காளித்தம்பியின் கதை (12)

தேர்வு ஆரம்பமாகும் அன்று காலையில் நாவுக்கரசு தன் தந்தை வாங்கிக்கொண்டு வந்த செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான். உலகச் செய்தி எதுவும் அவன் உள்ளத்தைக் கவரவில்லை. கடைசிப் பக்கத்திலிருந்த செய்திகளைப் பார்த்தான்.

"கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பணக்கார வீட்டில் திருடிய சிறுவன் ரங்கன் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. அவன் சென்னையில் இருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. போலீசார் அவனைப் பிடிக்கத் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்."

இதுதான் செய்தி. நாவுக்கரசு இதையே இரண்டு மூன்று முறை படித்தான். "மதுரையில் திருடிய சிறுவன் – கடந்த மே மாதம் திருடிய சிறுவன் – சென்னையில் இருக்கிறான்" என்று முணுமுணுத்தான். அவன் மனம் பழனியை நினைத்தது. பழனி மதுரையைச் சார்ந்தவன் என்று அவனே சொல்லியிருக்கிறான். அவன் கோடை விடுமுறையில்தான் சென்னைக்கு வந்ததாகவும் சொல்லியிருக்கிறான். இவற்றையும் நினைத்தான் நாவுக்கரசு.

பழனியைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நாவுக்கரசு, ‘பழனிதான் ரங்கன் என்று சொல்லி அவனை மாட்டி விடலாமா?’ என்று நினைத்தான்.

பழனி ரங்கன் இல்லைதான். இது அவனுக்கே நன்றாகத் தெரிந்தது. என்றாலும் "ஓரிரண்டு நாட்கள் போலீஸில் மாட்டிக்கொள்ளட்டுமே! அதுவும் இன்றைக்குத் தேர்வு. இந்த நேரத்தில் பழனியைப் போலீஸ் பிடித்துச் செல்லட்டும். இதுவே அவனுக்குச் சிறந்த தண்டனை" என்று நினைத்தான் நாவுக்கரசு. மணி பார்த்தான். காலை ஆறு மணி. நாவுக்கரசு கையில் காசுடன் வெளியே புறப்பட்டான். டெலிபோன் பூத்துக்குச் சென்றான். கதவை மூடிக்கொண்டான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டான். அந்தக் காலை நேரத்தில் சாலையில் யாருமில்லை.

நாவுக்கரசு நடுங்கும் கையால் டெலிபோன் டைரக்டரியைப் புரட்டினான். பிறகு, வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தான்.

"இது போலீஸ் ஸ்டேஷன்தானே? மதுரையில் திருடிய ரங்கன் என்னும் பையன் சூளையில் பழனி என்ற பெயரோடு வசிக்கிறான். இப்போதே போய் அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றான்.

செய்தியை மறுபுறம் கேட்ட இன்ஸ்பெக்டர், "எந்த இடத்தில் அவன் தங்கியிருக்கிறான்? முகவரி என்ன?" என்று கேட்டார். நாவுக்கரசு, பழனி இருக்கும் வீட்டு முகவரியை மடமடவெனக் கூறினான்.

இன்ஸ்பெக்டர், "சரி, நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். நாவுக்கரசு தன்னை வெளிப்படுத்திக் கொள்வானா? பதில் சொல்லவில்லை. இன்ஸ்பெக்டர் "ஹலோ, ஹலோ" என்று கூப்பிட்டார். நாவுக்கரசு டெலிபோன் ரிசீவரை மாட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

நாவுக்கரசு சொன்ன செய்தியை இன்ஸ்பெக்டர் முழுக்க முழுக்க நம்பவில்லை. முழுக்க முழுக்கப் பொய் என்றும் தள்ளிவிடவில்லை. இரண்டு போலீஸ்காரர்களை அந்த முகவரிக்குப் போய்ப் பார்க்குமாறும், பழனி என்ற பெயரோடு மதுரையிலிருந்து வந்த சிறுவன் இருந்தால் அவனை ஸ்டேஷனுக்கு அழைத்து வருமாறும் கூறி அனுப்பினார்.

அந்தப் போலீஸ்காரர்கள்தான் பழனியை அழைத்துச் சென்றனர். பழனி ஸ்டேஷனுக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் அங்கே இல்லை. அவர் வீட்டுக்குப் போயிருந்தார்.

ஹெட்கான்ஸ்டபிள் பழனியை விசாரித்தார்.

"உன் பெயர் என்ன?"

"பழனி."

