காலையில் — ஒரு ஒளி ஒலிச்சித்திரம்

கங்குல் கலையச் சேவல்கள்
காகளம் ஊதும் வேளையிலே
குங்குமப் பூக்கள் அடிவானில்
குலுங்கு வதைப்போல் செவ்வரிகள்.

புலரிப் பொழுதில் பறவையினம்
பூபாளத்தின் குழைவுகளை
சிலுசிலுப் பேற்றும் பூந்தென்றல்
சிவிகையி லேற்றித் தூதுவிடும்.

சிறுசிறு வைரத் திவலைகள்
சிதறிக் கிடக்கும் புல்நுனிமேல்;
பொறுக்கி எடுக்கக் குனிவதற்குள்
பொன்முக கதிரோன் திருடுகிறான்

குடத்தில் மங்கையர்`மொள்ளும்நீர்
குபுகுபு வென்னப் புகும்ஓசை?
படித்துரை மீது அவர்ஆடை
படியத் துவைக்கும் தாளொலி;

கன்றுகள் தாய்மடி முட்டுகையில்
கழுத்துச் சிறுமணி கிணிகிணுக்கும்;
மன்றல் முடிக்கக் கோத்தும்பி
மலரை சுற்றி ரீங்கரிக்கும்;

கோலம் போடும் பூவையர்கை
குலுங்கும் வளையல் சங்கீதம்;
ஆலயக் கெண்டா மணிநாதம்
அகச்சுவர் மோதும் எதிரொலிகள்.

சூடிக் கொடுத்த திருப்பாவை
சுப்ர பாதம் பல்லாண்டு
பாடிப் பள்ளி எழுச்சிசெயப்
பரமன் தாமரை கண்மலர்வான்.

பாதசரங்களின் பண் உதிரப்
பாவையர் கோவில் வலம்வருவார்;
நாதசுரத்தின் இசை வெள்ளம்
நதியாய் விசும்பின் வழிபாயும்.

பயிரிடை வாய்கால் வழிதண்ணீர்
பாயும் ஒசை; பானையிலே
தயிரிடை மத்து சுழல்அரவம்;
தத்தும் குருவியின் பாதஜதி.

About The Author

2 Comments

  1. Bharani

    கவிதையை படிக்கும் போதே மனசுக்குள் ஒரு சந்தம் ஓடுகிறது. நல்ல ரசனையான வரிகள். ஆனால் இது போன்ற ஒலி, ஒளிச் சித்திரத்தை எப்போது காண்போமோ, நாங்கள்?

  2. P.Balakrishnan

    கோவில்கள், வயல்வெளிகள், ஆறு, நந்தவனம், தோப்புகள், கால் நடைகள் நிறைந்த ஒரு பேரூரின் பண்டைய கால காலைக் காட்சியைக் கண்முன் நிறுத்தும் மரபுக் கவிதை!

Comments are closed.