ஒரு பூனை புலியாகிறது (7.2)

அறிவே வேலை செய்! (2)

அத்தியாயத்தின் முன்பாதி: ஒரு பூனை புலியாகிறது (7.1)

ஹனிமேன் ஊனமுற்றவரிடம், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே ஒருவன் – அநேகமா ஒரு பையன் அல்லது இளைஞன் போன் செய்துட்டுக் காத்துக்கிட்டிருந்தானா?" என்று கேட்டான்.

"எத்தனையோ பேர் போன் பண்றாங்க. நிக்கறாங்க. போறாங்க. யாரை நீங்க கேக்கறீங்க?"

ஹனிமேன், தொலைபேசி இருந்த சிறு மேசையைப் பார்த்தான். அதன் மேலே விரிந்து கிடந்த நோட்டுப் புத்தகத்தில், தொலைபேசி எண்கள் ஸ்ரீராமஜெயம் எழுதப்படுவது போல வரிசையாய் இருந்தன. கடைசி எண்ணுக்கு முன்னே 693641 இருந்தது.

ஹனிமேன் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாயை எடுத்து அந்த நோட்டை நீளவாட்டில் இரண்டாக மடித்து, அதனால் 693641 எண்ணைச் சுட்டிக்காட்டி, "இந்த எண்ணை அழைத்துப் பேசியவன் என்ன ஆனான்?" என்று கேட்டுவிட்டு, அந்த நோட்டை அவனிடம் தள்ளினான்.

ஊனமுற்றவர், பொருள் ஞானம் பெற்றவர். அந்த நோட்டை அப்படியே எடுத்துக் கொண்டு, “இந்த எண்ணில் பேசியவன் சுமார் பதினாலு வயசுள்ள பையன். பேசிட்டு இங்கேயே நின்னான். அப்போ ஒரு ஆட்டோ வந்தது. ஆட்டோ-டாக்ஸி எல்லாம் இங்கே வரக்கூடாது; என்றாலும் ஆட்டோ வந்தது. அதிலே இரண்டு பேர் இருந்தாங்க. ஒருவன் தம்பின்னு கூப்பிட்டதும், இவன் அருகே போனான். ஆட்டோவில் இருந்தவன், இவனை அப்படியே இழுத்து உள்ளே தள்ளிக்கொண்டான். இவன் கத்தினான்.

இன்னொருவன் வாயைப் பொத்தினான். அதே நேரத்தில் ஒரு அழகான நாய் ஆட்டோ மீது பாய்ஞ்சது. உள்ளே இருந்தவன் விட்ட உதையிலே நாய் வெளியே விழ, ஆட்டோ பறந்துட்டுது” என்று கூறி முடித்தான்.

ஹனிமேன் முகம் வாடியது.

"பாவம் சின்னப் பையன்! யாரிடம் மாட்டிக் கொண்டானோ?" என்று நினைத்த ஹனிமேன், "அந்த ஆட்டோ நம்பர் தெரியுமா?" என்று கேட்டான்.

"கவனிக்கவில்லை."

ஹனிமேன் உடனே போலீஸ் கமிஷனரின் உதவியை நாடி அந்த ஆட்டோவைக் கண்டுபிடிக்க நினைத்துப் புறப்பட்டான்.
ஹனிமேன் போலீஸ் கமிஷனரைத் தேடிப் போன அதே நேரத்தில், சேரன் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சிறு வீட்டின் ஓர் அறையில் இருந்தான். அவனை ஆட்டோவில் கடத்தி வந்த இருவரும், புதிதாக மற்றொருவனும், ஜாக்கியும் அவன் எதிரே நின்றிருந்தனர்.

ஜாக்கி வேலூரிலிருந்தே போன் செய்து, சடை சடையா முடி தொங்கும் அழகான நாயுடன் ஒரு பையன் சென்னைக்கு வருவான். லாரியில், பஸ்ஸில் வரக்கூடும். அதனால் அவனைப் பிடிக்க ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தான். அதனால், சென்னையின் எல்லையிலே லாரியைக் கண்காணிக்கச் சில ஆட்கள், பஸ் ஸ்டாண்டைக் கவனிக்கச் சில ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான், சேரன் அட்டைப் பெட்டியிலிருந்து அழகான நாயை வெளியே விட்டதைக் கவனித்தான். அவன்தான் தேவையான பையன் என்பது தெரிந்தது. உடனே கடத்திக் கொண்டு வந்துவிட்டான்.

ஜாக்கி சேரனைப் பார்த்துச் சிரித்தான்.