"எந்த ஊர்?"

"மதுரை."

"மதுரையிலிருந்து இந்த ஊருக்கு எப்போது வந்தாய்?"

"சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு."

"சரி, உன் பெயர் என்ன?"

"பழனி."

"இங்கே வைத்துக்கொண்ட பெயர் பழனி. அது தெரிகிறது. மதுரையில் உன் பெயர் என்ன?"

"பழனி."

"டேய் ரங்கா! யாரிடம் வேஷம் போடுகிறாய்?" என்று ஓர் அதட்டு அதட்டிவிட்டுத் தன் பெரிய கண்களால் அவனை நெருங்கிப் பார்த்துக் கேட்டார் அவர்.

"உன் பெயர் ரங்கன்தானே?"

"இல்லை."

"மதுரையில் நீ வேலை செய்த இடத்தில் ஏராளமான நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிவரவில்லை?"

"இல்லை… இல்லை… மதுரையில் நான் வேலையே செய்யவில்லை."

"அப்படியா? சரி… மதுரையில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? எங்கே தங்கியிருந்தாய்? உன் தந்தையின் பெயர் என்ன? தாயின் பெயர் என்ன?"

இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பழனி திகைத்தான். அவன் திருடனா? இல்லை! அவன் பெயர் ரங்கனா? அதுவுமில்லை. இதை நிரூபிக்கத் தன் தந்தையின் பெயரையும் அவர் முகவரியையும் அவன் சொல்லலாம். ‘பாசு’ என்று அழைக்கப்படும் பா.சுந்தரேசர் – பாசு ஆலையின் உரிமையாளர் என் தந்தை எனச் சொன்னால் ஹெட்கான்ஸ்டபிள் என்ன, இன்ஸ்பெக்டரே கூட அதிர்ச்சி அடைவார். "வேண்டுமானால் டிரங்காலில் கூப்பிட்டுப் பேசுங்களேன்" என்றும்கூட அவன் சொல்லலாம். பாசுவின் மகன் என்பது தெரிந்ததும் அவனுக்கு ராஜ மரியாதை கிடைக்குமே!

ஆனால் பழனி செய்தது என்ன?

தந்தையின் புகழைக் காட்டித் தான் வெளியே வர விரும்பவில்லை. தந்தைக்கு இந்த நிலையில் தான் இருப்பது தெரியவும் கூடாது. அதனால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நின்றான்.

"ஏன் பேசாமல் நிற்கிறாய்? உண்மை வெளிப்பட்டு விட்டதே என்ற பயத்தால்தானே? திருட்டுப்பயலே, எங்கே நீ திருடிய நகைகள்?" ஹெட்கான்ஸ்டபிள் கேட்டார்.

"ஐயா! நான் ரங்கன் இல்லை. நான் எங்கும் எதையும் திருடியதில்லை. என்னை விரைவில் வீட்டுக்கு அனுப்புங்கள்" என்று சொன்னான்.

"வீட்டுக்கா? இரு, இரு! நல்ல கம்பிபோட்ட கதவு இருக்கும் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன். அதுவரை இங்கேயே இரு" என்று சொல்லிப் பழனியை அதே அறையில் இருக்கச் செய்தார்.

ஒன்பதே முக்கால் மணிக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். பழனி ஆவலோடு எழுந்துநின்று பார்த்தான். அன்றொருநாள் தான் பணப்பை கொண்டு வந்து கொடுத்தபோது பாராட்டினாரே அவராக இருக்கும் என்று நம்பிக்கையோடு பார்த்தான். என்ன ஏமாற்றம்! அவர் இல்லை. வேறு புதிய இன்ஸ்பெக்டர்.

ஹெட்கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் தான் பழனியை விசாரித்ததைப் பற்றிச் சொன்னார். "எனக்கு இவன்மேல் சந்தேகம் சார்! மதுரையில் எங்கே இருந்தான், பெற்றோர் யார் என்று கேட்டால் வாயே திறக்கமாட்டேன் என்கிறான்" என்றார்.

இன்ஸ்பெக்டர் பழனியை அழைத்தார். அவன் முகம் அவரைக் கவர்ந்தது.

