குண்டாகலாமா குழந்தைகள்? – உலகை அச்சுறுத்தும் புதிய பிரச்சினை

பிரித்தானியாவின் பிரபல செய்தித்தாளான டெய்லி மிரர் அண்மையில் வெளியிட்ட செய்தியொன்று கவலைக்கும் கவனத்துக்கும் உரியது. பிரித்தானியாவில் குழந்தைகள் பல குண்டாக இருப்பதும் அதற்காகச் சிகிச்சை எடுப்பதும் இச்செய்தியில் சொல்லப்பட்டிருந்தது. 10 மாதக் குழந்தைக்குக் கூட அதிக உடல் எடைக்காகச் சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்று இதில் சுட்டிக்காட்டியிருந்தது நம்மை உலுப்பியெடுக்கின்றது.

பிரித்தானியாவில், கடந்த 3 வருடங்களில் குறைந்தபட்சம் 15 வயதுக்கு உட்பட்ட 932 பிள்ளைகள், அதிக எடை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் அவசரச் சிகிச்சை தேவைப்பட்டதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. நான்கு வயதுப் பிள்ளைகளுள் ஐந்தில் ஒரு பிள்ளை கூடுதல் எடை கொண்ட பிள்ளையாக இருக்கின்றது என்பது நம்மை மேலும் திடுக்கிடச் செய்கிறது!

குழந்தைகள் குண்டாவது பிரித்தானியாவில் தொற்றுநோய் போலப் பரவத் தொடங்கியிருப்பதுதான் இந்தச் செய்திகள் மூலம் நாம் ஊகிக்கக் கூடியது! இன்றைய நிலையில் இரண்டு முதல் பத்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மூன்றில் ஒரு பிள்ளை அதிக எடை கொண்டதாக இருக்கின்றதாம்!!! வெளியில் வரும் தகவல்கள் அதிகமில்லை என்பதால் உண்மை நிலவரம் இன்னும் மிக மோசமாக இருக்கலாம் என்று பலரும் அச்சப்படத் தொடங்கி இருக்கின்றார்கள்.

சண்டே ரைம்ஸ் பத்திரிகை திரட்டிய தகவல்களின் அடிப்படையில் 2 வயதுக்கு உட்பட்ட பல பிள்ளைகள், 5 வயதுக்கு உட்பட்ட 101 பிள்ளைகள், இவர்களை விடச் சற்று வயது கூடிய 283 பிள்ளைகள் உடல் பருமனுக்குச் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை அறிய முடிகின்றது.

பிரிட்டன் விழித்தெழ வேண்டும் என்று பிள்ளை வளர்ச்சிநலன் பேணும் ஓர் அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான எடையோடு பிறக்கும் ஒரு குழந்தை எப்படி 10 மாதக் காலத்தில் குண்டாகி விடுகின்றது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; நமது வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டும்; உண்ணும் உணவில், அளவில் மிகக் கவனம் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

அதிக எடைகொண்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவின் தேசியச் சுகாதாரச் சேவை (NHS) ஆண்டுக்கு 4.2 பில்லியன் பவுண்டுகள் தொகை செலவிட்டு வருவதாக அறியப்படுகின்றது. பிரித்தானியாவில் இப்படிப் பிள்ளைகள் குண்டாவதும், சிகிச்சை பெறுவதும் கடந்த பத்தாண்டுக் காலத்தில் 4 மடங்காக அதிகரித்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை இன்னொரு ஆய்வு வெளிப்படுத்துகின்றது.

NHS தரும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2000இல் 872 பிள்ளைகள் அதிக எடைக்காகச் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டதாகவும், 2009இல் 3806 பிள்ளைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2000க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 5 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 21,000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

உலக சுகாதார அமைப்பு, குண்டாகிக் கொண்டே வரும் உலகை நினைத்துப் பெரிதும் அங்கலாய்க்கின்றது. 1980ம் ஆண்டிலிருந்து, உலக நாடுகளில் உடல் பருப்போர் தொகை இரட்டிப்பாகி இருக்கின்றது. 2008இல் எடுத்த ஒரு கணிப்பில் 20-க்கும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குமான உடல் எடை பற்றி ஆய்வு செய்ததில், வயது வந்தவர்களில் 1.4 பில்லியன் பேர் எடை அதிகரித்தவர்களாக இருப்பது தெரிய வந்தது. இந்தத் தொகையில் 200 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் ஆண்கள். ஏறத்தாழ 300 மில்லியன் வரையிலானவர்கள் பெண்கள்! 2011இல் எடுத்த ஒரு கணிப்பின்படி, 5 வயதுக்கு உட்பட்ட 40 மில்லியன் பிள்ளைகள், தேவைக்கு அதிகமான எடை கொண்டவர்களாக இருந்துதும் அறியப்பட்டுள்ளது.

