குழந்தைகள் பாதுகாப்பு (1)

குறைந்தபட்சம் பன்னிரெண்டு வயது அடையும் வரை குழந்தைகளை எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், பாதுகாப்பது நம்முடைய தலையாய கடமையாகும். வீட்டிற்குள் மட்டுமல்ல, வீட்டிற்கு வெளியிலும் பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. குழந்தைகள் படிப்படியாக வளருகின்றனர். அப்படி வளரும் ஒவ்வொரு படியிலும் பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியம்.

வீட்டிற்கு வெளியே

குழந்தைகள் நன்கு நடக்க ஆரம்பித்தவுடன் வெளியே செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். முன்னரே சொன்னது போல புது உலகைக் கண்டுபிடிக்கும் ஆவலில் இருப்பார்கள். நமக்கு வேலை இருக்கிறது என்பதற்காக குழந்தைகளை வீட்டினுள் அடைத்து வைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு வெளியுலகைப் பழக்க வேண்டும், மிகக் கவனமாக!

பெரும்பாலான குழந்தைகளின் விருப்பம் பார்க் அல்லது கடையாக இருக்கும். பார்க் என்றால் குழந்தைகள் விளையாடும் போது உடன் இருங்கள். என்ன தேவையாக இருந்தாலும், தெரியாதவர்களிடம் குழந்தையைத் தராதீர்கள். ஒருவேளை அவர்கள் நல்லவர்களாகவே இருக்கலாம்; ஆனால் எதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்? அதே போல் பார்க்கிலிருந்து வரும் வழியில் குழந்தையைப் ‘ப்ராம்’ வண்டியில் உட்கார வைத்து விட்டு பிஸ்கட் வாங்கி வரலாம், ஒரு நிமிடம் தானே என்று நினைக்காதீர்கள்! குழந்தையைக் கடத்த அந்த ஒரு நிமிடம் போதுமானது! அதேபோல, குழந்தைகளைக் காரில் தனியாக விட்டு விட்டு கடைக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

Child careமக்கள் அதிகமாகக் கூடுகின்ற இடங்களுக்குச் செல்லும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளைப் ‘ப்ராம்’ வண்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அது கைவசம் இல்லையென்றால் குழந்தைகளின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்றை மறக்காதீர்கள்! குழந்தைகளால் வேகமாக நடக்க முடியாது. எனவே, குழந்தையின் வேகத்தை அனுசரித்து நீங்கள் நடந்து செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்குக் கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன தெரியுமா? குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுதான்! அதோடு, தினம் தினம் குழந்தைகளைக் கூற வைத்து மறந்து விடாமல் இருக்கச் செய்யுங்கள்.

குழந்தைகள் முதன்முதலாக பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும் போது, அவசியமான சில கட்டளைகளைப் பிறப்பியுங்கள். குழந்தைகள் ஒருபோதும் ‘பெற்றோர்’ அல்லது ‘பாதுகாப்பாளர்’ அனுமதியின்றி தெரியாதவர்களுடன் பேசவோ, அவர்கள் தரும் பொருளை வாங்கவோ கூடாது என்பதை அழுத்தமாகச் சுட்டுங்கள்!

குழந்தைகளுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது ஆகின்றது என்றால், அவர்களுக்கு சாலை விதிகளைக் கற்றுக் கொடுங்கள். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் செல்வது, நண்பர்கள் வீட்டிற்குச் செல்வது, பள்ளிக்கூடம் அருகில் இருந்தால் செல்வது போன்றவற்றை உங்கள் மேற்பார்வையில் செய்ய விடுங்கள். குழந்தைகளுக்குச் சாலைவிதிகள் நன்கு பரிச்சயம் ஆகி விட்டதாக நீங்கள் உணர்ந்தால், தனியே செல்ல அனுமதியுங்கள். அவ்வாறு தனியாகச் செல்லும் போதும், ‘எங்கே போகிறார்கள்?’, ‘யாருடன் போகிறார்கள்?’, ‘எப்போது வருவார்கள்?’ போன்ற விவரங்களைத் தெளிவாக உங்களிடம் தெரிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