"தம்பி, நீ ரங்கன் இல்லை என்கிறாயாம். அப்படியானால் மதுரையில் நீ எங்கே இருந்தாய், உன் பெற்றோர் யார் என்பவற்றைச் சொல்லலாமே?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"மன்னிக்கவேண்டும் சார்! என் பெற்றோர் பேரை நான் சொல்லப் போவதில்லை. தயவுசெய்து என்னை அதற்காக மன்னிக்கவேண்டும்! ஆனால் நான் ரங்கன் அல்ல. என் பெயர் பழனி. சென்னை வந்த புதிதில் ஐம்பதாயிரம் ரூபாய் கொண்ட பணப்பை என்னிடம் கிடைத்தது. அதை இதே போலீஸ் ஸ்டேஷனில்தான் கொண்டு வந்து ஒப்படைத்தேன். அப்போது இன்ஸ்பெக்டராயிருந்தவர் என்னைப் பாராட்டினார். நீங்களே சொல்லுங்கள், நான் திருட்டுப் பயலாயிருந்தால் ஐம்பதாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுப்பேனா?" என்று கேட்டான் பழனி.

"ஐம்பதாயிரம் ரூபாயை நீயா திருப்பிக்கொடுத்தாய்? ஹெட்கான்ஸ்டபிள், இந்தச் சம்பவம் உனக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

ஹெட்கான்ஸ்டபிள் தலையைச் சொரிந்தார். பிறகு, "ஆமாம் சார்! ஒரு பையன் பணப்பை கொண்டு வந்து கொடுத்த சேதி தெரியும். சம்பவம் நடந்த அன்று நான் லீவ். அது பேப்பரில் கூட வந்திருந்ததே" என்றார்.

இன்ஸ்பெக்டர் உடனே ஸ்டேஷனில் இருந்த பேப்பர் பைலைக் கொண்டு வரச்சொல்லிப் புரட்டினார். அதில் பழனி பணப்பையைக் கண்டுபிடித்த செய்தி இருந்தது. இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்துவிட்டுத் திருப்தி அடைந்தார்.

"தம்பீ… நீ சொன்ன செய்தி இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். பழனியும் இன்ஸ்பெக்டர் தன்னை விட்டுவிடுவார் என்று மகிழ்ந்தான். அதற்குள் ஹெட்கான்ஸ்டபிள் அந்தப் பத்திரிகையைப் புரட்டினார். உடனே, "சார்! இதைப் பாருங்கள்" என்று சொன்னார்.

இன்ஸ்பெக்டர் பார்த்தார். அங்கே ஒரு பையனின் படம் இருந்தது. கீழே அவன்தான் பணப்பையைக் கண்டுபிடித்த பழனி என்று எழுதியிருந்தது. இன்ஸ்பெக்டர் படத்தையும் பழனியையும் மாறிமாறிப் பார்த்தார். படத்தில் இருக்கும் பையன் அல்ல எதிரே இருப்பவன் என்பது புரிந்தது. பழனி இதைக் கவனித்தான். காளியின் படத்தையல்லவா பழனியின் படம் என்று பிரசுரித்திருந்தார்கள்? அப்போது பழனிக்கு நன்மை புரிந்த படம் இப்போது தீமை புரிந்தது.

"தம்பீ, இது உன் படம் அல்லவே! நீதான் பழனி என்று சொன்னால் எப்படி நம்புவது? நீ யார் என்பது தெரியும்வரை இங்கே இருக்கவேண்டும்!" என்றார்.

பழனி கலங்கினான். அவன் எப்படித் தேர்வு எழுதுவது? ஸ்டேஷனில் இருந்த கடிகாரம் பத்து மணி என்பதைக் காட்ட மணியடித்தது. பழனி கடிகாரத்தைப் பார்த்தான். அவன் கண்கள் நீரைச் சொரிந்தன. ஒவ்வொரு மணியோசையும் அவன் இதயத்தில் சம்மட்டியால் அடிக்கும் ஓசையாக வேதனை தந்தது.

"என் இலட்சியம் போனது! தேர்வு இனிமேல் எழுத முடியாது! ஒரு வருடம் வீண்! என் இலட்சியம் பாழ்" என்று எண்ணிய பழனி குமுறி அழுதான்.

"தம்பீ, ஏன் அழுகிறாய்? உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். நீ ரங்கன் இல்லை என்பது தெரிந்ததும் விட்டுவிடுவோம். அழாதே" என்று ஆறுதல் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

பழனி அழுகைக் குரலிலேயே, "இன்ஸ்பெக்டர் சார்! மணி பத்து. இந்நேரம் எங்கள் பள்ளியில் தேர்வு தொடங்கியிருக்குமே. நீங்கள் விட்ட பிறகு எப்படி சார் நான் தேர்வு எழுத முடியும்? ஒரு வருஷம் படிப்பு வீணாகுமே" என்று கேட்டான்.

