கிளியோபாட்ரா-32

தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரோமானியப் பேரரசராக முடிசூட வேண்டும் என்றும் ஆசைப்பட்ட ஆண்டனி, பெரும் படையைத் திரட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான். அவனது ஆவேச வருகையை அறிந்த எதிரி நாட்டினர் பலர் பயந்து போயினர். அவனைத் தலைகுனிந்து வரவேற்றனர்.

ரோமாபுரியில் இருந்து முதன்முதலாக அவன் சென்ற நாடு கிரீஸ். ஏற்கனவே ரோமாபுரியின் ஆதிக்கத்தில் அந்த நாடு இருந்ததால், அந்நாட்டு மக்கள் ஆண்டனிக்கும், அவனது படைக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்குள்ளவர்கள் அவனை இன்னொரு சீஸராகவே கருதி மரியாதை கொடுத்தனர். அத்துடன், "ஹெர்க்குலிஸ்" என்ற போர்க் கடவுளாகவும், "டயோனிசஸ்" என்ற புதிய மதுக் கடவுளாகவும் ஆராதிக்கப்பட்டான்.

கிரீசை அடுத்து ஆசியா மைனருக்கு அவன் சென்றபோதும் அதே உற்சாக வரவேற்பு தொடர்ந்தது. தொடர்ந்து, அங்கிருந்து எகிப்துக்குப் பயணமானான். அந்த நாடு ரோமப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும், அங்கு ரோமானிய படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், சுதந்திர நாடாகவே திகழ்ந்தது.

இதற்குக் காரணம், அந்த நாட்டின் பேரரசி கிளியோபாட்ரா மீது சீஸர் கொண்ட இனம் புரியாத பேரன்புதான். அதனால்தான், எகிப்தைக் கைப்பற்றினாலும் கிளியோபாட்ராவிடமே ஒப்படைத்துவிட்டார்.

இப்போது சீஸர் இல்லாததாலும், கிளியோபாட்ராவின் பேரழகு மீது ஏற்கனவே தான் ஒரு கண் வைத்திருந்ததாலும், நம்பிக்கையோடு எகிப்து சென்றான் ஆண்டனி. தன்னை புதிய சீஸராகவே அவன் நினைத்துக் கொண்டான்.
கி.மு.41ல் எகிப்தை பெரும் படையுடன் சென்றடைந்தான் ஆண்டனி. அப்போது அவனது வயது நாற்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கிளியோபாட்ராவின் வயது இருபத்தெட்டு…

எகிப்து வந்து சேர்ந்த ஆண்டனி, அங்கு முதல் ஆளாக சந்திக்க ஆசைப்பட்டது கிளியோபாட்ராவைத்தான். ஆனால், அவன் மனதிற்குள் தான் இன்னொரு சீஸர் என்ற மமதை எண்ணம் இருந்ததால், கிளியோபாட்ராவைத் தன்னை வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டான்.

ஆண்டனி, கிளியோபாட்ராவைச் சந்திக்க இன்னொரு காரணமும் இருந்தது. இப்போது அவனது ஆளுகையின் கீழ் ரோமப் பேரரசுக்கு உட்பட்ட கீழை நாடுகள் பல இருந்தன. அவற்றிற்கு எல்லாம் தலைமையிடமாக எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆசைப்பட்டான்.

அலெக்ஸாண்டிரியாவில் இருந்த கிளியோபாட்ராவிடம் ஆண்டனியின் உத்தரவு பற்றி கூறப்பட்டபோது, அவள் சற்றே கோபப்பட்டது என்னவோ உண்மைதான். தன்னை அவன் சந்திக்க வருவான் என்று அவள் உரிமையோடு எதிர்பார்த்தாள். ஆனால், அது நடைபெறாதபோது, ஆண்டனியைப் போய் சந்திப்பது என்றும் முடிவு செய்து கொண்டாள்.

