காக்கை விடு தூது

தாத்தாவின் முக்குச்சந்து
வீட்டுத் தகரத்தின் மீதும்
அப்பாவின் மூத்திரச்சந்து
வீட்டு ஓட்டின் மீதும்
நின்று கழிந்து கரையும்
ஏவல் காக்கைக்குப்
பின்னாலேயே பெரும்பாலும்
வந்து சேர்வார்கள் என்
அத்தையும் மாமனும்.

கரையும் காக்கைகளை
விரல்விட்டு எண்ணித்தான்
சொம்பின் அளவை
உத்தேசித்து நீட்டுவாள்
பாட்டி- காபித்தண்ணி வாங்க.

ஏரியை ஒட்டினாற்போல்
முளைத்திருக்கும் இந்தப்
புதிய மாளிகைக்கு
குடிபெயர்ந்து வருடங்கள்
சிலவாகின.

ஈசானமூலையின்
கான்கிரீட் மதிற்சுவரில்
கழிந்து வெள்ளை பூசி
கரைந்து சேதி சொல்லக்
காக்கையோ
சொம்பு தூக்கப்
பாட்டியோ இல்லை.

About The Author