கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் (3)

எரிக்வான் தன்னுடைய ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அனுமானங்கள்…

1. நாம் நம்முடைய அறிவியலை – நீளம், அகலம், உயரம், நேரம் என்ற கட்டங்களுக்குள் சட்டமிட்டுப் படித்தாலும், வரையறுக்க முடியாத நேரம்(INFINITE TIME) என்ற அளவையைக் கைக்கொள்ளாததால் கடவுளைப் படைத்த கடவுள் யார் என்ற கேள்விக்கு இன்னமும் விடை காண முடியாதவர்களாகவே இருக்கிறோம்.

2. மனமும், சடமும் (MATTER) பிரிக்க இயலாதவாறு பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளன என்று ஃபிரான்சு விஞ்ஞானி சாரோன் (JEAN E.CHARON) அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

3. நீரில் மிதந்து கொண்டிருக்கும் நீர்க்குமிழிபோல அண்டத்திலுள்ள கருங்குழி( BLACK HOLE) தன்னை நோக்கிவரும் அனைத்துத் தகவல்களையும் ஈர்த்துக் கொண்டு வெளிவிடாமல் தேக்கி வைத்துக்கொள்கிறது. இதனுள் நேரம், அண்டத்தின் நேரத்திற்கு எதிராகவும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் மீண்டும் முதலிலிருந்தே ஆரம்பிக்கும் சுழற்சித் தன்மை வாய்ந்ததாகவும் இயங்குகிறது. இது கவர்ந்திழுத்துக் கண்ட அனைத்துத் தகவல்களும்(INFORMATIONS) அழிவில்லாமல் யுக யுகங்களாகக் காக்கப்பட்டுவருகின்றன.

4. உலகில் முதலில் தோன்றியது ஹைடிரஜன் அல்ல. மின் அணுவேயாகும். அனாதியான இதுவே மனத்திலும் சடத்திலும் ஊடுறுவி நிலை பெற்ற ஒன்று. நிமிடத்திற்கு 10 (23) மடங்கு சுருங்கி விரியும் எல்லா மின்னணுக்களுமே கருங்குழியின் குணாதிசயங்களை அச்செடுத்தவை. தன்னருகில் வரும் தகவல்களை ஈர்த்துத் தன்னுள்ளே அடக்கிக்கொள்பவை. அதாவது, அனாதி காலம் தொட்டுத் தற்போதைய நிமிடம்வரையிலுள்ள தகவல்களைத் தன்னுள்ளே அல்லது தங்களுக்குள்ளேயே அழிவில்லாமல் அடக்கிக் கொண்டிருப்பவை.

5. எங்கும் நிறைந்திருக்கும் மின்னணுக்கள் அண்டத்தில் நடந்த, நடக்கப்போகின்ற அனைத்துத் தகவல்களையும், மனித மூளைக்கு ஒரு இணைப்பின்மூலம் தெரிவித்தபடியே உள்ளன.

6. ஏதேனும் ஒரு மனித மூளையில், ஏதேனும் ஒரு மின்னணு.. ஏதேனும் ஒரு காரணத்தால் சூடாகி விரிவடைந்து உள்ளேயுள்ள தகவல்களைச் சிந்தும்போது அம்மனிதன் அபாரமான சக்தி பெற்றவனாகிறான். கடந்த காலத்தைப் பிசிறில்லாமல் பார்க்கிறான். ஐன்ஸ்டீன் போல இயற்கை மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களைப் பக்கத்திலிருந்து பார்ப்பது போல அறிந்து கொள்கின்றான்.

7. மனிதர்கள் மற்றும் கல், மரங்கள் ஆகிய அனைத்தும் இந்த மின்னணுக்களைச் சுமந்து செல்லும் மூட்டை தூக்கிகளாகவே உள்ளன. மாக்ஸ் பிளாங்க் அறிந்து சொன்னது போல, பார்க்க(மட்டும்) முடியாத ஒரு மகாசக்தியே நம்முடைய ஒவ்வொரு செயலையும் தீர்மானிக்கிறது.

டேனிக்கன் தன்னுடைய செயல்முறை ஆய்வைத் தொடர்கிறார்.

1. கல் சின்னங்கள் உருவாக்கப் பயன்பட்ட கற்கள் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. தண்ணீர்பட்டதும் நீல நிறமாகி விடும்.

