கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சிரிங்க, சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க..!

நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுடன் இருப்பவர்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் 52 சதவிகித அமெரிக்கர்கள் தாங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 43 சதவிகிதம் பேர் ஓரளவு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 3 சதவிகிதம் பேர்தான் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றும், 2 சதவிகிதத்தினர் சொல்லத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனில் நடந்த ஓர் ஆய்வில் 36 சதவிகிதம் பேர்தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

மகிழ்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் அல்லது ஏதோ ஓரளவு மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட சந்தோஷத்தைப் பெரிதாக மதிப்பதில்லை. தாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பது ஏனோ அவர்களுக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை.

உண்மையில் ஒருவர் வாழ்க்கையில் அவரது சந்தோஷம்தான் முக்கியமானது; மற்ற எல்லாவற்றையும்விடத் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவசியமானது என்று உணரவேண்டும். அப்படி நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பது எவ்விதத்திலும் சுயநலமாகாது, மற்றவர்கள் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்!

நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்?

நீங்கள் ஒரு மிக முக்கியமான மனிதர் :

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், உங்கள் தகுதி என்ன, உங்கள் சம்பளம் என்ன என்பன போன்றவை அனாவசியம். உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் பின்நோக்கிச் சென்று பாருங்கள். இந்த மண்ணில் நீங்கள் பிறந்திராவிட்டால் இந்த உலகம் எப்படி எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! நீங்கள் செய்த சின்னச் சின்ன நல்ல காரியங்களையெல்லாம் "நான் என்ன பெரிதாக சாதித்துவிட்டேன்?" என்று ஒதுக்கி விடாதீர்கள். சிறுதுளிதான் பெருவெள்ளம். உங்களது சிறிய செயல்கள்கூட இந்த உலக நன்மைக்கு அணில் பணியாக அமையக்கூடும்!

இப்போது உங்கள் வாழ்வில் உங்களை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்கள் சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் இந்த சமூகம் என்று உங்களை நம்பி இருப்பவர்கள் எத்தனை பேர்? நீங்கள் மட்டும் இல்லாவிட்டாலோ அல்லது நோயால் படுக்கையில் சாய்ந்தாலோ எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நினைத்துப் பாருங்கள்!

அடுத்து உங்கள் எதிர்காலத்தைச் சிந்தியுங்கள்! உங்களுடைய சக்தியையும், அந்த சக்தியினால் உங்கள் குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, சமூகம் மற்றும் நீங்கள் பணி செய்யும் அலுவலகத்திற்கு நீங்கள் கொண்டு வரக்கூடிய நன்மைகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் பலரது வாழ்க்கையில் மலர்ச்சியைக் கொண்டு வர முடியும். நீங்கள் மிகவும் முக்கியமானவர். நீங்கள் இதுவரை செய்தது, இப்போது செய்வது, வருங்காலத்தில் செய்யப்போவது எல்லாமே பலரது வாழ்வை நிர்ணயிக்கக்கூடும். எனவே நீங்கள் எவ்வளவு முக்கியமான மதிப்பு வாய்ந்த மனிதர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

உங்களது குடும்பமும், நண்பர்களும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். ஆனால் உங்களது சோகம் அவர்களிடம் அளவில்லாத துன்பத்தைக் கொடுக்கும் என்பது நிஜம். ஒரு குடும்பத்தில் தலைவன் அல்லது தலைவி வருத்தமாக அல்லது சோகமாக இருந்தால் அந்த சோகம் குடும்பம் முழுவதையும் இயல்பாகவே தொற்றிக் கொள்கிறது.

நண்பர்களும், குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டாடும் திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் யாராவது ஒருத்தர் வருத்தப்பட்டால் அந்த வருத்தம் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தாக்குகிறது; ஒரு கூடை மாம்பழத்தில் ஒரு மாம்பழம் அழுகியிருந்தால் அது மற்ற மாம்பழங்களையும் அழுகச் செய்வதுபோல.

