கிளியோபாட்ரா (38)

அலெக்ஸாண்டிரியாவில் இருந்து ரோமிற்கு ஆண்டனி வந்து ஆறு மாதங்கள் வேகமாக ஓடியிருந்தன. ஒருபுறம் ஆசைக் காதலி கிளியோபாட்ரா இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்தபடி நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, மறுபுறம் மறுமணம் செய்து கொண்ட ஆக்டேவியாவுடன் இன்பமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

திருமணமான சில மாதங்களிலேயே ஆண்டனி மூலம் கர்ப்பம் தரித்தாள் ஆக்டேவியா. அவளது வயிற்றில் பெண் சிசு உருவாகியிருந்தது. இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிளியோபாட்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அலெக்ஸாண்டிரியாவில் இருந்து மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் கைதேர்ந்த மருத்துவச்சிகள் முன்னதாகவே வரவழைக்கப்பட்டு இருந்தனர். கிளியோபாட்ராவுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையும், அதைத் தொடர்ந்து பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தை அலெக்ஸாண்டர் ஹெலியோஸ் என்றும், பெண் குழந்தை கிளியோபாட்ரா செலின் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆண்டனி மூலம் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை ஆசையோடு எடுத்து முத்தமிட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்த சிறுவனான டாலமி சீஸர் இரு குழந்தைகளையும் ஆசையோடு தொட்டு சிலிர்த்தான்.

கிளியோபாட்ரா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தகவல் ரோமாபுரிக்கும் பறந்தது. ஆனால், ஆண்டனியோ ஆக்டேவியாவுடன் ஏதென்சுக்குச் சென்றிருந்தான். அங்கிருந்தபடி தனது கட்டுப்பாட்டிற்குள் வந்த நாடுகளை ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தான் அவன். அங்குள்ள பிரம்மாண்ட அரண்மனையில் புதிய மனைவி ஆக்டேவியாவுடன் குடும்பம் நடத்தி வந்தான். ஆக்டேவியாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஆக்டேவியா மிகவும் அழகானவள்தான். ஆனால் நாட்கள் நகர நகர, குழந்தையைப் பெற்றெடுத்த ஆக்டேவியா பொலிவிழக்கத் தொடங்கினாள். ஆண்டனிக்கும் அவள் மீதான மோகம் வெகுவாகக் குறைந்தது. அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்ட அதே நேரம் ஆக்டேவியாவின் சகோதரன் ஆக்டேவியனுக்கும், ஆண்டனிக்கும் இடையே பனிப்போர் துவங்கி இருந்தது.

ஆண்டனிக்கும் கிளியோபாட்ராவுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் ஆண்டனியின் போர் நடவடிக்கைகள் பற்றியும் குற்றம் சுமத்தினான். மூவர் கூட்டணியின் உடன்பாடுகளை ஆண்டனி மீறுவதாகவும் குற்றம் சாட்டினான்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ஒரு நாள், ஆக்டேவியாவுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டான் ஆண்டனி.

"ஆக்டேவியா! உன் சகோதரனைக் கண்டித்து வை. அவன், மூவர் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி செக்ஸ்டஸ் பாம்பேவுக்கு எதிராக போர் செய்திருக்கிறான். தனது எதிர்காலத் திட்டம் பற்றிய அறிக்கை வெளியிட்டு இருப்பதோடு, என்னைப் பற்றியும் அவதூறு பேசி இருக்கிறான். ".

"நீங்கள் தவறாக கருத வேண்டாம். யார், யாரோ சொல்வதையெல்லாம் நம்ப வேண்டாம். ஆக்டேவியன் என் சகோதரன். நமக்கு எதிராக எதையும் சொல்லியிருக்க மாட்டார்".

"நீதான் உன் சகோதரனை மெச்சிக் கொள்ள வேண்டும். அவன் என்னைப் பற்றி தவறாக பேசியது உண்மை. ".

"என் மனைவியாக உன்னிடம் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கிறேன்".

"என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன்".

"எனக்காக நீ தூது செல்ல வேண்டும்".

"என்ன தூது? "

"உன் சகோதரனிடம்தான் நீ தூது செல்ல வேண்டும் மிக விரைவிலேயேஎனக்கும், அவனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதான் தீர்வு காண வேண்டும். அந்தத்தீர்வு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும்" என்ற ஆண்டனி, அங்கிருந்து சட்டென்று வேகமாக வெளியேறினான்.

சில நாட்களில் ஆக்டேவியா, ஆண்டனியிடம் விடைபெற்று ஏதென்சில் இருந்து ரோமாபுரிக்குப் புறப்பட்டாள். அவளது கையில் ஒரு பெண் குழந்தை இருக்க… அவளது வயிற்றில் ஆண்டனியின் இன்னொரு வாரிசும் உருவாகத் துவங்கி இருந்தது. அதுவும் பெண் குழந்தைதான்!

(இன்னும் வருவாள்…)

About The Author