துரித உணவு என்ற பெயரில் பலவற்றையும் சாப்பிட்டுக் கொழுப்பைக் கூட்டிக் கொள்பவர்கள் இன்று அதிகமாகிக் கொண்டு வருகின்றார்கள். அதிகமான இறைச்சி, வெண்ணெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், கோலா என்று விரும்பிச் சாப்பிடுபவர்கள் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. உடலில் சேரும் காலரிகளை எரிக்கும் நோக்கமே இல்லாமல், கொழுப்பான உணவுகளை அதிகமாக உண்டு வருவதால், பூமி குண்டர் உலகமாகிக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும், மரக்கறி, பழங்களை விரும்பி உண்ணுவோர் குறைந்து கொண்டே வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

2015இல் வயது வந்தவர்களில் எடைகூடியவர்கள் தொகை 2.3 பில்லியனாக அதிகரிக்கும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்கள். 2005இல் எடுத்த கணக்கெடுப்பின்படி, இத் தொகை 1.5 பில்லியன். கொழுத்தவர்கள் தொகை 400 மில்லியனிலிருந்து 700 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். (வயதுக்கு ஏற்பச் சராசரி எடை இருக்க வேண்டும். அதற்குச் சற்று அதிகமாக இருந்தால் அவர்களை எடை கூடியவர்கள் என்றும், மிக அதிகமாக இருந்தால் அவர்களைக் கொழுத்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார்கள்).

2010இல் உலகின் கொழுத்த நாடுகள் எவையென்று ஓர் ஆய்வை நடாத்தினார்கள்.

முதலிடத்தைப் பிடித்தது நவுரு (Nauru) என்ற தீவுதான். பொதுவாகவே, பசிபிக் தீவுவாசிகள் கொழுத்தவர்கள். இந்த நவுரு தீவில் பல கொண்டாட்டங்கள், இங்குள்ளவர்களைக் கொழுக்க வைப்பதற்காகவே நடாத்துகின்றார்களாம். வெட்டப்போகும் ஆட்டுக்கு நல்ல தீனி போட்டுக் கொழுக்க வைப்பதுபோல, இளம்பெண்களை அறைக்குள் வைத்து, பெருந்தீனி கொடுத்துக் குண்டாக்கி அழகு பார்க்கிறார்களாம். வேடிக்கைதான்! இங்குள்ளவர்களில் 95 விழுக்காட்டினர் கொழுத்தவர்களாம்!!!!!! இவர்களைப் போல சமோவா (Samoa), குக் தீவுகள், ரொன்கா (Tonga), இடொமினிக்கா குடியரசு, அமெரிக்கா, கிரிபாட்டி (Kiribati), நியூயே (Niue), பலாவு (Palau), மைக்ரோனேசியா (Micronesia) ஆகிய நாடுகளிலும் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் கொழுத்தவர்கள்தான்!

இன்று கொழுத்த பணக்கார நாடாகி இருக்கும் வளைகுடா நாடாகிய குவெத்தில் 75 விழுக்காட்டினர் சராசரி எடையைத் தாண்டியவர்கள் என்று சொல்லப்படுகின்றது. பூமிக்கு அடியில் எண்ணெய் அகழ ஆரம்பித்து 20 வருடங்களில் இவர்கள் வாழ்க்கை முறை நன்றாகவே மாறிவிட்டது. இவர்களிடையே புரளும் பணம் வசதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க, எந்தச் சிறிய வேலையையும் எடுபிடியைக் கொண்டே செய்யும் பழக்கம் இவர்களிடையே தொற்றிவிட்டது. இதன் சம்பாத்தியந்தான் இந்த உடல் பருமன்.

இதே போல் 75 விழுக்காடு உடல் பருத்தவர்களைக் கொண்ட இன்னொரு நாடு அர்ச்சென்டினா. இங்குள்ள குழந்தைகளில் 16 விழுக்காட்டினர் எடை அதிகரித்தவர்களாக இருக்கிறார்களாம். மேலும், 40 விழுக்காட்டுக் குழந்தைகள் குறைந்தபட்சம் 4 மணி நேரத்தைத் தொலைக்காட்சிக்கு முன்பாகவோ அல்லது கணினிக்கு முன்பாகவோ செலவிட்டு வருகின்றார்களாம்!