மேலும், கிளியோபாட்ரா மீதான சில குற்றச்சாட்டுகள் ஆண்டனியின் கவனத்திற்கு வந்திருப்பதாக அந்த தூதுவன் அவளிடம் கூறினான். அதற்கு அவள் பதில் அளிக்கையில், "மன்னராட்சி நடைபெறும் இந்த எகிப்தில் அரசி மீது கூறப்படும்
குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது. அதை ஆண்டனியிடம் கூறவும் எனக்கு விருப்பம் இல்லை. நட்பு பாராட்டுவது என்றால் மாத்திரமே என்னால் அங்கே வரமுடியும்" என்று கூறி, அவனை அனுப்பிவிட்டாள்.

சில நாட்களுக்குப் பிறகு ஆண்டனி மற்றும் கிளியோபாட்ராவின் சந்திப்பு நிகழ்ந்தது. டார்சஸ் நகரில் அவர்களது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பேரழகியான கிளியோபாட்ரா தன்னை ஆடம்பரமாக அலங்கரித்துக் கொள்வது என்பது அவளது இயல்போடு இணைந்த ஒன்று. அதுமட்டுமின்றி, தன்னோடு இணைந்த சூழ்நிலைகளையும் அவள் ஆடம்பரமாக்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். சீஸருக்கு கூட அவளது பேரழகு மட்டுமின்றி, அவளது தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கையும்தான் பிடித்துப்போய் இருந்தது.
சீஸர் தன்னை விரும்ப காரணமாக இருந்த அதே அழகையும், ஆடம்பரத்தையும் மீண்டும் ஒரு காதல் ஆயுதமாகப் பயன்படுத்தினாள் கிளியோபாட்ரா. ஆம்… டார்சஸ் நகருக்கு ஆண்டனியைச் சந்திக்கப் புறப்பட்ட கிளியோபாட்ரா, தன்னைப் பேரழகிக்கும் பேரழகியாக அலங்கரித்துக் கொண்டாள்.

அவள் மேனியில் மோதிய அந்தப் பாலைவனக் காற்று கூட சிலிர்த்துக் கொண்டு குளிர்ந்து போனது. கிளியோபாட்ரா மட்டுமின்றி அவளுடன் வந்த தோழியரும் அரசிளங்குமரிகளாகவே தகதகத்தனர். அந்த அளவுக்கு ஆடம்பரம் அவர்களிடம் கொட்டிக் கிடந்தது.

இந்தநேரத்தில் ‘ஹெர்மாச்சிஸ்’ என்ற வரலாற்று ஆசிரியர், கிளியோபாட்ரா பற்றி விட்டுச் சென்ற குறிப்புகளை அலசும்போது, "இவ்வளவு கம்பீரமாகவும்- ஆடம்பரமாகவுமா கிளியோபாட்ரா வாழ்ந்தாள்?" என்ற கேள்வி நம்முள் எழுகிறது.

"கிளியோபாட்ராவிடம் இயல்பாகவே ஆடம்பர மோகம் இருந்தது. அவள் தேரில் பயணிக்கும்போது, தேருக்கு முன்பாக யானைகளும், பின்னால் சிங்கங்களும் அணிவகுத்து வரும். அவள் பவனி வந்த தேர் தங்கத்தால் செய்யப்பட்டு மினுமினுத்தது. அவளைத் தாங்கிய ரதத்தை வெள்ளைக் குதிரைகள் மாத்திரமே இழுத்து வந்தன. தேர் மட்டுமின்றி, தனது தலையில் கூட இரண்டு பொன்னால் ஆன கொம்புகளுக்கு இடையே சந்திரன் தோன்றுவது போன்ற அடையாளச் சின்னத்தைச் சூடியிருந்தாள். மரகதக் கற்களும், மாணிக்கப் பரல்களும், பவளமும் பதிக்கப்பட்ட பட்டைகளைக் கழுத்தில் அணிந்திருந்தாள். அவளது அழகிய கரங்களுக்குப் பொன்னால் ஆன காப்புகள் அழகு சேர்த்தன…" என்று குறிப்பிடுகிறார் ஹெர்மாச்சிஸ்.

