சலனங்கள்

சலனங்கள்… சலனங்கள்
கிளையின் அசைவுகளா
இல்லை
வேரின் தடுமாற்றம்!
தண்ணீர்ப் பொம்மையின்
தாய்மை வேதனை
எலும்பிலாச் சதைகளின்
ஒட்டப் பந்தயம்
விழிநில அதிர்ச்சிகள்
யாழின் இராகவீதிகளில்
யானைகளின் மிதிப்புகள்
மலர்மஞ்சத்திலே
காற்றும் கனலும்
நடத்தும்
தேன் நிலாத் திருவிழா
நிழல்களை மென்று தின்னும்
ஒளியின் வாய்ப்
பல்ஆலைகளின் நெறுநெறுப்பு…

சலனங்கள்… சலனங்கள்
கரையும் கனவுகளை
எரிக்கும்
அமில வார்ப்புகள்…
தண்ணீரின் வேரிலே
தழல் வைப்புச் சதித் திட்டம்…

தவிப்புக் கூட்டுக்குள்
விடியல் குஞ்சுகளின்
தத்தளிப்புகள்…
சலனங்கள்… சலனங்கள்
இல்லை…
தவணை முறையில்
தழுவும் மரணம்.

About The Author