ஒரு பூனை புலியாகிறது (9.2)

பிரிந்தவர் கூடினர்! (2)

அத்தியாயத்தின் முன்பாதி: ஒரு பூனை புலியாகிறது (9.1)

ஹனிமேன் சொன்ன கொலை என்னும் வார்த்தை கமிஷனரின் இதயத்தில் ஓங்கி அடித்ததுபோல இருந்தது. அவர் துடித்தார். உடனே துடிப்போடு செயல்பட்டார். நாய்களைப் பிடித்து வைக்கும் நிலையத்தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அன்று பிடித்த நாய்களில் காக்கர்ஸ் ஸ்பானியல் ஒன்று உண்டா என்று கேட்டார். மறுமுனையில் வந்த பதிலை சுமார் மூன்று நிமிடம் ‘உம்’ போட்டவாறு கேட்டார். பிறகு, ரிசீவரின் வாய்ப் பகுதியைக் கையால் மூடிக் கொண்டு எதிரே இருந்தவர்களைப் பார்த்துப் பேசினார்.

"காக்கர்ஸ் ஸ்பானியல் ஒன்று இருக்கிறது. சுமார் அரை மணி நேரமாய் ஒருவன் அங்கு வந்து, அந்த நாய் இல்லாமல் என் குழந்தை சாப்பிடாது. இப்பவே அதைக் கொடுங்கள் என்கிறானாம். இருநூறு ரூபாய் லஞ்சம் கொடுக்கவும் முன் வருகிறானாம்."
கமிஷனர் சொன்னதும், "கமிஷனர் சார்! அந்த ஆசாமி ஜாக்கியாகத்தான் இருக்கணும்! அவன்தான் மைக்ரோ பிலிமை என்னிடமிருந்து பறிக்க ஊட்டியிலிருந்து விரட்டிக் கொண்டு வருகிறவன். மைக்ரோ பிலிம் நாயிடம் இருக்கிறதுன்னு சொன்னதும், நாயைத் தேடிப் புறப்பட்டான். எப்படியோ மோப்பம் பிடிச்சு சரியான இடத்துக்கு வந்துட்டான்" என்றான், சேரன்.
சேரனின் யூகம் முற்றிலும் சரி. இரண்டு பேருடன் புறப்பட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த ஜாக்கி பலரிடம் விசாரணை செய்து, அழகான ஒரு நாயை, நாய் வண்டி பிடித்துக்கொண்டு போனதை அறிந்தான். நாய் இருக்கும் இடத்தை அடைந்தபோது, மாலை ஆகி விட்டது. அலுவலகத்தில் ஒரு அதிகாரியும் காவலுக்கு இரண்டு பேரும் இருந்தனர். அந்த அதிகாரியிடம் தன் மகன் நாயில்லாமல் சாப்பிட மாட்டான் என்று கூறி முதலில் நூறு ரூபாய் நோட்டை நீட்டினான். பிறகு இன்னொரு நோட்டை நீட்டினான். அதிகாரி அதை வாங்கவில்லை. காரணம் லஞ்சம் வாங்க விரும்பாத நேர்மையாளர் அவர் என்று நினைத்துவிட வேண்டாம். லஞ்சத் தொகையை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தவே வாங்கவில்லை.

அதிகாரி வெளிக்கதவுக்கு அருகே வந்து அங்கு காவலாளியால் தடுத்து நிறுத்தப்பட்ட ஜாக்கியிடம் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, கொஞ்ச தூரத்தில் இருந்த அலுவலக அறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. ‘இதோ வருகிறேன்!’ என்று கூறிவிட்டு வந்து, தொலைபேசியை எடுத்தவர், போலீஸ் கமிஷனரே பேசுவதைக் கேட்டு நடுங்கி நடந்ததைக் கூறிவிட்டார்.

மறுமுனையிலிருந்த போலீஸ் கமிஷனர், "நாயைக் கேட்ட ஆசாமியை அங்கேயே நிறுத்தி வை. நான் ஆட்களை அனுப்புகிறேன்" என்று கூறினார்.

போலீஸ் கமிஷனர் அறை உடனே சுறுசுறுப்பு அடைந்தது. துணைக் கமிஷனர் வரவழைக்கப்பட்டார். அவரே போதுமான காவலர்களுடன் சென்று நாயைக் கேட்டவனையும் அவனுடன் இருப்பவனையும் கைது செய்ய வேண்டும் என்றும், காக்கர்ஸ் ஸ்பானியல் நாயை இங்கே கொண்டு வர வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்தார்.

இரவு எட்டு மணி.

கமிஷனர் அறைக்குள் ‘லொள், லொள்’ என்று குரைத்துக் கொண்டே பாய்ந்த டாலரைச் சேரன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்! டாலரும் அவன் உடம்பை நாக்கினால் ஈரப்படுத்தியது! ஈரம் என்பதற்கு அன்பு என்று ஒரு பொருள் இருப்பதைத் தமிழ் அகராதியைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடம்!

