கோச்சடை முத்தைய்யா சுவாமி திருக்கோயில்!

முத்தய்யா சுவாமியின் திருவருளைப் பெற நாம் முதலில் மதுரை மாநகருக்குச் செல்ல வேண்டும். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நாலு கி.மீ தொலையில் உள்ளது இந்தக் கோயில். இதில் விசேஷம் என்னவென்றால், கோயிலினுள் அமர்ந்து அருள் புரிபவர் என்னவோ அய்யனார்தான்! அய்யனார் தன் இரு மனைவியரான பூரணை, புஷ்கலை சமேதராகக் காட்சி அளிக்க, அருகில் வில்லேந்தியபடி கிழக்கு முகமாக அமர்ந்திருக்கிறார் முத்தையா சுவாமி!
மதுரையின் எல்லைப் பகுதியான இங்கே அமர்ந்து ஊரையே காபந்து செய்து வருகிறார்.

கோயிலின் ஸ்தல விருட்சம் புளிய மரம். மரத்தினடியில் ஒரு புற்று உள்ளது. அதில் நாகாத்தம்மன் குடியிருக்கிறாள். இங்கு பாலூற்றிப் பூஜை செய்தால் நாக தோஷம் போய் விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் ராகு காலத்தில் நன்கு கூட்டம் வருகிறது. தவிர, கார்த்திகை மாதம் ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டுக்கொண்டு மலைக்குச் செல்பவர்களும் இங்கு வந்து விரதத்தை ஆரம்பிக்கின்றனர்.

பதஞ்சலி முனிவரும் இந்தப் புளிய மரத்தின் கீழ் அமர்ந்து தவம் இருந்தாராம். பாண்டிய மன்னரும் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறாராம். இவற்றையெல்லாம் அறிந்ததும் இது எத்தனை பழமை வாய்ந்த கோயில் என்பது தெரிய வருகிறது.

கோயில் கொண்டிருப்பது ஐயனார் என்றாலும் இங்கு வந்து, "ஐயனார் கோயில் எங்கே" என்று கேட்டால் பலருக்கும் புரிவதில்லை. ஆனால், முத்தய்யா சுவாமி கோயில் என்றால் மதுரைவாசிகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது!

கோயிலுக்கு முன்னே ஐயனார் வில்லேந்தி குதிரையில் அமர்ந்திருக்க, அருகில் முத்தையா சுவாமியும் குதிரையில் வீற்றிருக்கிறார். இருவரைச் சுற்றியும் பூத கணங்கள் சூழ்ந்திருக்க, இவர்கள் முகத்தின் கம்பீரத்தையும் அழகையும் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. முத்தையா சுவாமிதான் இங்கு இருக்கும் கிராம மக்களுக்குக் குலதெய்வமாகவும், கண்கண்ட கடவுளாகவும் விளங்குகிறார். மக்கள் தங்கள் வீட்டு எல்லா விசேஷங்களையும் முறையாக இங்கு வந்து நடத்துகின்றனர். தவிர, தங்கள் வீட்டுப் பிரச்சினைகளையும் இவர் முன் வந்து முறையிட்டுச் சென்றால் தங்களுக்குள் ஓர் அமைதி பிறப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

கோயிலில் கருப்பசுவாமி, வீரபத்திரர், சங்கிலிக் கருப்பர், நாகப்ப சுவாமி, இருளப்ப சுவாமி, முத்துக் கருப்பு சுவாமி, முனியாண்டி, பத்ரகாளி அம்மன், பேச்சியம்மன், மூக்காயி, இருளாயி அம்மன், மெய்யாண்டி அம்மன், சப்பாணி, சன்னாசி போன்ற பல பரிவார தெய்வங்களும் அமர்ந்து அருள்புரிகிறார்கள். தவிர, குதிரை, ரிஷபம், இந்திரன் ஐயனாருக்கு வழங்கிய வெள்ளை யானை முதலிய வாகனங்களும் சிலையாகக் காட்சி அளிக்கின்றன.

இங்கு கார்த்திகை மாதத்திலிருந்து இருமுடி கட்டும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்குமாம். தவிர, முத்தய்யா சுவாமிக்குப் பாவாடை சார்த்துவதும் மிகவும் முக்கியமான ஒரு வைபவமாகத் திகழ்கிறது. சிவராத்திரி விழாவும் மிகச் சிறப்பாக நடக்குமாம். புரட்டாசி மாதச் செவ்வாயன்று படையல் போடும் வைபவமும் நடக்கும். அத்துடன் நேர்த்திக்கடன், திருவீதியுலா ஆகியவையும் நடைபெறுகின்றன. ஆனால், இது நடக்க ஒரு விதி இருக்கிறது. இங்கு முன்னதாக உள்ள கோச்சடையில் இருக்கும் பனைமரத்திலிருந்து எப்போது ஒரு பல்லி சத்தமிடுமோ அப்போதுதான் விழா நடைபெறுமாம். அப்படி பல்லியின் சத்தம் கேட்கவில்லை என்றால் முத்தய்யா சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை என்று விழாவை ஒத்தி வைத்து விடுவார்களாம்.

இங்கு ஓடும் பல வாகனங்களில் "அருள்மிகு கோச்சடை முத்தையா சுவாமியின் அருள்" என்ற வாசகம் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம்! மதுரை போனால் இந்தக் கோயிலுக்கும் சென்று அய்யனாரையும், முத்தைய்யா சுவாமியையும் வணங்கி அருள் பெற்று வரலாமே!

About The Author