"பொடியா! ஊட்டியிலே ரெண்டு தரம் தப்பிச்சுட்டே. கரும்புத் தோட்டத்துலே தப்பிச்சுட்டே. இனிமே தப்பிப் போக முடியாது. ஊட்டியிலே தேனீ உன்னிடம் என்ன கொடுத்தான்? என்ன சொன்னான்?"

ஜாக்கி கேட்டான்.

சேரன் பதில் சொல்லவில்லை.

"சரி, நானே சொல்றேன். தேனீ உன்னிடம் ஒரு மைக்ரோ பிலிம் ரோல் கொடுத்தான் இல்லையா? அதைச் சென்னையில் ஒருவரிடம் கொடுக்கச் சொன்னான். இல்லையா?"

சேரன் இப்போதும் பதில் சொல்லவில்லை.

"மாது! பையன் பரிசு வாங்காம எதுவும் சொல்ல மாட்டான். காட்டு உன் கைவரிசையை."

ஜாக்கி சொன்னதும், மாது என்று அழைக்கப்பட்டவன் முன்னே நகர்ந்தான். அவனை மாது என்பதைக் காட்டிலும் மாடு என்று, அதுவும் எருமை மாடு என்று அழைக்கலாம். அந்த மாது – அந்த எருமை மாடு சேரனின் அருகே வந்து நின்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். “அம்மா!” என்று அலறியபடி சுருண்டு விழுந்தான் சேரன். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. தாடை வலித்தது.

எருமை மாடு இரண்டடி எடுத்து வைத்து, தரையிலே சுருண்டு விழுந்த சேரனைக் காலால் உதைத்தான். இரும்பு உருளை உருண்டு செல்வதுபோல் சேரன் வேகமாக உருண்டு அருகே இருந்த சுவரில் மோதிக்கொண்டான்.

எருமை மாடு அவனை நோக்கி நகர்ந்தான்.

தலையிலே வலி – தாடையில் வலி – காலால் உதைபட்ட இடுப்பிலே வலி!

சேரன் துடித்துப் போனான். அவன், "அடிக்காதே! அடிக்காதே! சொல்லிடறேன்!" என்று அலறினான்.

ஜாக்கியின் முகத்தில் புன்னகை. அவன் கை ‘நிறுத்து’ என சாடை காட்ட, எருமை மாடு பின்னே நகர்ந்து நின்றான்.

சேரன் சுருண்ட நிலையிலிருந்து நிமிர்ந்து, விழுந்த நிலையிலிருந்து உட்கார்ந்து, சுவரிலே சாய்ந்து கொண்டான்.
ஒரு கை இடுப்பைத் தடவியது. ஒரு கை தாடையைத் தடவியது.

"உம்… சொல்லு…"

"தேனீ மைக்ரோ பிலிம்னு ஒரு சின்ன பொருளைக் கொடுத்தார். அதைச் சென்னையில் ஒருவரிடம் சேர்க்கச் சொன்னார்.”
“எடு அந்த பிலிமை!"

"அது… அது… என்னிடம் இல்லே!"

ஜாக்கியின் குறிப்பறிந்த எருமை மாடு, ஒரு கையால் புடலங்காயைத் தூக்கி நிறுத்துவது போலச் சேரனைத் தூக்கி நிறுத்தினான். மறு கையால் அவனைச் சோதித்தான். அவன் பாக்கெட்டிலிருந்த ரெண்டு ரூபாய் நோட்டையும் சில்லறையையும் எடுத்துக் கீழே போட்டான். அவற்றைத் தவிர வேறொன்றும் இல்லை. உடனே பிடித்த பிடியைத் தளர்த்த, சேரன் பொத்தென்று தரையில் விழுந்தான்.

"பிலிம் எங்கே?"

சேரன் பேசவில்லை.

"மாது…"

ஜாக்கி குரல் கொடுக்க, மாது, அதாவது எருமைமாடு பளார் என்று ஓர் அறை கொடுத்தான். சேரன், "அம்மா…" என்று அலறினான். தாடை எலும்பு நொறுங்கி விட்டதுபோல் உணர்வு. எருமை மாட்டின் கை மீண்டும் உயர்ந்தபோது, சேரன் அலறினான்: "பிலிம் நாய்கிட்டே இருக்கு."

நாய் என்ற சொல்லைக் கேட்டதும், அவனை ஆட்டோவில் கடத்தியவன், "ஜாக்கி, இவனை ஆட்டோவில் இழுத்துக் கொண்டதும், இவனுடன் இருந்த நாய் என் காலைக் கவ்வியது. ஒரு உதை விட்டேன். வெளியே போய் விழுந்தது" என்றான்.

