கொக்கிகள்

விடுகதை ஒன்றைச் சொல்லிவிட்டு
விடைதரு முன்னே மாண்டுவிட்டாய்.
வீடுவாசல் துறந்து வீதி காடுகளில்
விடை தேடிப் பயணித்தேன்.

கானல் நீர் போல் தோன்றும் விடைகள்
நெருங்கிச் சென்றால் கரைந்து போகும்.
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான்
கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!

கேள்விக் கணைகள் கொக்கிகளாய் உடம்பைத் துளைக்க
சுமைதாங்கிக் கல்லில் என் பாரம் இறக்கினேன் ஓய்வுக்காக.
இதுவரை வந்தவர் யாவரும் கேள்விக் கொக்கிகளின்
இரணத்தால் இதோடு திரும்பியிருந்தனர்.

விடை தேடும் வேலையை மூட்டை கட்டலாமென்று
வந்த பாதை பார்த்தேன், ஆயிரம் காலடித்தடங்கள்.
எதிர்த்திசை நோக்கினேன், சுவடுகளில்லாமல் நீண்டிருந்தன.

விடுகதையின் விடை எங்கிருந்தோ எனை அழைக்க
பயணித்தேன் என் சுவடுகள் பதித்து.
கொக்கிகள் இப்பொழுது சுகமாய் இருந்தன!

About The Author