குற்ற உணர்ச்சியினால் குமையலாமா?

இருவரின் பழைய அனுபவங்கள் இவை.

ஒருவர், ஒருநாள் அவசரமாக ஒரு வேலையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குட்டி நாய் வேகமாக ஓடி வந்து அவரது குதிகாலைக் கௌவியது. கோபமடைந்த அவர் அதைத் தூக்கி எறியவே, அருகிலிருந்த பெரிய கல்லின் மீது அதன் தலை இடித்து இரத்தம் ஒழுக உடனே அது இறந்துவிட்டது.

இன்னொருவர், தன்னுடன் விடுதியில் தங்கியிருந்த நண்பனுக்குத் தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் பணத்தைத் திருடி விட்டார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன்னே அவர்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தாலும் இன்றும் அவர்களை அந்தக் குற்ற உணர்ச்சிகள் துரத்துகின்றன. எவ்வளவோ ஆண்டுகள் ஆகியும் இந்தக் குற்ற உணர்வு அவர்களை விட்டு நீங்க மறுக்கிறது. இந்த மாதிரி நிலைகளை எப்படிச் சமாளிப்பது?

குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது!

அது, தான் செய்தது குற்றம் என்னும் நிலைமையிலிருந்து மாற்றி "நான் நல்லவனே இல்லை" எனத் தன்னைத்தானே நினைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு தன்னிலைப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இதனால்-

•தன் மீதே வெறுப்பு.
•தன்னம்பிக்கை இன்மை.
•தான் எதற்குமே உதவாதவன் என்கிற தாழ்வு மனப்பான்மை.
•ஒரு வகை வெட்க உணர்ச்சி – ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இத்தகைய மனிதர்கள் சிலர் இதைச் சுய பச்சாதாபத்திற்கும் சுயநலத்திற்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறுகிறார்கள் உளவியல் மருத்துவர்கள் சிலர். இத்தகைய குற்ற உணர்ச்சி நீடித்தால் அது மன உளைச்சலை ஏற்படுத்தி, வாழ்வின் முன்னேற்றத்தை வெகுவாகப் பாதிக்கும்.

இந்தக் குற்ற உணர்ச்சியை எப்படி மாற்றுவது?

இதோ சில வழிகள்!

•தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வது.

•நாம் எப்படி அந்தத் தவறு செய்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அது போன்ற குற்றங்களை இனிச் செய்யாமல் இருக்கத் தீர்மானிப்பது.

•நாம் அந்த நாளில் புரிந்தோ, புரியாமலோ ஒரு தவறான காரியத்தைச் செய்துவிட்டோம் என மனதார உணர்ந்து கொள்வது.

•இரக்கமோ, யோசனையோ, சுயக் கட்டுப்பாடோ இல்லாததால் செய்த தவறு அது என்பதைப் புரிந்து கொள்வது.

இப்படியெல்லாம் செய்வதால் நம்மை நாமே மன்னித்துக் கொள்கிறோம். இதனால் தேவையில்லாமல் குற்ற உணர்வைச் சுமந்துகொண்டு அலைய வேண்டியதில்லை.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய இரண்டு நண்பர்களும் இப்படிச் செய்தார்கள்…

நாய்க் குட்டியைத் தூக்கி அடித்தவர், இப்போது தானே ஒரு நாயை அன்புடன் வளர்த்து அதற்கு ஜோசஃபின் என அழகான பெயரிட்டு வளர்க்கிறார். அந்த நாய்க்குட்டியை நாய் என மற்றவர்கள் சொன்னால் கூட அவருக்கு இப்போது கோபம் வருகிறது. அதன் செல்லப் பெயரான ஜோசஃபின் என்றுதான் அழைக்க வேண்டுமாம்.

நண்பனின் பணத்தைத் திருடிய நண்பர், நண்பனை இப்போது தொடர்பு கொள்ள முடியாததால் இப்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த உணவை 2000 ரூபாய் அளவிற்கு அளித்து வருகிறார். இப்போது அவர் மனம் அமைதியாகி விட்டது.

குற்ற உணர்ச்சிகளால் குமைந்து போகாமல் அவற்றை இப்படி நேர்மறையான உணர்ச்சிகளாக மாற்றிக் கொள்ளலாமே!

–திரு.கே.ஆர்.ரவி எம்.பி.ஏ அவர்களின் Thinking between the lines எனும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நன்றியுடன்.

About The Author

1 Comment

  1. raama baskaran

    குற்ற உணர்ச்சிகளால் குமைந்து போகாமல் அவற்றை நேர்மறையான உணர்ச்சிகளாக மாற்றிக் கொள்ளலாம

Comments are closed.