Child careபொருட்காட்சி அல்லது ‘பீச்’ போன்ற மக்கள் கூடுகின்ற இடங்களுக்குக் குழந்தைகளைக் கூட்டிச் செல்கிறீர்களா? அவை போன்ற இடங்களில் குழந்தைகள் தொலைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தைகள் சிலவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று பின்தங்கி விடலாம்; அல்லது விளையாடும் போது தங்கள் இடத்தைத் தவற விடலாம். டென்ஷனைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சிலவற்றை முன்கூட்டியே அறிவுறுத்துங்கள். குழந்தைகள் ஒரு வேளை வழி தவறி விட்டால், அவர்கள் எங்கே வர வேண்டும் என்று அடையாளம் காட்டுங்கள். அது விசாரணை ‘கவுண்டரா’க இருக்கலாம் அல்லது ‘ஏ.டி.எம் கவுண்டரா’க இருக்கலாம். மேலும், வழி தவறிய குழந்தைகள் அழுவதை விட்டு விட்டு அங்கு காணப்படும் காவல்துறை அன்பர்களிடம் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினர் பற்றியும் சரியான தகவல்கள் தெரிவிப்பதற்கு முறையான பயிற்சி அளியுங்கள்.

குழந்தைகளுக்குப் பிடிக்காத சில பழக்கங்களை அவர்கள் எப்போதும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்துங்கள். உதாரணமாக, குழந்தைகளுக்குக் கட்டியணைத்து முத்தமிடுதல் பிடிக்கவில்லையென்றால் அதை ஒருபோதும் செய்யாதீர்கள்; மற்றவர்கள் செய்வதற்கும் அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகளுக்கு மனக்கவலை அளிக்கும் விஷயத்தை குழந்தைகள் கூறும் போது காது கொடுத்துக் கேளுங்கள். பள்ளிக்கூடத்திலோ, குழந்தைகள் காப்பகத்திலோ, வயதிலும், வலிமையிலும் பெரிய குழந்தைகளால் ஏதேனும் தீங்கு நிகழ்ந்திருக்கலாம். அதை உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் உங்களிடம் கூறும் போது, அந்த நம்பிக்கைக்கு உத்தரவாதமாக இருங்கள்.

‘ஓடி விளையாடு பாப்பா’, என்று கூறி இருப்பது சரிதான். ஆனால், சாலைகளில் நாளுக்கு நாள் வாகனங்களும் அவற்றின் வேகமும் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் குழந்தைகளை சாலைகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது. சிறிய சாலையாக இருந்தாலும் தவறுதான். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று விளையாட விடுங்கள். உங்களால் முடியவில்லையென்றால், குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்ளக்கூடிய உங்கள் நண்பர்களுடன் அனுப்புங்கள்.

சரி வீட்டிற்கு வெளியேதானே இவ்வளவு சிக்கல், வீட்டிற்குள் குழந்தைகளைத் தனியாக இருக்கச் செய்தால்…அதில் வேறு சிக்கல்கள்!

(மீதி அடுத்த இதழில்)

Disclaimer : The images in this article are collected from various resource on the web. If there is any copyright violation, please inform the administration. Corrective actions will be taken.

About The Author

3 Comments

  1. C.PREMALATHA

    அருமை. நிறைய பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள். குழந்தைகளை பராமரிப்பதில் நிறைய பெற்றோர் நிறைய விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

  2. Jeevanandam

    மிகவும் நன்மை தரும் செய்தி. வாழ்த்துக்கள் ஜீவானந்தம்,

  3. ANTONYRAJ

    அன்புள்ள சித்த்ராபாலுஅவர்களுக்குநன்றி.மிகசரியான வழிமுறைகளைச்சொன்னிர்கள்.

Comments are closed.