இன்ஸ்பெக்டர் திகைத்தார்.

"தம்பீ, நீ படிக்கிற பையனா? எங்கே படிக்கிறாய்?"

பழனி தன் பள்ளியின் பெயரைச் சொன்னான்.

"இதை நீ முதலிலேயே சொல்லக்கூடாதா? தேர்வு எழுதவேண்டிய உன்னை இங்கே தடுத்து நிறுத்துவோமா? உம்! புறப்படு. போய் தேர்வு எழுது. எழுதி முடித்த பிறகு வந்தால் போதும். உடனே போ" என்ற இன்ஸ்பெக்டர், "பத்து மணிக்குத் தேர்வு என்றால் நீ நடந்து போவதற்கு நேரமாகுமே. ஹெட்கான்ஸ்டபிள்! நம் ஜீப்பில் இவனை அழைத்துக் கொண்டு போய்ப் பள்ளியில் விட்டுவிட்டு வா" என்றார்.

ஹெட்கான்ஸ்டபிள் தயங்கினார். "சார்! ஒருவேளை இவனே ரங்கனாயிருந்து, தப்பி ஓடிவிட்டால்…" என்று இழுத்தார்.

"எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொன்னதை உடனே செய்" என்று போலீஸ் குரலில் உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர். ஹெட்கான்ஸ்டபிள் அடங்கி ஓடினார்.

பழனி இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் செய்தான்.

"நன்றி சார்! இந்த உதவியை மறக்கவே மாட்டேன். தேர்வு ஒரு மணி வரையில். தேர்வு முடிந்ததும் நான் நேரே இங்கே வருகிறேன் சார்" என்றான்.

"நல்லது. நேரமாகிறது. சென்று வா! தேர்வு நன்றாக எழுது; சிறந்த வெற்றி உனக்குக் கிடைக்கும்" என்று வாழ்த்தினார் இன்ஸ்பெக்டர்.

பழனி பறந்து சென்று ஜீப்பில் ஏறினான். ஜீப் திருவொற்றீஸ்வரர் பள்ளியின் முன் நின்றது. பழனி அதிலிருந்து இறங்கினான். ஹெட்கான்ஸ்டபிளிடம் "நன்றி" என்று கூறிவிட்டுப் பள்ளிக்குள் சென்றான். அவன் வகுப்பறைக்குள் நுழைந்ததைப் பார்த்தபின்பே ஹெட்கான்ஸ்டபிள் ஜீப்பில் திரும்பிச் சென்றார்.

மணி பத்தேகால்! பழனி அப்போதுதான் தேர்வு நடக்கும் அறைக்குள் நுழைந்தான். இன்னும் கால்மணி நேரம் கழித்து வந்திருந்தால் அவனைத் தேர்வு எழுத அனுமதித்திருக்க மாட்டார்கள்.

பழனியைக் கண்ட ஆசிரியரின் முகம் மலர்ந்தது. "பழனி! வந்துவிட்டாயா? உம், சீக்கிரம் உட்கார்! தேர்வு எழுது" என்று கூறிக்கொண்டே வினாத்தாளை அவனிடம் கொடுத்தார்.

அது இலவச உயர்நிலைப்பள்ளி. அதனால் தேர்வுக்குரிய விடைத்தாளை மாணவர்களே கொண்டு வரவேண்டும். பழனி நல்ல வெள்ளைத்தாளை வாங்கி வீட்டில் வைத்திருந்தான். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்ததனால் அவனிடம் தாளும் இல்லை; பேனாவும் இல்லை.

ஆசிரியரிடம் பழனி தன் நிலைமையை விளக்கினான். "சார் எதிர்பாராதவிதமாக ஏதேதோ நடந்து விட்டது சார். நான் பேனாவும்
கொண்டுவரவில்லை. பேப்பரும் கொண்டுவரவில்லை" என்றான்.

அவனைப் பார்த்தபோதே – அவன் நேரம் கழித்துத் தேர்வுக்கு வந்தபோதே ஏதோ எதிர்பாராத நிகழ்ச்சி நடந்திருக்கும் என்று யூகித்திருந்தார் ஆசிரியர். பழனியே அதைச் சொல்லிவிட்டான். உடனே ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, "மாணவர்களே, நம் பழனி தேர்வுக்குப் பேப்பர் கொண்டு வரவில்லை. அதிகமாக யாராவது கொண்டு வந்திருந்தால் கொடுங்கள்" என்றார்.

