ஒரு பூனை புலியாகிறது (10.2)

கமிஷனரின் கவலை

அத்தியாயத்தின் முன்பாதி: ஒரு பூனை புலியாகிறது (10.1)

இப்போது துணைக் கமிஷனர் தொலைபேசியில் பேசி முடித்திருந்தார். அவர் பதில் சொன்னார்.

"சேரா! இன்று நடைபெறவிருக்கும் கொலைத் திட்டம் வெளிநாட்டின் தூண்டுதலினால் போடப்பட்டது. அதனால் இதில் ஈடுபட்டவர்கள் சர்வதேச அரங்கத்தில் அரசியல் கொலைகளை நிகழ்த்தும் திறமையானவர்களிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அத்தகைய பயிற்சி பெற்ற ஒருவன், தான் செய்ய நினைப்பது முற்றிலும் வெற்றிகரமாக நடைபெறத் தகுந்த முன்னேற்பாட்டைச் செய்து கொள்வான். கொலைத் திட்டம் வெளிப்பட்டாலும், கொலையாளி சிக்காமல் திட்டபடி கொலையைச் செய்தே தீரவேண்டும். அதனால் அவன் சில நாட்களுக்கு முன்னரே இருக்கும் வீட்டை விட்டு, இருக்கும் ஊரை விட்டு வெளியூருக்குப் போய் விடுவான். கொலை நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக வந்து விடுவான். இப்போது சேகர் என்பவன்தான் கொலை செய்யப் போகிறவன் என்றும், இவன் கொலை நடக்க வேண்டிய நேரத்தில் சரியாய் வந்து சேர்ந்துவிடுவான் என்றும் நாங்கள் யூகிப்பதால், கவலைப்படுகிறோம்."

"யார் அந்த சேகர்? மிஸ்டர் கமிஷனர்! அவன் இந்த நகரத்தில் எங்கே ஒளிந்திருந்தாலும் கண்டுபிடித்துக் கைது செய்யுங்கள்!" என்று கூறினான், ஹனிமேன்.

இப்போதும் துணைக் கமிஷனரே பேசினார்.

"சேகர் பற்றி எதையும் சொல்லக் கைது செய்யப்பட்டவர்கள் மறுக்கிறார்கள். சேகர் வீட்டின் அருகே இருப்பவர்களிடம் கேட்டால், சேகர், சில சமயம் தாடி வைத்திருப்பானாம். சில சமயம் மொட்டை அடித்திருப்பானாம். சில சமயம் மீசையோடும், சில சமயம் மீசை இல்லாமலும் இருப்பானாம். சுமார் ஐந்தரை அடி உயரம், மாநிறம், சுமாரான உடல்வாகு – இவ்வளவுதான் தெரியும். இதைக் கொண்டே, சந்தேகத்துக்கு இடமான அனைவரையும் விசாரணைக்காகக் கைது செய்து அழைத்து வரச் சொல்லியிருக்கிறோம். என்றாலும் கவலைப்படுகிறோம்."

துணைக் கமிஷனர் மட்டுமா? ஹனிமேன் கவலை அடைந்தான். சேரன் கவலை அடைந்தான்.

தேனீயின் உயிர்த் தியாகம், சேரனின் வீரப் பயணம் – எல்லாம் வீண்தானா?

அங்கே சில நொடிகள் நிலவிய அமைதியைக் கமிஷனரின் குரல் கலைத்தது.

"சேரா! தேனீ உயிர் விடும் முன் உன்னிடம் ஏதோ சொல்ல முயன்றதாகக் கூறினாய். அதை மீண்டும் சொல்!"

சேரன் கண்களை மூடிக் கொண்டான். அவன் காதுகளில் தேனீயின் கடைசிக் குரல் கேட்டது.

சேரன் அதை அப்படியே சொன்னான்.

"இதுதான் புதிராக இருக்கிறது! கொலையாகப் போகிறவர் யார் என்னும் கேள்விக்கு விடை, கு… கு… ம… ம…! இந்தப் புதிர் விடுவிக்கப்பட்டால், கொலையாகப் போகிறவர் யார் என்பது தெரியும். உடனே அவருக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கலாம்" என்றார் கமிஷனர்.

"கு… கு… என்பது குடியரசுத் தலைவரைக் குறிக்கலாமோ?" என்று கேட்டான், சேரன்.

"நாங்களும் அப்படி நினைத்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் இன்று சென்னையில் இல்லை. தமிழ்நாட்டில் இல்லை. அவர் டெல்லியில் இருக்கிறார்."