நாயும், சேரனும் ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்னும் பிரிய நிலையில் இருந்தனர்.

ஹனிமேன்தான் முதலில் பேசினான்.

"சேரா! விடிந்தால் நவம்பர் பதினாலு! அதனால் மைக்ரோ பிலிமை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுப்பது நல்லது!"

சேரன் தன்னிலைக்குத் திரும்பினான். "இதோ ஒரு நொடியில் பிலிமைத் தருகிறேன்" என்றபடி டாலரின் எதிரே மண்டியிட்டு உட்கார்ந்தான். அறைக்குள் இருந்த கமிஷனர், துணைக்கமிஷனர், ஹனிமேன் ஆகிய மூவருடைய ஆறு கண்களும் நாயிடமே பதிந்திருந்தன.

சேரன் நெஞ்சம் ஒரு கணம், ‘நாம் வைத்த இடத்தில் மைக்ரோ பிலிம் இல்லாமல் போனால் என்ன செய்வது?’ என்று நினைத்தது. மறுகணம், அவன் காதுகளே அவனுடைய இதயத்துடிப்பைத் தெளிவாகக் கேட்டன.

சேரனின் வலக்கை டாலரின் கழுத்தில் படிந்தது. மற்றொரு கை, தரையைத் தொடுவது போல நீண்டு தொங்கும் டாலரின் இடக்காதை மேலே உயர்த்தியது. சேரனின் வலக்கை காதுகளின் கீழிடத்தை மெல்லத் தடவியது. அங்கே ஒரு ஸ்டிக்கர் இருந்தது. சேரன் அந்த ஸ்டிக்கரை மெல்ல இழுத்தான். டாலர் சிணுங்குவது போலக் குரல் எழுப்ப, சேரன் பட்டென்று ஸ்டிக்கரை இழுத்தான். ஸ்டிக்கர் கைக்கு வந்து விட்டது. அந்த ஸ்டிக்கரிலேயே, தேனீ அவனிடம் கொடுத்த எக்ளேர் சாக்லேட் அளவிலான சீல் செய்யப்பட்ட மைக்ரோ பிலிம் இருந்தது!

தேனீ மைக்ரோ பிலிமைத் தன்னிடம் கொடுத்ததை, நாட்டு விரோதக் கூட்டத்தார் பார்த்து விட்டனர். அதனால் அவர்கள் தன்னைப் பின்பற்றி வந்து பிடிக்க முயலலாம். ஒருவேளை தான் பிடிபட்டாலும், இந்த பிலிம் அவர்களிடம் சிக்கக் கூடாது. இதற்கு என்ன வழி என்று யோசித்தபோது டாலர் நினைவு வந்தது. டாலரைக் கொண்டு வந்து, அதன் இடக்காதின் கீழே ஒரு சதுர அங்குலப் பரப்பு முடியை பிளேடால் மழித்து, அங்கே பிலிமை வைத்து ஸ்டிக்கரில் ஒட்டி, முடியை அதன்மேல் படரச் செய்து, காதைத் தொங்க விட்டான், சேரன். டாலரின் இடக்காதைப் பிடித்துப் பார்த்தாலும், ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது தெரியாது. சேரனின் தந்திரம் பயன் அளித்துவிட்டது. பிலிம் அவனிடம் இருந்திருந்தால், அது பல மணி நேரத்துக்கு முன்னரே ஜாக்கியிடம் சிக்கியிருக்கும் அல்லவா?

மைக்ரோ பிலிமை வாங்கக் கமிஷனர் கையை நீட்டினார்.

"சாரி சார்! இதை ஓ.பி.யூ-வின் தமிழ்நாட்டுத் தலைவரிடம் தர வேண்டும் என்பது தேனீ எனக்கு இட்ட கட்டளை" என்று கூறிய சேரன், அதை ஹனிமேனிடம் கொடுத்தான். "தேனீ! உங்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டேன்" என்று கூறிக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான். தேனீயின் ஆன்மா அப்போது அந்த அறைக்கு வந்திருக்கும் என்று அவன் நம்பியிருப்பானோ?

ஹனிமேன், தான் பெற்ற பிலிமைக் கமிஷனரிடம் கொடுத்தான். அவர் அதைத் துணைக்கமிஷனரிடம் கொடுத்தார்.
"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக இந்த பிலிமில் இருக்கிற விவரங்கள் இங்கே வரவேண்டும். இந்த பிலிமில் பெயர்ப்பட்டியல்கள் இருக்கின்றன. பட்டியலில் உள்ள அத்தனை பேரையும் இரவோடு இரவாகக் கைது செய்ய வேண்டும். அதனால் நம் அலுவலகம் இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும். போதுமான காவல் படையும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்."

கமிஷனர் ஆணையிட்டவுடனே, ‘யெஸ் சார்’ என்று வேகமாக பதிலும், அதைவிட வேகமான சல்யூட்டும் துணைக்கமிஷனரிடமிருந்து வழக்கமாக வரும். அப்போது இரண்டுமே வரவில்லை.

–புலி வளரும்…

About The Author