சிதறல்கள்

அவசரம் வேகம்
அவசரம் வேகம்
பேருந்து நடைபாதை
கடைகள் கல்லூரிகள்
கடற்கரை கட்டிடங்கள்
வருவோர் போவோர்
அங்கு அங்கு….

இறைந்து –
அங்கிங்கிறைந்து
திரும்பி இராவில்
சிதறிய தன்னைத்
திரட்டிச் சேர்க்க
அவசரம் வேகம்

தூக்க ஏணிப்
படியினில் கனவுகள்
விழிப்பு வழுக்கலில்
ஏறிய வேகத்தை
எதிர்த்து வீழக்

குறைப் பிரசவ
வைகறை வாசலில்
அவசர அவசரமாய்
அரை குறைச் சேர்க்கை
ஆயத்த மானது.
அடுத்த நாளுக்கு!

About The Author