சங்கம் காண்போம்- 26

தலைவன் பொறுமையில்லாமல் இங்கு அங்கும் நடந்து கொண்டிருந்தான், கண்கள் அலை பாய கை நகங்களைக் கடித்தவாறு இருந்தான். "தலைவனே! அமைதியாக இங்கு வந்து உட்கார்" என்று அவனுடைய நண்பர்கள் அழைத்ததை லட்சியம் செய்யவில்லை. சட்டென்று அவன் கண்களில் மகிழ்ச்சி. "அதோ! தோழன் வந்து விட்டான்" என்று அமர்ந்திருந்த தோழர்களிடம் கூறி விட்டு அந்தத் தோழனை நோக்கி ஓடினான். "என்ன ஆயிற்று நண்பனே..! தோழியைப் பார்த்தாயா?" என்று ஆவலோடு முடிக்கும் முன்னாலேயே அந்தத் தோழன் தலைவிக்குத் தந்தனுப்பிய மடலை தலைவன் கையில் கொடுத்தான்.

"என்ன தோழனே!..மடல்.. தோழி வரவில்லையா? நீ பார்க்க முடியவில்லையா.. என்ன ஆயிற்று?" என்று தவித்தவாறு கேட்டான். "தலைவனே! தோழியைத் தனிமையில் சந்திக்க முடியவில்லை. அவள் உறவினர்களுடன் இருந்தாள். சந்தர்ப்பம் கிடைத்த போது இரு நாட்கள் கழித்து பார்க்கலாம் என்றாள். வந்து விட்டேன். ஆனால் தலைவனே சென்ற முறை போல கோபிக்கவில்லை. மடலை ஏற்றுக்கொள்வாள் போல் தோன்றுகிறது. இரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் முயற்சிக்கிறேன்" என்று தலைவனைச் சமாதானப்படுத்தினான்.

உள்ளத்தின் ஆர்வமும், ஊக்கமும், உற்சாகமும் தளர்ந்த நிலையில் மௌனமாக அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு வருடங்களாக தலைவியைத் தன் மனதில் இருத்தி அவள் அழகை ரசித்து, அவள் அமைதியை ஆராதித்து அவள் அறிவில் பிரமித்து, தினம் தினம் பூஜை செய்த தலைவன், தன் உள்ளத்து வேட்கைகளையெல்லாம் கொட்டி மடலாக புனைந்து ஆறு மாதங்களுக்கு முன் தோழியிடம் கொடுத்தான். தோழி தலைவியிடம் கொடுக்காமல் தலைவன் முன்னிலையிலேயே அம்மடலைப் படித்து அதை அவனிடமே கொடுத்து விட்டாள். மேலும் இது போன்ற எண்ணத்தை மனதிலிருந்து அகற்றுமாறும் எச்சரித்தாள். தோழியின் செயல் தலைவனுக்கு ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

தலைவியைத் தனியாக அவனால் சந்திக்க முடியவில்லை.ஆனாலும் தினந்தோறும் அவள் வீட்டின் வழியே செல்லும் போது அவளைப் பார்ப்பான். அவளுடைய விழிகளும் அவன் வருகைக்காக காத்திருப்பதாகவே அவனுக்குப் பட்டது. தலைவி தன்னை விரும்புகிறாள் என்று உறுதியாக நம்பினான். தலைவியின் முகமும், அவள் கண்களின் எதிர்பார்ப்பும் அவனை உந்த.. மறுபடியும் மடல் எழுதி தோழனிடம் கொடுத்து அனுப்பினான்…ஆனால்.. இன்றும் மடலைக் கொடுக்க முடியவில்லை. ஆயினும் தோழன் கூறியது போல ‘இன்று சந்தர்ப்பம் சரியில்லை’ என்றுதானே கூறினாள். ‘வேண்டாம் என்று மறுக்கவில்லையே’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். இன்னும் இரண்டு நாட்களில் தானே நேரில் சென்று தோழியைக் காண முடிவு செய்தான்.

இரண்டு நாட்கள் கடத்துவது யுகங்களாக இருந்தது அவனுக்கு. மூன்றாவது நாள் காலையில் தோழியைக் காண ஆவலாகச் சென்றான். தோழி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அதுவே அவனுக்கு உற்சாகமாக இருந்தது. மடலைக் கொடுத்தான். அவள் வாங்கிக் கொள்ளாமல் பேசத் துவங்கினாள். "தலைவனே! நீயும், தலைவியும் முறை மாமன், முறைப்பெண்ணாக இருப்பினும், உங்களின் சென்ற தலைமுறையினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு குடும்பத்தினரும், இன்று வரை பகைவர்களாகவே இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் தலைவியை நீ எவ்வாறு மணப்பாய்? என் தலைவி தன் பெற்ரோர்களிடம் என்ன பேசுவாள்? எப்படி சமாளிப்பாள்? அதனால் தலைவனே! தலைவியை நிம்மதியாக இருக்க விடு" என்று வேண்டினாள். தலைவனுக்கு மனதிற்குள் ஒரே கொண்டாட்டம்! தலைவியும் தன்னை விரும்புகிறாள். ஆனால் குடும்பச் சூழலால் தயங்குகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவனாய், "தோழி! சென்ற தலைமுறையினரின் எத்தனையோ பழக்க வழக்கங்களை இன்று நாம் மாற்றி இருக்கின்றோமல்லவா… அது போல இந்தக் குடும்ப பிணக்குகளையும் மாற்றி விடலாம். தலைவிக்குத் தைரியம் கூறு. என் பெற்றோரிடம் நான் பேசுகிறேன். நீயும்.." என்று ஆர்வமாக பேசியவனை நிறுத்தினாள்