2. 2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த மாதிரியான அமைப்புகள் இங்கிலாந்து, ஸ்காடலாந்து, அயர்லாந்து பகுதிகளில் மட்டும் 900 உள்ளன. இந்தியாவில் பிரம்மபுத்திரா நதிக்கரையிலும் இவை போன்றவை அமைந்துள்ளன.

3. காலையில் சூரிய உதயத்திற்கு முன் கற்களுக்கிடையில் எந்த அதிர்வும் இருப்பதில்லை. நடுப்பகலில் வெயில் ஏற, ஏற… கற்களுக்கிடையில் மின் அதிர்வுகள் பலப்பட்டு சூரிய அஸ்தமனத்தின்போது ஓய்ந்து போகின்றன. இடைநேரத்தில் இடையில் யாரேனும் நுழைந்து விட்டால் முற்றிலுமாக மறைந்து போய் விடுகின்றன. மறுபடியும் அதே நாளில் தோன்றுவதில்லை.

டேனிக்கன் தன்னுடைய ஆய்வின் முத்தாய்ப்பாக ஒரு ஆய்வுக்குரிய சர்ச்சைகளைத் தொடங்கி வைக்கிறார்.

முதலாவது, கற்கள் பற்றியது. சில விசேஷமான கற்கள் தங்களுக்குள் சம்பாஷித்துக் கொள்கின்றன. இந்த பாஷனைகளின் தொடர்ச்சி அண்டத்துக்குள் சென்று விடுகிறது. அல்லது இந்த பாஷனை அண்டத்தில் ஓரிடத்தில் தொடங்கி பூமியின் கற்களுக்குள் மீண்டும் வந்து முடிவதாகவும் இருக்கலாம்.

இரண்டாவது, மின்னணுக்கள் பற்றியது. கடத்தப்பபட்ட ஒருவனின் மூளையிலுள்ள ஒவ்வொரு மின்னணுவும் தகவல்கள் நிரம்பியவையாக -கடத்தியவன் யார் கடத்திய இடம் எது.. போன்ற செய்திகள் உள்ளதாக இருக்கும். இவ்வகை மின்னணுக்கள் அதிர்வடைந்து தகவல்களைச் சிந்தும்போது, தகவல்கள் இதர மின்னணுக்களால் அண்டம் முழுதும் பரவுகின்றன. ஏதேனும ஒரு வகையில் (மாந்தரீக முறை உட்பட) இத்தகவல்கள் அடங்கிய மின்னணுக்கள் மட்டும் (பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலும்) வடிகட்டி எடுக்கப்பட்டு தேடுபவருடைய மூளையில் உரச வைக்கப்படுமேயானால், கடத்தல் நிகழ்ச்சி திரைப்படம் போல வினாடி நேரத்தில் வெளிச்சமாக சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.

இதன் தொடர்ச்சியாக நம் உள்ளூர் நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொடர்புபடுத்திப் பார்ப்போம்.

முதலாவதாக, இந்துக்களின் விக்கிரக வழிபாடு. விக்கிரகத்தின் முன் வழிபடும் ஒரு பக்தனின் நிலை என்ன? பக்தனின் உணர்ச்சிகள், வேண்டுகோள்கள் போன்ற தகவல்களடங்கிய (மூளையிலுள்ள) மின்னணு உணர்வுகளால் தகிர்ப்படைந்து, தகவல்களைச் சிந்தும்போது, எதிரிலுள்ள (கல்)விக்கிரகத்துடன் மின் தொடர்பை ஏற்படுத்துமா? அவ்வாறான ஒரு மின்தாக்கை வாங்கிக் கொள்ளும் விக்கிரகம் அதை அண்டத்தில் ஏதேனும் ஒரு இடத்திற்கு அனுப்புமா? இதே முறையில் அண்டத்தின் அந்த ஒரு இடத்திலிருந்து அனுப்பப்படும் தகவலை பக்தனுக்குக் கொடுக்குமா..?

இந்த இடத்தில் இடைச்செருகலாக, 22.4.2007 தேதியிட்ட தினமலர் நாளிதழின் செய்தியைப் பார்ப்போம்.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. srividya

    மிக அருமை. ஆர்வமாக இருக்கிறது. நன்றி.

  2. thara

    னீன்ட காலமாக ? யாக இருந்த விடயம் … அர்ரிய ஆவல்

Comments are closed.