கருணை பொழியும் காட்டு மாரியம்மன்!

புதுக்கோட்டை சமஸ்தான மன்னனின் மகனுக்கு நல்ல சுரம். அவன் உடல் மெலிந்து வந்தது மன்னனுக்கு மிகவும் கவலை கொடுத்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. எல்லா வைத்தியமும் செய்து பார்த்தும் பலனில்லை. அப்போது மந்திரி, திருவப்பூரில் ஒரு மாரியம்மன் இருப்பதாகவும் அவளை வேண்டிக் கொண்டால் சரியாகிவிடும் என்று தான் கேள்விப் பட்டதாகவும் கூறினான். மன்னனும் தன் மகனைத் தூக்கிக்கொண்டு அந்தக் கோயிலுக்கு ஓடினான்.

“அம்மா தாயே! என் மகனை உன் சந்நிதிக்கு அழைத்து வந்திருக்கிறேன்; காப்பாற்று!” என்று கைகளைக் கூப்பிப் பிரார்த்தித்தான்.

எப்போதும், இது போன்ற எல்லா சம்பவங்களிலும், வேண்டியது கிடைத்து மகிழ்ச்சி பெற்றுப் போவதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால், இந்த மன்னன் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அரண்மனைக்குத் திரும்பியதும் மகனின் உடல்நிலை இன்னும் மோசமாகியது. அவனுடைய விதி முடிந்துவிட்டது! வந்ததே கோபம் மன்னனுக்கு! மந்திரிகளை அழைத்தான்.

“நேரே கோயிலுக்குச் செல்லுங்கள்! மாரியம்மன் கோயிலை இடியுங்கள்! அம்பாள் சிலையை வீசி எறியுங்கள்! இது என் கட்டளை!” என்றான்.

மந்திரி அங்கு சென்று தன் காரியத்தை ஆரம்பித்தார். அம்மன் சிலையைப் பெயர்த்தார். அப்போது ஒரு சில பக்தர்கள் அவரைத் தடுத்து வழி மறித்துச் சிலையைப் பிடுங்கிக் கொண்டனர். பின், அதை எடுத்து ஓர் இடத்தில் ஒளித்து வைத்தனர்.

புதுக்கோட்டை மன்னனால் இடிக்கப்பட்ட அந்த மாரியம்மன் கோயில் பிறந்த கதை தெரியுமா?

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், புதுக்கோட்டை பக்தர் ஒருவருக்கு அருள் வாக்கு வந்தது.

“திருவப்பூர் அன்னவாசல் சாலையில் கவி நாட்டுக்கோட்டை கண்மாய் ஒன்று தென்படும். அதில் என் உருவச்சிலை புதைந்து இருக்கும். அதை வெளியில் எடுத்து எனக்கு ஒரு கோயில் கட்டுங்கள்!” என்று.

அவள் சொன்னபடி பக்தர்கள் அங்கு விரைந்தனர். வாக்குப்படியே அம்மன் சிலை கிடைத்தது. மக்கள் தென்னங்கீற்றுக் கொட்டகையில் ஒரு கூடம் அமைத்து அவளைப் பிரதிஷ்டை செய்தனர். பின், தினசரி வழிபாடு நடக்க, கிராம மக்களுக்கு அவள் இஷ்ட தெய்வமானாள். இதுதான் அவளது முதல் கோயில் கதை.

இப்பொழுது இவளே காட்டு மாரியம்மன் ஆன கதை:

ஒரு நாள், தன் கோயிலை இடித்த புதுக்கோட்டை மன்னனின் கனவில் மாரியாத்தாள் தோன்றினாள். கனவில் அம்பாளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து மன்னன் வணங்கினான்.

“மன்னா! உன் மகன் இல்லையே என்று வருத்தப்படாதே! அவன் விதி முடிந்துவிட்டது. அவன் உயிருடன் இருந்தாலும் அவன் உடல்நலனில் தொந்தரவு ஏற்பட்டபடிதான் இருக்கும். உன் மகன் என்னிடம் இருக்கிறான். அவனைப் பார்! அத்துடன் உன் ராஜ்ஜியத்தின் வளர்சிக்கும் நானே இனி பொறுப்பு! புதுக்கோட்டை செழிப்பாக இருக்கும். மக்களையும் நான் காத்து ஆசிகள் வழங்குவேன்!” என்று ஆத்தாள் திருவாய் மலர்ந்தருளினாள்.

மன்னன் மிக மகிழ்ச்சியடைந்து மாரியம்மன் சிலையைப் பாதுகாத்து வரும் பக்தர்களை வரவழைத்தான். தானே அம்மனைப் பிரதிஷ்டை செய்து, கோயிலை முன்பு இருந்தது போலவே கோபுரத்துடன் அமைக்க உத்தரவு இட்டான். அந்தக் கோயில்தான் இப்போது ‘காட்டு மாரியம்மன் கோயில்’ என அழைக்கப்படுகிறது.

காலம் ஓட, கோயிலின் விரிவு அதிகமாகியது. திரும்பக் கோயிலை மாற்றி அமைக்கும்போது சிலையை எடுத்து பாலாலயம் போல் வைத்து வேலை செய்வார்கள். ஆனால், இந்தக் கோயிலில் அம்மனை நகர்த்தவே இல்லை. தாய் இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்க, கோயில் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.

கோயிலில் மாசி மாதம் தேரோட்டம் நடக்கிறது; திருவிழா போல் மக்கள் திரளாக வந்து அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். கரகம், கோலாட்டம் என்று பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. அம்மனுக்குக் காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீ மிதித்தல், தீக் குண்டம் செலுத்துதல், பூச்சொறிதல் போன்றவை நடக்கின்றன.

வியாதிகள் நீங்க இங்கு பல பக்தர்கள் வருகிறார்கள். அத்துடன் கலயாணம் ஆகவும், மகப்பேறு உண்டாகவும் இங்கு பலர் கோரிக்கை வைக்கின்றனர். ஆவணி மாத ஞாயிறு அன்றும் அம்மனுக்குத் திருவிழா நடைபெறுகிறது.

வாருங்கள்! நாமும் இந்த மாரியம்மனின் அருளைப் பெற்று வரலாம்

About The Author