தோழி. "இரு இரு!.. என்ன? ஏதோ சம்மதம் கூறியது போல பேசிக்கொண்டே போகிறாய்? இதெல்லாம் முடியாது. சென்று விடு" என்று தலைவனை ஆழம் காணும் நோக்கத்தில் அவனை மறுபடி திருப்பி அனுப்பினாள்.

வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் உற்சாகமாக இருந்தது தலைவனுக்கு. தரையைக் காலால் எட்டி உதைத்தான். செயலற்ற தன் நிலைக்கு வருந்தினான். என்ன செய்வது என்று புரியாமல் பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான். யாரையும் பார்க்கப்பிடிக்காமல். யாருடனும் பேசப் பிடிக்காமல் எதையோ வெறித்து பார்த்த படியே இருந்தான். அவன் பெற்றோர்கள் அவனை விசாரித்தனர். எதுவும் கூறாமல் மௌனமாயிருந்தான். உணவு உண்ணாமல் உறக்கம் இல்லாமல் உடலை வருத்திக் கொண்டான். தோழியையோ தலைவியையோ காணச் செல்லவில்லை. இவ்வாறாக ஒரு வாரம் கழிந்தது.
மனம் பொறுக்காத தலைவனுடைய நண்பர்கள், தலைவனை வற்புறுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். தலைவனுக்கு ஏதேதோ உபாயங்கள் கூறினர். மனம் சற்று தெளிந்தான் தலைவன். மறுநாள் காலையில் தோழியை ஒரு முடிவுடன் சந்தித்தான். தலைவனின் தோற்றத்தைக் கண்டு பரிதாபம் கொண்டாள் தோழி. தலைவன் தலைவியின் மீது கொண்டிருக்கும் காதல் உண்மைதான் என்பதை மனதார உணர்ந்தாள். தலைவன் பேசத் துவங்கினான்.

"தோழி! நீயோ தலைவியின் உள்ளத்தை என்னிடம் கூற மறுக்கிறாய்..என்னாலோ தலைவியை ஒரு கணம் கூட மறக்க முடியவில்லை…அதனால் நான் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்.." என்று வருத்தம் மேலிடக் கூறினான்.

"தலைவனே..என்ன..என்ன..முடிவு?" என்று தடுமாறியவாறு கேட்டாள்.

"தோழி! காம நோய் என் உறுப்புகளைத் தின்று விடும் போல் உள்ளது. அதனால் முட்கள் நிறைந்த பனைமடலால் செய்யப்பட்ட குதிரையின் மீது ஏறிக் கொண்டு, கைகளில் என் தலைவியின் உருவப்படத்தை ஏந்தி, ஊரார் எல்லாம் ‘இவளால் இவன் இவ்வாறு ஆனான்’ என்று பழித்துரைக்க மடல் ஏறி உயிரை விடத் துணிந்துள்ளேன்…வேறு வழி தெரியவில்லை" என்று கண்களில் நீர் வழிய கூறினான் தலைவன்.

பதறிய தோழி "வேண்டாம் தலைவனே..! வேண்டாம். உன் அன்பு உண்மையானது: உறுதியானது. நீ கூறியது போல உன் பெற்றோரைச் சமாதனப்படுத்தி தலைவியின் பெற்றோரைச் சந்திக்க வா. அதற்குள் நாங்களும் எங்கள் தாயிடம் கூறுகின்றோம். உன் அன்பின் ஆழத்தை அறியவே காலம் கடத்தினேன். மன்னித்து விடு தலைவனே" என்றாள்.
எதிர்பாராத மகிழ்ச்சியால் திக்கு முக்காடிப் போனான் தலைவன்.

இக்காட்சி குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

தலைவன் கூற்று

குறிஞ்சித்திணை

மாஎன மடலும் ஊர்ப:பூஎனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே
பேரெயின் முறுவலார்

பனைமடலால் செய்த
குதிரையில் மடல் ஏறுவர்
குவிந்த அரும்புகளையுடைய
எருக்கம் மாலையை அணிவர்
ஊராரால் தூற்றவும் படுவர்.
காதலுக்காய்
சாகவும் துணிவர்
தலைவியின் மீது கொண்ட
காதல் முற்றினால்!!

About The Author