வாழ்க்கையில் பலமுறை சுவாரஸ்யமேதும் இல்லாமல் கழித்திருக்கக்கூடும். அந்த நேரங்களில் நம்மைப் பார்த்து யாராவது ஒரு நொடி நின்று ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்தால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?

அந்தப் புன்னகையைத் திருப்பித் தரும்போது நமது முகத்திலும் ஒரு மலர்ச்சி. சிரிப்பு ஒரு நல்ல தொற்று வியாதி! அது சிரிப்பவர்களையும், அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் உடனே பற்றிக்கொள்ளும். உங்களிடம் பிறரைக் காணும்போது மகிழ்ச்சியுடன் புன்னகைக்கும் சக்தி இருக்கிறது. அதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக்கொண்டு நண்பர்கள், உறவினர்கள், ஏன் முன் பின் அறியாதவர்களைக் கூடப் பார்த்து ஒரு புன்னகை செய்தால் இந்த உலகத்தை வலுவானதாக்க உங்கள் கடமையைச் செய்தது போலிருக்கும்.

திரும்பவும் சொல்கிறோம்; நீங்கள் மிகவும் முக்கியமான மனிதர், உங்களது மகிழ்ச்சி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், உங்களது சந்தோஷம் இந்த உலகத்தையே மகிழ்ச்சியாக வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

(Source : Deanna Mascle)

ஆமாம்..மகிழ்ச்சி என்பதுதான் என்ன?

(பலரின் பார்வையில்)

•இதுதான் அது
•நாம் எல்லோரும் தேடிக்கொண்டிருப்பது
•நம்மிடம் இப்போதே இருப்பதுதான்

•சில சமயங்களில் நம்மிடம் இருப்பதும்;
•சில சமயங்களில் நாம் தேடிக்கொண்டிருப்பதும்
•அது அக்கரை பச்சை
•நாம் விரும்புவது கிடைப்பது
•கிடைப்பதை விரும்புவது
•தேவைகளற்ற நிலை

•மனதிற்கு இசைந்த மனைவியையோ, கணவனையோ பெறுவது
•பணம், புகழ், பதவி, மதிப்பு பெறுவது
•சந்தோஷமான நிகழ்ச்சிகளை, அனுபவங்களைப் பெருக்கிக்கொள்வது
•இது தற்காலிகமானதுதான், நிரந்தரமானது அல்ல என்று புரிந்துகொள்வது
•அதனால் தான் இன்னமும் நாம் வாழ்கிறோம் என்ற நினைப்பு
•இதோ இந்தக்கணம்தான்
•உன்னதமான பண்புகளும் , பிறரை மகிழ்விப்பதும்தான்
•துன்பங்களிலிருந்து விடுதலை அடைவது
•கனவுகள் நனவாவது
•துன்பங்கள் அற்ற நிலை
•உணமையை துணிச்சலுடன் எதிர்கொள்வது
•அனைவருக்கும் ஒன்றானதல்ல. இது அவரவர்கள் சொந்த சுய அனுபவம்
•இதுவே கலை, இதுவே அறிவியல்
•இது என்ன என்பது வாழ்க்கையில் போகப் போகத்தான் புரியும்
•உன்னதமான கொள்கைகளுக்காக தியாகம் செய்வது
•நம்மிடமே இருப்பதை நாம் தேடி வெளியில் அலைவது
•அகந்தையற்ற நிலை
•இறைவனிடம் சரண் புகும் மனம்
•இதுவரை கிட்டாதது. கிட்டியும் புரிந்துகொள்ளாதது
•நான் யார் என்று தெளிவது.

மகிழ்ச்சி என்பது: ?

1) மேற்சொன்னவை எல்லாமேதான்
2) அவைகளில் எதுவுமே இல்லை
3) அவற்றில் சிலவே
4) இவற்றைவிட இன்னம் மேலானது

எது உங்கள் சாய்ஸ்?

About The Author

1 Comment

  1. sundari

    சிரிப்பே எங்கள் சாய்ஸ் அனைவரும் உணர்ந்தால் நலமே.

Comments are closed.