனால் அந்த மாதிரி சாவு கூட என் கையில் இல்லை- நான் தற்கொலைகூட செய்து கொண்டுவிட முடியாதபடி எங்கள் கைகள் பிணைக்கப் பட்டிருந்தன. என்னால் என் எஜமானரின் அனுமதியின்றி ஒரு அடிகூட வைக்க முடியாது. இந்த மாதிரியான எண்ணங்கள் என் மனதில் வந்து போயின- நானே எனக்குள் ‘இந்தத் துன்பங்களுக்கும் ஒரு நாள் முடிவு வரும்- வாழ்க்கைச் சக்கரம் இப்படியே இருக்காது. ஒரு நாள் எனக்கும் நல்லகாலம் வரும்’ என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். இந்த எண்ணமே எனக்கு ஒரு மன நிம்மதியைத் தந்தது. எனக்கே நம்பமுடியாத இந்த மன உறுதியுடன் நான் எங்களை ஏற்றிச் செல்லத் தயாராயிருந்த அந்த பெரிய படகில் ஏறினேன்.

(தொடரும்)

About The Author