மத்திய அமெரிக்க நாடான மெக்சிக்கோவில் 73 விழுக்காட்டினர் உடல் பருமன் கொண்டவர்களாம். 2010இன் ஆரம்பத்தில் இனிப்பான பழச்சாறு, தேவையற்ற துரித உணவு வகையறாக்கள், சோடா போன்றவற்றைப் பள்ளிகளில் தடைசெய்யும் உத்தரவை இந்த அரசு வெளியிட்டது. இக்காலக்கட்டத்தில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துத் தன் மண்ணில் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

அடுத்தது அவுஸ்திரேலியா. இங்கு 71 விழுக்காட்டினர் உடல் பருத்தவர்களாம்!! குறிப்பாக மேற்கு அவுஸ்திரேலியாவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தொகையை விட, உடல் பருமனுள்ளவாகள் தொகை அதிகமாம். அரசு இந்த விடயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வரப் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு!

70 விழுக்காடு உடல் பருத்தவர்களோடு திண்டாடும் இன்னொரு நாடு எகிப்து! குறிப்பாக, பெண்களில் 76 விழுக்காட்டினர் குண்டர்கள் என்கிறது இந்த ஆய்வு. ஆண்களின் விழுக்காடு 65. விளையாட்டுத்துறையில் பெண்கள் பங்குபற்றப் போதிய ஊக்குவிப்பு இல்லை என்பது இங்கு பெரிய குற்றச்சாட்டு!

நான் உனக்குச் சளைத்தவனல்ல என்று உடல் பருமனில் அதே 70% கொண்டிருப்பது கிரேக்க நாடு. இவர்கள் அதிகமாக உண்ணும் ஒலிவ் பழங்களில் உள்ள எண்ணெயின் கைங்கரியம் இது என்கிறார்கள். இங்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் தொகையும் அதிகரித்து வருகின்றது என்பது இதற்கான இன்னொரு காரணமாகச் சொல்லப்படுகிறது!

அடுத்ததாக, பெலாரஸ் (Belarus) நாட்டில் உடல் பருத்தவர்கள் விழுக்காடு 67.

1980-இலிருந்து இரண்டு மடங்காக அதிகரித்து வரும் உடல் பருத்தவர்கள் தொகை பிரித்தானியாவில் 66 விழுக்காட்டைத் தொட்டிருக்கின்றது. 2004இல் இங்கு பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அறிவார்ந்த உணவுமுறை’ (Smart Eating) என்ற திட்டம் உடல் பருத்தவர்கள் தொகையைக் குறைக்க வழி செய்திருக்கின்றது. 2008இல் எடுத்த ஒரு கணிப்பீட்டில் இளைஞர்கள் அதிகமான மரக்கறி வகைகளையும், பழங்களையும் உண்ணத் தொடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, குழந்தைகள் தேவைக்கதிகமான எடையோடு வளர்வது பிரிட்டனில் மாத்திரமல்ல, 21ம் நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய பிரச்சினையாகத் தலைதூக்கியிருக்கின்றது! 2010ஆம் ஆண்டின் கணிப்பின்படி, உலக நாடுகளெங்கும் 5 வயதுக்கு உட்பட்ட 42 மில்லியனுக்கு மேற்பட்ட குழந்தைகள், தேவைக்கு அதிகமான எடையோடு காணப்படுகின்றன என்று சொல்லப்பட்டது. இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் -அதாவது 35 மில்லியன் குழந்தைகள்- வளரும் நாடுகளில்தான் காணப்படுகின்றார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

தேவைக்கு அதிகமான எடை கொண்ட குழந்தைகளும், குண்டாகி விட்ட குழந்தைகளும் வளர வளர அனேகமாக இதே தோற்றத்தில்தான் காணப்படுவார்கள். அப்படியான பருத்த உடல் நீரிழிவுக்கும், இதயம் சம்பந்தமான வியாதிகளுக்கும் வழி வகுக்கும்!

எடை அதிகரிப்பு நலமான வாழ்விற்குத் தடையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நாளைய சமுதாயத் தூண்களாகிய நம் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருத்தவர்களாகக் காணப்படுவது ஆரோக்கியமானதல்ல! இந்த விடயத்தில் பெற்றோர்களுக்கு அதிகம் விழிப்புணர்வு தேவை! தங்கள் பிள்ளைகள் எதைச் சாப்பிடுகின்றார்கள், எந்த அளவு சாப்பிடுகின்றார்கள், எந்த நேரத்தில் சாப்பிடுகின்றார்கள் போன்ற விடயங்களில் விழிப்பாக இருந்தால் நிச்சயம் தமது பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! எனவே இன்றே தொடங்குவோம். நன்றே தொடங்குவோம்.

About The Author