"உம்… அதுதான் நீ கோயமுத்தூரிலிருந்து நாயோட புறப்பட்ட ரகசியமா? பிலிமை நாய் உடம்பிலே மறைச்சு வச்சிருக்கே. சரி, நாயைக் கண்டுபிடிக்கறேன்" என்ற ஜாக்கி, கிளம்பினான்.

"மாது! பையனை இந்த அறையிலேயே பூட்டி வை. பையன் பொடியன். ஆனால் பலே கைகாரன். மூணு முறை என்னை ஏமாத்திட்டுத் தப்பிச்சவன். அதனாலே எச்சரிக்கையோடு பார்த்துக்கோ" – ஜாக்கி திருவள்ளுவர் ஆனான்.

"கவலைப்படாம போப்பா. இவன் விடற மூச்சுக் கூட எனக்குத் தெரியாம வெளியே போகாது" – எருமைமாடு தன்னைப் புகழ்ந்து கொண்டான்.

ஜாக்கியும், இரண்டு பேரும் வெளியே போனார்கள். கடைசியாக, எருமை மாடு வெளியே போனான். கதவை இழுத்து மூடினான். பூட்டினான்.

சேரன் தனியே இருந்தான்.

இப்போது விம்மி விம்மி அழுதான்.

‘நாட்டுக்குச் சேவை செய்கிறவர்கள் எத்தனை சித்திரவதைகள் அனுபவிக்கிறார்கள்! தன் உயிர் போனாலும் டாங்கை வீழ்த்திய சிறுவர்கள் எங்கே? நான் எங்கே? இரண்டு அறையில் பிலிம் இருந்த இடத்தைச் சொல்லி விட்டேனே!’

சேரன் இப்படி நினைத்துத்தான் அழுதான்.

‘நாட்டுச் சேவைக்குப் பலம்கூடப் போதும்! என்னைப் பார்! நான் பலசாலியுமல்ல! சுமாரான உடம்பு. சின்னக் காய்ச்சல் வந்தால் கூட மூன்று நாள் படுத்திடுவேன்… எனக்கு மனபலமும் கிடையாது.’

விஜயிடம் முன்னர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன.

உடல் பலம் இல்லை!

மனபலம் இல்லை!

ஆனால்… அறிவு பலம்…?

சேரன் நினைத்தான்.

அவன் புத்திசாலி என்று அம்மா சொல்வாள்! ஆசிரியர் கேள்வி கேட்கும்போது அவன் பதில் சொல்லும் திறமையை அதே ஆசிரியர் எத்தனை முறை புகழ்ந்துள்ளார்; எதிரியின் காருக்குள்ளே, அவனோட பயணம் செய்தது புத்திசாலித்தனம் இல்லையா?
சேரா! ஆற்றல் இல்லாவிட்டால் என்ன? அறிவு இருக்கிறது! அதைப் பயன்படுத்து!

சேரனின் மனம் கூறியது.

சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு அறையை ஆராய்ந்தான். சுவரில் திருமுருகன் வேலோடு குறுநகை புரிந்து ‘அஞ்சாதே’ என்று அபயகரம் காட்டும் காலண்டர். தேதி பதின்மூன்று! செவ்வாய்க்கிழமை!

‘நவம்பர் பதினாலாம் தேதிக்குள் சென்னையில் சேர்த்துவிட வேண்டும்’ – தேனீ சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படியானால் இன்றைக்குள்ளே பிலிம் ஓ.பி.யு-வின் தலைவனை அடைய வேண்டும். அதற்கு இப்போதே இங்கிருந்து தப்ப வேண்டும்.
‘அறிவே வேலை செய்! என்னைக் காக்க அல்ல! என் நாட்டைக் காக்க! பிளீஸ், அறிவே வேலை செய்.’

பக்தனைப் போலப் பிரார்த்தனை செய்து கொண்டே அவன் பார்வை அந்த அறையை அணு அணுவாக அலசிக் கொண்டிருந்தது.
சரியாக ஐந்தாவது நிமிடம், "ஐயோ! காப்பாத்து! தீ! தீ! அறை தீப்பிடிச்சு எரியுதே!" என்று சேரன் அலறிய சத்தம், அந்தச் சின்ன வீட்டின் வெளியே வாசற்படியில் உட்கார்ந்திருந்த எருமை மாட்டின் காதில் விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து உள்ளே ஓடினான். சேரன் பூட்டப்பட்ட அறையின் கதவை அடைந்தான்.

அறையின் இரட்டைக் கதவுகளுக்கிடையே தெரிந்த இடைவெளியில், உள்ளே தகதகவென்று எரிவதை, செந்தீயின் நாக்குகள் நடனமாடுவதைக் கண்டான்.

–புலி வளரும்…

About The Author