இப்போது ஆண்டனியைத் தனது சொந்த நாட்டில் சந்திக்கப் போகும் போதும் அதே ஆடம்பரத்துடன் புறப்பட்டாள். டார்சஸ் நகரைச் சென்றடைய நீளமான நைல் நதியின் ஒரு கிளையைப் படகில் கடந்தாக வேண்டும். அதற்குத் தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகும் பொன் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நிலத்தை முத்தமிடும் அளவுக்கு நீண்டிருந்த ஆடையை அணிந்தபடி டார்சஸ் நகரை நோக்கி படகில் பயணித்தாள் அவள். யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே… என்பதுபோல், கிளியோபாட்ராவின் வருகையை முந்திச் சென்று ஆண்டனிக்கு உணர்த்தின, அவளது ஆடம்பரமும், அவள் மேனியில் இருந்து வெளிப்பட்ட வாசனைத் திரவியங்களின் நறுமணமும்!

இந்தநேரத்தில் வரலாற்று ஆசிரியர் ‘புளுடார்ச்’, படகில் கிளியோபாட்ரா வந்த அழகை வர்ணிக்கும் பாங்கும் தனி அழகுதான்.
"நைல் நதியில் படகில் பயணித்த கிளியோபாட்ரா பார்ப்பதற்கு, கிரேக்க காதல் கடவுளான "வீனஸ்" போலவே இருந்தாள். அவளுடன் வந்தத்தோழிப் பெண்கள் காதல் தேவதைகளாகவே ஜொலித்தனர். அவர்கள் கிளியோபாட்ராவுக்கு சாமரம் வீசியபடி வந்தனர்…. படகில் துடுப்பு போட்டவர்கள் ஆண்கள் அல்ல. அனைவரும் அழகான பணிப் பெண்கள். அவர்கள் பயன்படுத்திய துடுப்புகள் வெள்ளியால் செய்யப்பட்டு இருந்தன. குழல், யாழ் இசைப்பவர்கள் தங்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்தனர். அதை கிளியோபாட்ரா ரசித்தபடியே வந்தாள். விலை உயர்ந்த வாசனைத் திரவியங்கள், புகை மூட்டப்பட்டு நறுமணத்தை அந்த நதிக் காற்றில் மிதக்கவிட்டன. அந்த நறுமணம் நைல் நதியையே மணக்க வைத்தது…. கிளியோபாட்ரா வருகை புரிந்த இந்த பேரழகு காட்சியைக் காண்பதற்கென்றே டார்சஸ் துறைமுகத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்…" என்று, கிளியோபாட்ராவின் டார்சஸ் வருகையை வரலாற்றில் பதிவு செய்கிறார் புளுடார்ச்.

கிளியோபாட்ராவைக் காண டார்சஸ் நகர மக்களே துறைமுகத்திற்குத் திரண்டு வந்ததால், ஆண்டனியும் தனது படைவீரர்களுடன் அங்கே வந்திருந்தான். கிளியோபாட்ரா வருகையை ஆவலோடு எதிர்பார்த்து நின்றிருந்தான்.
படகில் இருந்து தனது பாதங்களால் தரையை முத்தமிட்ட கிளியோபாட்ராவைப் பார்த்த ஆண்டனி, அசையா சிலையானான். வானில் இருந்து வந்த தேவதை போல ஜொலித்த கிளியோபாட்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி வியந்து நின்றான்.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

  1. uma

    படகில் இருந்து தனது பாதங்களால் தரையை முத்தமிட்ட கிளியோபாட்ராவைப் பார்த்த ஆண்டனி, அசையா சிலையானான். -supper sentence

Comments are closed.