ஒரு பூனை புலியாகிறது (7.1)

அறிவே வேலை செய்!

பாப்பா சோகமாக நின்ற சேரனையும் அவனிடமிருந்த நாயையும் ஒரு நிமிடம் பார்த்தாள். யோசித்தாள். "அண்ணா! ஒரு நிமிஷத்துலே வரேன்" என்று சொல்லி விட்டு ஓடினாள். பத்து நிமிடத்துக்குப் பிறகு கையிலே ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வரும் அட்டைப் பெட்டியோடு திரும்பினாள்.

"அண்ணா! லாங் பஜார் தெருவில் தெரிஞ்சவங்க கடையிருக்கு. அங்கிருந்து இதை வாங்கிட்டு வந்தேன். நாயை இந்தப் பெட்டியில் வைத்து பஸ்ஸிலே எடுத்துட்டுப் போ. வழியிலே நாய் குலைக்காமல் இருக்கணும்" என்றாள் பாப்பா.

"இது ரொம்ப புத்திசாலி நாய். சொன்னா சொன்னபடி கேட்கும்" என்று கூறியபடி அட்டைப் பெட்டியில் டாலரை உட்கார வைத்தான். பெட்டியை மூடினான். பாப்பா கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கயிற்றால் அதைக் கட்டிவிட்டுப் புறப்படத் தயாரானான்.

இதற்குள் முதலில் நின்றிருந்த சென்னை பஸ் போய்விட்டது. வேறொரு பஸ் வந்து நின்றது. சேரன் இரண்டாம் முறையாகப் பாப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி, சீட்டுக்கடியில் பெட்டியை வைத்தான். சன்னல் ஓரம் உட்கார்ந்தான். பாப்பா வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள். சுமார் பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது.
பாப்பா ‘டாடா’ காட்டினாள். சேரனும் கை அசைத்து விடை பெற்றான்.

பேருந்து சென்னை செல்லும் வரை, தொல்லை ஏதும் ஏற்படவில்லை. அது ராஜா அண்ணாமலை மன்றத்துக்குப் பின்னே இருந்த பேருந்து நிலையத்தை அடைந்தது. வழியில் இறங்கியவர் போகப் பேருந்தில் சுமார் பத்துப் பேர் இருந்தனர். அனைவரும் இறங்கிய பின், அட்டைப் பெட்டியுடன் சேரன் இறங்கினான்.

முதல் வேலையாக அட்டைப்பெட்டியின் பிளாஸ்டிக் கயிற்றை அவிழ்த்து, டாலரை வெளியேவிட்டான். "டாலர்! உனக்கு இரண்டாம் முறையாய்ச் சிறைவாசம்! இனிமே இப்படித் துன்பப்படற நிலை வராது. இன்னிக்கு உனக்கு ஜெம்ஸ் வாங்கித் தரேன்" என்று கூறினான். டாலருக்கு, காட்பரீஸின் ஜெம்ஸ் பிடிக்கும். அதை எவ்வளவு உயரத்தில் வீசினாலும் சரி, டாலர் காட்ச் பிடித்து உள்ளே தள்ளுமே தவிர ஒன்றுகூடத் தரையில் விழாது. அன்றைக்கு ஒரு சிறிய பாக்கெட் ஜெம்ஸ் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தான், சேரன்.

"சென்னையை அடைந்துவிட்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும்? ஆமாம், போன் செய்ய வேண்டும்" என்று நினைத்த சேரன், சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தூரத்தில் இருந்த ஊனமுற்றவர் இயக்கும் தொலைபேசியை அடைந்தான்.

"என்ன நம்பர்?"

ஊனமுற்றவர் கேட்டார்.

தேனீ கூறிய எண் என்ன? ஆறு எண்களைக் கூறினான் தேனீ. சேரன் அதைக் குறித்துக்கொள்ளவில்லை. அந்த எண் நினைவிருக்குமா?

"அறுபத்து ஒன்பது-மூணு-அறுநூத்து நாற்பத்து ஒண்ணு."

