ஒரு பூனை புலியாகிறது (5.1)

ஊட்டியில் தன்னை விரட்டியவர்கள் இங்கே வந்து விட்டார்கள் என்பதைப் பார்த்த சேரன் திடுக்கிட்டது, ஒரு நொடிதான். ‘அதோ! இரண்டு பேரும் லாரியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கக் கூடாது!’ என்று சேரனின் அறிவு எச்சரிக்கை செய்தது.

சேரன், தனக்குப் பக்கத்திலிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு, நாயோடு பொத்தென்று கீழே குதித்தான்.

அதைப் பார்த்ததும், "ஏய்! அங்கேயே நில்!" என்று கத்தினான், ஜாக்கி.

அந்த வாக்கியத்தை அவன் சொல்லி முடிப்பதற்கு முன், இடப்புறம் இருந்த கரும்புத் தோட்டத்தை நோக்கி நாயைச் சுமந்தபடி ஓடிய சேரன், சில விநாடிகளில் அக்கரும்புத் தோட்டத்தில் புகுந்து மறைந்தான்.

ஜாக்கி, உடனே, "பாபு, ஓடு! பையன் இந்த முறையும் தந்திரமாகத் தப்பப் பார்க்கிறான். பிடி அவனை" என்று கத்தினான்.
பாபு வேகமாகக் கரும்புத் தோட்டத்தில் புகுந்து ஓடினான்.

சாலையைக் காட்டிலும் கரும்பு விளைந்த வயலின் பரப்பு தாழ்ந்து இருந்தது. அதனால் சாலையில் நின்ற ஜாக்கியால் கரும்புகளின் தோகைகள் அசைவதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒரு சதுரத்தை இரண்டு முக்கோணமாக வெட்டும் ஒரு இடைக் கோடு போலக் கரும்புத் தோட்டத்தின் மேற்பரப்பில் தோகைகளின் அசைவு அலைபோலப் படருவதை ஜாக்கி பார்த்தான். சேரனைப் பாபு விரட்டிச் செல்கிறான் என்பதை உணர்ந்தான்.

லாரியிலிருந்த கந்தப்பனுக்கும் அவனுக்குப் பக்கத்திலிருந்த கிளீனருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்களும் சேரன் நுழைந்த கரும்புத் தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜாக்கி ஒரு கணம் தன் பார்வையைக் கரும்பிலிருந்து சாலைக்குத் திருப்பியபோது, லாரி இன்னும் அங்கேயே நிற்பதையும், அதிலிருப்போர் கரும்புத் தோட்டத்தையே பார்ப்பதையும் கவனித்தான். உடனே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது என்று முடிவு செய்தான்.

ஜாக்கியின் வலக்கரம் அவனது பேண்ட் பாக்கெட்டில் நுழைந்து வெளிப்பட்டபோது அதில் ஒரு ரிவால்வர் இருந்தது. ஜாக்கி வேகமாக நடந்து லாரியை அடைந்தான். கையிலிருந்த ரிவால்வரினால் லாரியைத் தட்டி, டிரைவரின் கவனத்தைத் திருப்பினான்.

கந்தப்பன் ஜாக்கியையும், அவன் கையிலிருந்த ரிவால்வரையும் பார்த்துத் திகைத்தான். கிளீனரோ நடுங்கினான்.

"டிரைவர், உங்களுக்கும் உங்கள் லாரிக்கும் சேதம் ஏற்பட வேண்டாம் என்று நினைத்தால் உடனே புறப்படுங்க. அதோடு இங்கே என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரிடமும் மூச்சு விடாதீங்க. உம்… வண்டி கிளம்பட்டும்!"

அவனது பேச்சுக்கு அபிநயம் பிடிப்பதுபோல ரிவால்வர் மெல்ல அசைந்தது.

‘மகனின் நண்பன் சேரன், ஏன் கரும்புத் தோட்டத்தில் புகுந்து மறைந்தான்? அவனைப் பிடிக்க முற்படும் இவர்கள் யார்? சேரன் ஏதாவது குற்றம் செய்திருப்பானா?’

இத்தனை கேள்விகளும் கந்தப்பனின் மனத்திலே பிறந்தன. அவற்றுக்கு விடை காணும் ஆசையை ஜாக்கியின் கையில் காட்சியளித்த ரிவால்வர் விரட்டியது. அதோடு கந்தப்பன் அங்கேயே இருந்தால் தொல்லை வரும் என்றும் அது மிரட்டியது.
கந்தப்பன் உடனே லாரியை ஸ்டார்ட் செய்தான். மறு நிமிடம் அந்த லாரி மெல்ல நகர்ந்து வேகமாகச் சென்றது.

ஜாக்கியின் முகத்தில் புன்னகை. துப்பாக்கியை வாயருகே எடுத்துச் சென்று அதன் சாதனைக்காக அதற்கொரு முத்தம் இட்டான். பிறகு அதைப் பழையபடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, கரும்புத் தோட்டத்தைப் பார்த்தான். அதற்குள் வீசிய காற்றால் தோட்டம் முழுவதுமே தலையாட்டுவது போல அசைந்து கொண்டிருப்பது தெரிந்தது. முன்பு போல, தோட்டத்தில் யாரோ ஓடுவதால் ஏற்படும் சலனத்தைத் தனியே கண்டுபிடிக்க முடியவில்லை.

சேரன் எங்கே?

அவனைப் பிடிக்கச் சென்ற பாபு எங்கே?

ஜாக்கியின் மனம் கேட்டது.

அதே நேரத்தில், சாலையில் வந்த மற்றொரு லாரி ஹாரன் அடித்தபடி மெதுவாக அங்கே நின்று, சாலையின் ‘முக்கால் பகுதியை’ அடைத்துக் கொண்டு குறுக்கே நிற்கும் அம்பாசிடருக்குப் பக்கத்தில் உள்ள சிறிதளவு இடத்தில் ஆமை போல நகர்ந்து அதைக் கடந்து, பழையபடி வேகமாகச் சென்றது.

ஜாக்கி அதைக் கண்டதும், அம்பாசிடரை நோக்கிச் சென்றான். அதில் ஏறி அமர்ந்தான். காரை ரிவர்ஸ் எடுத்து சாலையின் ஓரத்தில் மற்ற வண்டிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் நிறுத்தினான். பிறகு மீண்டும் சேரன் புகுந்த கரும்புத் தோட்டத்தின் அருகே வந்தான்.

சேரன் எங்கே?

அவனைப் பிடிக்கச் சென்ற பாபு எங்கே?

–புலி வளரும்…

About The Author