ஒரு பூனை புலியாகிறது (6.2)

வேலூர் வள்ளல்கள் (2)

அத்தியாயத்தின் முற்பகுதி: வேலூர் வள்ளல்கள் (1)

அரைமணி நேரம் ஆனது. பாப்பா வரவில்லை. பாப்பாவுக்குப் பதில் ஒரு அம்மா வந்தாள். திண்ணையிலிருந்த சேரனைப் பார்த்து, "நீதானே சேரன்? உள்ளே வாப்பா!" என்றபடி வீட்டுக்குள்ளே சென்றாள்.

முகச்சாடையிலிருந்தே அவள் பாப்பாவின் தாய் என்பதைத் தெரிந்து கொண்டான், சேரன். முகத்தில் திருநீறு! என்றாலும் அதிலே ஒரு பிரகாசம்! பேரொளி! அதுதான் அருள் ஒளியோ?

சேரன் உள்ளே போனான்.

"தம்பி, பாப்பா வந்து விஷயத்தைச் சொன்னா. அவங்கப்பா இருந்தப்போ, அவரு அதுக்குக் காசு தருவாரு. அதிலே இருபத்தைஞ்சு காசு, ஐம்பது காசு நாணயங்களை ஒரு உண்டியில் போட்டு வந்தா. பாதி நிறைஞ்சப்போ அவரு போயிட்டாரு. உண்டிக் காசு அவளுடையது. அதனாலே எனக்குக் கஷ்டம் வந்தப்போகூட அதைத் தொடலே. அதை உடைச்சி அதிலேயிருக்கிற பணத்தை உனக்குக் கொடுக்கச் சொல்லிட்டா. அவளைக் கடையிலே விட்டுட்டு வந்திருக்கேன்."

அந்த அம்மாள் பேசிக்கொண்டே, மாடத்திலிருந்த உண்டியை எடுத்தாள். அதை உடைக்க முயன்றபோது, சேரன் தடுத்தான்.
"அம்மா, வேண்டாம்மா" – அழுகை கலந்த குரலில் கூறினான்.

"நீ நாட்டுக்கு ஏதோ நன்மை செய்யும் செயலுக்காகச் சென்னைக்குப் போகணும் இல்லையா?"

"ஆமாம்."

"அதற்குப் பணம் வேணும் இல்லையா?"

"ஆமாம்."

"அப்போ தடுக்காதே. நீ எவ்வளவு தீரமா லாரியிலே ஏறி – கரும்புத் தோட்டத்திலே மறைஞ்சு – உன்னைப் பிடிக்க வந்தவங்க காரிலேயே தப்பிச்சு வந்தே! உனக்குப் பாப்பா உதவணும்னு நினைச்சதே எனக்குப் பெருமைதான். அவங்கப்பா மனசு அதுக்கு. நான் தப்பா நினைக்கமாட்டேன். பாப்பாவின் பணம் நல்லதுக்குப் பயன்பட்டாச் சரிதான்."

பாப்பாவின் அம்மா மண் உண்டியை உடைத்தாள். சிதறிய காசுகளை ஒன்று திரட்டி எண்ணிப் பார்த்தாள்.

"பதிமூன்று ரூபாய் ஐம்பது காசு இருக்கு. சென்னைக்குப் பஸ் சார்ஜ் பத்துப் பதினொரு ரூபாய் இருக்கும். எடுத்துக்கோப்பா."

சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள்ளலாக அவன் மனம் நினைத்துப் பாராட்டியது.

அம்மா போன அரைமணி கழித்துப் பாப்பா வந்தாள். பரவசத்தோடு வந்தாள். "அண்ணா, இப்ப நீங்க சென்னைக்குப் புறப்படலாம். பஸ் ஸ்டாண்டுக்கு நான் வழி காட்டறேன்" என்றபடி வீட்டைப் பூட்டால் பூட்டிக் கொண்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

சென்னை புறப்படத் தயாராய் ஒரு பஸ் நின்றிருந்தது. பாப்பாவிடம் குரல் தழுதழுக்க விடைபெற்றுக் கொண்டு, டாலருடன் பஸ்ஸுக்குள்ளே ஏறினான், சேரன். இரண்டு நிமிஷத்தில் டாலரும் அவனுமாகக் கீழே இறங்கிவிட்டனர்.

"என்னண்ணா?"

பாப்பா கேட்டாள்.

"நாயை வச்சுக்கிட்டு பஸ்ஸிலே வரக்கூடாதுன்னு கண்டக்டர் சொல்றார்."

சொல்லிலேயே சேரனின் சோகம் தெரிந்தது.

"நாயை என்னிடம் விட்டுட்டுப் போண்ணா."

"பாப்பா! சென்னைக்கு நானும் போகணும்! நாயும் போகணும்! ரெண்டு பேரிலே ஒருத்தர் போனாப் பலனில்லை!"
சேரனின் சோகம் அதிகமானது.

‘இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது’ என்று தெரியாமல் திகைத்தான், சேரன்.

–புலி வளரும்…

About The Author