ஊனமுற்றவர் எண்ணை எழுதிக் கொண்டே சேரனை நிமிர்ந்து பார்த்தார். டெலிபோன் நம்பரை ரெண்டு ரெண்டாகச் சொல்வார்கள். அல்லது மூன்று மூன்றாகச் சொல்வார்கள். இவன் ஏதோ புதுமுறையில், முதலில் ரெண்டு எண் – பிறகு ஒரு எண் – பிறகு மூன்று எண் என்று சொல்கிறானே! – என்று யோசித்தவாறு, சேரன் சொன்ன எண்களைச் சுழற்றினார்.

தேனீ ஆறு எண்களைச் சொன்னபோதே, அதை மறந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த சேரன் அந்த எண்களை நினைவுபடுத்திக் கொண்டான். 693641. முதல் இரண்டு எண், அவன் பிறந்த வருடம். அவன் 1969-இல் பிறந்தான்; மூன்றாம் எண் அவன் வீட்டுக்கதவு எண்: 3; கடைசி மூன்று எண், கோயமுத்தூர் அஞ்சல் பின்கோடின் முதல் மூன்று எண்: 641. இப்படி அப்போதே பிரித்து மனத்தில் பதித்துக் கொண்டான். அதனால் இப்போது அதே முறையில் தயக்கம் இல்லாமல், எண்களைச் சொன்னான். சேரன் புத்திசாலி என்பதில் ஐயம் உண்டா?

ஊனமுற்றவர் டெலிபோன் ரிசீவரை அவனிடம் நீட்டினார். வாங்கிய சேரன் ‘ஹலோ’ என்றான்.

மறுமுனையில், "யெஸ்! உங்களுக்கு யார் வேணும்?" என்ற குரல் ஒலித்தது.

சேரன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "சார்! நான் ஊட்டியில் தேனீயைப் பார்த்தேன். ஓ.பி.யு-வின் தமிழ்நாட்டுத் தலைவரிடம் பேச வேண்டும்" என்றான்.

மறு முனையில் அப்போது, ஓ.பி.யு-வின் தமிழ்நாட்டுத் தலைவனேதான் பேசினான். அதனால் "ஸ்பீக்கிங்" என்று சொன்னான்.

"சார், தேனீ என்னிடம் ஒரு முக்கியமான பொருளைத் தந்திருக்கிறார். அதை உங்களிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது தேனீயின் வேண்டுகோள்."

"இப்போது எங்கிருந்து பேசுகிறாய்?"

"வேலூர் பஸ் வந்தடையும் ஸ்டாண்டிலிருந்து… ஜஸ்ட் எ மோமண்ட் ப்ளீஸ்" என்ற சேரன், தொலைபேசி இயக்கும் நபரிடம், "இது என்ன இடம்?" என்று கேட்டான். அவர், "பஸ் ஸ்டாண்ட். ஃபுரூட் மார்க்கெட்டுக்குப் பின்னாடி இருக்கிற பஸ் ஸ்டாண்ட்" என்றார். சேரன் அதையே போனில் சொன்னான்.

"உன் பெயர்…?" மறுமுனை கேட்டது.

"சேரன்."

"சேரா! நீ இப்போது இருக்கிற இடத்திலேயே இரு! எங்கேயும் போகாதே. நான் சுமார் இருபது நிமிடத்திலே அங்கே வரேன். நான் என்னை ஹனிமேன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஓ.கே?"

"ஓ.கே சார்!"

சேரன் போனை வைத்துவிட்டான்.

ஹனிமேன், இன்னொருவனுடன் உடனே காரில் ஏறி, அதை ராக்கெட்டாக்கினான். பதினைந்தாவது நிமிடம் பேருந்து நிலையத்தை அடைந்தான். தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்தான். அங்கே சேரனைக் காணோம்! தொலைபேசியின் அருகே ஊனமுற்றவர் தவிர யாரும் இல்லை.

–புலி வளரும்

About The Author