உடனே பலர் எழுந்து தாள் கொடுத்தார்கள். ஆசிரியர் அவற்றை வாங்கினார். தேவையான அளவு பழனியிடம் கொடுத்தார். மற்றவற்றை, கொடுத்த மாணவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். பிறகு தன்னுடைய பேனாவைப் பழனியிடம் கொடுத்தார். பழனி நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டான்.

மதுரை மீனாட்சியை மனத்தில் நினைத்தான். வணங்கினான். பிறகு வினாத்தாளைப் படித்தான். வேகமாக எழுதினான். விடைகள் பேனாவுக்குள் ஒளிந்து கொண்டிருந்ததைப்போல ஓடிவந்து விழுந்தன! இத்தனைக்கும் பழனி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. பசியைச் சற்றும் பொருட்படுத்தாது விடையை எழுதினான்.

கடைசிமணி அடிக்கச் சில நிமிடங்களுக்கு முன்பே பழனி விடை எழுதி முடித்துவிட்டான். விடைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

பள்ளி ப்யூன் அவனிடம் வந்தான். "பழனி! தலைமை ஆசிரியர் உன்னை அழைத்துவரச் சொன்னார்" என்று சொன்னான்.

பழனி தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றான். தலைமையாசிரியருடன் அறையில் வேறு ஒருவர் இருப்பதையும் பார்த்தான். அவர் யார் தெரியுமா? காலையில் அவன் கண்ட இன்ஸ்பெக்டர்.

"ஒருவேளை நாம் திரும்பிவராமல் ஓடிப்போய் விடுவோமோ என்று சந்தேகப்பட்டு அவரே இங்கு வந்து விட்டார் போலிருக்கிறது" என்று நினைத்தான் பழனி.

தலைமை ஆசிரியர் முன்னே பழனி நின்றான். "பழனி! காலையில் நடந்த செய்திகளை இன்ஸ்பெக்டர் கூறினார். இப்போது அவர் எதற்காக வந்திருக்கிறார் தெரியுமா?"

"சரியாகத் தெரியாது சார். தேர்வு முடிந்ததும் நான் ஸ்டேஷனுக்கு வருவதாகச் சொன்னேன். என்னை அழைத்துப் போவதற்காக வந்திருப்பார் சார்" என்றான் பழனி.

“இல்லை பழனி! நான் அதற்காக வரவில்லை. உன்னிடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்தேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டர் சொன்னது பழனிக்குப் புரியவில்லை. ‘இன்ஸ்பெக்டர் என்னிடம் மன்னிப்பு கேட்பதா?’ என்று அவன் வியந்தான்.

"பழனி! நீ ரங்கன் இல்லையென்பது நிச்சயமாகி விட்டது. நீ பழனியேதான் என்பதை உங்கள் தலைமை ஆசிரியரிடமிருந்து தெரிந்துகொண்டேன். பழனி, உண்மையான திருட்டுப்பயல் ரங்கனைச் செங்கல்பட்டில் நேற்றிரவே கைது செய்துவிட்டார்கள் என்ற செய்தி பதினோரு மணிக்குத்தான் கிடைத்தது. அந்த ரங்கனிடமிருந்து சில நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். அவனுக்கு உதவி செய்த வேறொரு ஆளையும் அவனுடன் கைது செய்துவிட்டனர். யாரோ தந்த பொய்யான செய்தியால் உன்னைத் தொந்தரவு செய்துவிட்டோம். அதுவும் தேர்வு எழுதவேண்டிய நாளில் இப்படி நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்றார் இன்ஸ்பெக்டர்.

பழனி தன் சுமையெல்லாம் இறங்கிவிட்டதைப் போல இன்பமடைந்தான். இனிமேல் நடக்கும் தேர்வுகளை நன்றாக எழுதலாமல்லவா?

பழனி, "சார்! சமயத்தில் என்னை அனுப்பித் தேர்வு எழுத உதவி செய்தீர்கள். அந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்" என்றான்.

"பழனி, பொய்த்தகவலைச் சொன்ன குரல் சிறுவன் குரல்போல் பட்டது. உன்னைப் பிடிக்காதவர்கள் யாராவது இப்படிச் செய்திருக்கலாம். உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?" இன்ஸ்பெக்டர் கேட்டார்.

பழனி சற்றும் தயங்காமல், "இல்லை சார். எனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை" என்றான். தலைமை ஆசிரியர், "பழனி! ஒரு வேளை முன்பு சைக்கிளைத் திருடிச் சென்றதைப்போல நாவுக்கரசே இதையும் செய்திருப்பானோ?" என்று கேட்டார்.

