கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

உஷா ராமகிருஷ்ணன் எழுதிய ‘பெண்ணால் மட்டுமே முடியும்’ என்ற புத்தகத்தில் நம்மைக் கவர்ந்த பகுதி ஒன்று.

பெப்சிகோவின் தலைவியாக இருப்பவர் இந்திரா நூயி.. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. அவரிடம் நல்ல உடுப்பு இல்லாததால், இரவு முதல் விடியற்காலை வரை ஒரு ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்து அதில் கிடைத்த சம்பளத்தை வைத்து புதிய ஆடை வாங்கி அதை அணிந்து நேர்முகத் தேர்வுக்குப் போனார். இந்திரா நூயியின் வெற்றிக்குக் காரணம் அவரது துணிச்சலும் விடா முயற்சியுமே!

*******

அன்பு என்கிற சிறுவன் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தான். அந்த நாய் போஷாக்குடன் கொழு கொழு என்று வளர்வதற்காக ஒரு டானிக் வாங்கி வந்தான். நாயை இழுத்து அதன் கால்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு எப்படியோ மருந்தைக் கொடுத்து விட்டான். நாய்க்கு மருந்து பிடிக்கவில்லை. மருந்துடன் வரும்போதே குரைக்க ஆரம்பித்து விடும். அவன் கட்டாயப்படுத்தி காலைக் கட்டிப்போட்டு மருந்தைச் செலுத்தி விடுவான். ஒரு நாள் அந்த நாய் தன் கோபத்தை எல்லாம் சேர்த்து முரண்டு பண்ணியது. அது குதித்த குதியில் மருந்து பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. மருந்தெல்லாம் கீழே கொட்டி விட்டது. எரிச்சலுடன் தரையை சுத்தம் செய்வதற்காக அவன் துணி எடுத்து வர உள்ளே சென்றான். திரும்பி வந்த போது அவன் கண்ட காட்சி ஆச்சரியத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். நாய் கீழே கொட்டியிருந்த மருந்தை நக்கி நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

மருந்து தவறான மருந்தல்ல. அதைக் கொடுத்த விதம்தான் தவறு. பிடிக்காத விதத்தில் கொடுத்ததால் நாய்க்கு மருந்தின் மீதே கோபம் வந்து விட்டது. இந்த உதாரணம் நம் கல்வி முறைக்கு மிகவும் பொருந்தும். கற்பிக்கப்படும் கல்வி தவறில்லை. கற்பிக்கும் முறைதான் தவறு!

*******

கேரளாவில் செயிண்ட் பெர்க்மான்ஸ் கல்லூரியில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் மரியம்மா. கிராமியப் பாடல்கள் நிறையப் பாடுவார். மாணவிகளும் ஆசிரியர்களும் இவர் பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்பார்கள். மெல்ல மெல்ல இவர் பாடல்களில் ஈர்க்கப்பட்ட நிர்வாகம் இவரை விரிவுரையாளர் ஆக்கி விட்டது. தற்போது இந்தப் பாடல்களை கல்லூரியில் உயர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மரியம்மா.

*******

வட மாநிலத்தில் ஒரு முனிவர் குழுவுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஒரு பெண் முனிவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர்கள் ஒரு கடலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது, படகின் மாலுமி படகில் எரிவாயு தீர்ந்து விட்டதாகச் சொன்னார். "யாராவது ஒருவர் கடலில் திரும்ப நீந்திச் சென்று கரைக்குப் போய் எரிவாயு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் படகு கிளம்பாது" என்று விட்டார். பெண் முனிவர் தன் யோக சக்தியால் நீரின் மீது நடந்து சென்று எரிவாயுவைக் கொண்டு வந்து விட்டார். ஆண் முனிவர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டினார்களா என்றால் அதுதான் இல்லை. நம் தலைவிக்கு நீரின் மேல் நீந்திச் செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியவில்லையே!" என்று குறை கூறினார்கள்!

*******

ஒரு ஜோசியக்காரர் ஒரு பெண்ணின் தந்தையிடம், ஜாதகக் கட்டத்தைப் பார்த்துவிட்டு, "உங்கள் மகளை இரண்டாம் வீட்டிலிருந்து ராகு பார்க்கிறான்" என்றார். உடனே மகள், "அது ராகு இல்லை மாமா, ரகு!" என்றாள்!

*******

கீழ்ப்படிதல் எங்கள் உரிமை!

புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கொடி பிடிப்போம்
கோசம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்

(கனிமொழி)

ஏன்?

நாலெட்டு வைக்கையில்
கைதட்டி ஆர்ப்பரித்தாள் அம்மா.
வளர்ந்த பருவம் தாண்டுகையில்
விளையாடி முடித்து வீடு நுழைந்தவளை
வெளியில் போனால்
காலை உடைப்பேன் என்கிறாள்
மலரத் துடிக்கையில்
வேரில் வெந்நீர்.

பரமேசுவரி – (மானிடள் வலைப்பதிவு)

About The Author