"குடியரசுத் தலைவர் இல்லை என்றால், மந்திரியாக இருக்குமோ…? ம… ம… என்று தேனீ சொல்லியிருப்பது மந்திரியைத்தான் குறிக்க வேண்டும்” என்றான், ஹனிமேன்.

"அதையும் நாங்கள் நினைத்துப் பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள். இன்று காலை முதல் இரவு வரை நகரத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் மூன்று மத்திய மந்திரிகளும் ஐந்து மாநில மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் தேனீ குறிப்பிட்டது, யாரை?" – இது துணைக் கமிஷனரின் கேள்வி.

"ம… ம… ம… ம…" என்று முணுமுணுத்த கமிஷனர் திடீரென்று முகம் பிரகாசம் அடைய, "ம… ம… என்பது மத்திய மந்திரியைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டாலும் இன்று மூன்று மத்திய மந்திரிகள் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களில் யார்?" என்று கேட்டார்.

"ம… ம… என்பது மத்திய மந்திரியானால், கு… கு… என்பது என்ன?" என்று கேட்டான், ஹனிமேன்.

"கு என்பது குழந்தைகள் நாளைக் குறிப்பதாகலாம். மீண்டும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. மத்திய மந்திரிகள் மூன்று பேரும், மூன்று அமைப்புகளின் குழந்தைகள் நாளில் கலந்துகொள்கின்றனர். அதனால் எந்த மத்திய மந்திரியைத் தேனீ குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை!"

துணைக் கமிஷனர் கூறியவுடனே, ஹனிமேன், “மிஸ்டர் துணைக் கமிஷனர்! ம… ம… என்பதை மத்திய மந்திரி என்று இரண்டு சொற்களாகக் கொண்டீர்கள். கு… கு… என்பதில் ஒரு கு, குழந்தைகள் நாள் எனக் கொள்ளலாம். மற்றொரு கு என்ன?” என்று கேட்டான்.

"தெரியவில்லை" என்றார் துணைக் கமிஷனர்.

சேரன் திடீரென்று ஒரு கேள்வி கேட்டான்.

"குழந்தைகள் நாள் கொண்டாடும் அமைப்பில் குழந்தை எழுத்தாளர் சங்கம் இருக்குமே! அது ஆண்டுதோறும் குழந்தைகள் நாள் கொண்டாடும். கமிஷனர் ஸார்! குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகள் நாள் கொண்டாடுகிறதா?"சேரன் சிறுவர் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிப்பவன். அதனால், அவன் இவ்வாறு கேட்டான்.

"குழந்தை எழுத்தாளர் சங்கம்…" என்று கூறிய துணைக் கமிஷனர் சுவரில் இருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தார். அதில் அன்று நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், காலமுறைப்படி இருந்தன. “அஸோஸியேஷன் ஆஃப் ரைட்டர்ஸ் ஃபார் சில்ட்ரன்…” என்று படித்தார்.

"ஆமாம் சார். அதுதான் குழந்தை எழுத்தாளர் சங்கம். அங்கே மத்திய மந்திரி கலந்துகொள்கிறாரா?" – சேரன் கேட்டான்.

"ஆமாம்."

"அப்படியானால் கு… கு… ம… ம… என்பது குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் நடக்கும் குழந்தைகள் நாள் விழாவில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரியைக் குறிக்கலாம்" என்றான் சேரன்.

"தேங்க்யூ சேரன்! சங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் கவனிக்கத் தவறி விட்டோம்! இப்போதே குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரிக்குப் போதுமான பாதுகாப்புத் தருகிறோம்" என்றார், கமிஷனர்.

அப்போது, "சார்! இட் இஸ் வெரி லேட்! இந்தச் சங்கத்தின் நிகழ்ச்சி காலை பதினொரு மணிக்குத் தொடங்குகிறது. இப்போது நேரம், பத்து ஐம்பது" என்றார் துணைக் கமிஷனர்.

"உடனே கவர்னர் மாளிகைக்குப் போன் செய்! அந்த மத்திய மந்திரி அங்கிருந்து புறப்பட வேண்டாம் என்றும் சொல்! கொலைத் திட்டம் என்பதையும் சொல்!"

கமிஷனர் ஆணையிட்டவுடனே துணைக் கமிஷனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மத்திய மந்திரியுடன் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து "வாட்! மத்திய மந்திரி குழந்தை எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாரா? ஓ… காட்!" என்று கூறினார்.

–புலி வளரும்...

About The Author