"இருக்காது சார். நாவுக்கரசு இப்படிச் செய்யமாட்டான் என்று நான் நம்புகிறேன் சார்" என்று உறுதியாகச் சொன்னான் பழனி.

தலைமை ஆசிரியர் பழனியின் உள்ளத்தைப் புரிந்து கொண்டார். நாவுக்கரசின் பெயரை இழுப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இன்ஸ்பெக்டர் தலைமை ஆசிரியரிடமும் பழனியிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். பசி பொறுக்காத பழனியும் மெல்ல நடந்து சாப்பிடச் சென்றான்.

சாப்பிடும் இடத்தில் காளி காத்திருந்தான். காலையில் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பியபோது பழனி அறையில் இல்லை. அறை பூட்டியிருந்தது. ‘சரி, சாப்பிடப் போயிருப்பான்’ என்று நினைத்துத் தன் வேலைக்குப் போய்விட்டான். அதனால் பகலாவது பார்ப்போம் என்று காத்திருந்தான்.

பழனி சோர்வோடு வந்து சேர்ந்தான். "என்ன பழனி, இப்படியிருக்கிறாய்? தேர்வு எப்படி எழுதினாய்?" என்று கேட்டான் பழனி.
"அப்புறம் சொல்கிறேன். வா, முதலில் சாப்பிடுவோம்" என்று சாப்பிட உட்கார்ந்தான். காளியும் அருகே உட்கார்ந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பின் தங்கள் அறைக்குச் சென்றனர். அங்கே, பழனி காலையில் நடந்ததைச் சொன்னான். ஆபத்து வந்ததும் போனதும் சொன்னான். காளிக்கு அது ஒரு கதையைப் போல இருந்தது. "தக்க சமயத்தில் உன்னைப் பள்ளிக்கு ஜீப்பில் அனுப்பினாரே, அந்த இன்ஸ்பெக்டர் வாழ்க" என்று பாராட்டினான் காளி.

பழனி மற்றைய தேர்வுகளை மிக நன்றாக எழுதினான். இன்னும் ஒரே ஒரு தேர்வு மிச்சம். அதை எழுதிவிட்டால் தேர்வு முடிகிறது. பள்ளியும் முடிந்து விடுமுறை துவங்குகிறது. அதன்பின் சென்னையில் அவனுக்கு வேலை இல்லை. அவன் மதுரைக்குச் செல்லலாம்.

பழனி மதுரைக்குச் செல்வதைப் பற்றி யோசித்தான். அதை எப்படிக் காளிக்குச் சொல்வது? அதுதான் புரியவில்லை.

மறுநாள் கடைசித் தேர்வு. அதற்குப் படிப்பதையும் நிறுத்திவிட்டுப் பழனி யோசித்தான். "தன் பிரிவைக் காளி எப்படிப் பொறுத்துக் கொள்வான்? அவனையும் மதுரைக்கே அழைத்துச் செல்லலாமா? அழைத்தால் வருவானா?"

யோசனைக்கு முடிவே இல்லை. "போஸ்ட். காளித் தம்பி!" என்ற குரல் கேட்டது. பழனி எழுந்தான். அறைக்கு வெளியே சென்றான். தபால்காரன் நீட்டிய கவரை வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்தான். கவரைக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தான்.

அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. கண்கள் அதிசயத்தால் அகல விரிந்தன. உள்ளம் உவகையால் நிறைந்தது. அவன் அந்தக் கடிதத்தை எல்லையற்ற சந்தோஷத்தோடு மற்றொரு முறையும் படித்தான்.

அவ்வளவு மகிழ்ச்சியை அவன் இதற்குமுன் அடைந்ததே இல்லை.

சென்னையில் காளியின் துணை கிடைத்தபோதும் அத்தகைய மகிழ்ச்சியடையவில்லை. பள்ளியில் சேர்ந்தபோதும் அந்த மகிழ்ச்சி அவனிடம் சேரவில்லை. மாணவர் தலைவனாக வெற்றி பெற்ற போதும் அந்த மகிழ்ச்சியில்லை! தொடர்கதைப் போட்டியில் பரிசு பெற்றபோதும் அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை.

அந்த மகிழ்ச்சியையெல்லாம் கடந்த ஒரு மகிழ்ச்சியை இந்தக் கடிதம் கொண்டு வந்தது.

–அடுத்த இதழில் முடியும்…

About The Author