சில்லி சிக்கன் கிரேவி

தேவைப்படும் பொருட்கள்:

கோழிக்கறி – ¾ கிலோ
முட்டை – 1
வெங்காயம் – 1 சிறியது
தக்காளி – 1
இஞ்சி – 1 சிறு துண்டு
பூண்டு – 10
சோளமாவு – 2 மேஜைக்கரண்டி
வினிகர் – ½ தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு, சமையல் எண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில், கோழிக் கறியை நன்றாகக் கழுவி, அதைச் சின்னச் சின்ன துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்
.
பிறகு வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிது வதக்கி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி, பூண்டையும் விழுதாக நன்கு அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் கறித் துண்டுகளைப் போட்டு, அதில் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து, தேவையான அளவு உப்பைப் போட்டு, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வேக வையுங்கள்.

முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதை நுரை பொங்க அடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, அதில் சோள மாவை போட்டுக் கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்க வேண்டும்.

பின்பு, வேக வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை அதில் போட்டு அப்படியே ஊற விடுங்கள்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் இரண்டு மேஜைக்கரண்டி சோளமாவைப் போட்டு, சில்லி சாஸ், சோயா சாஸ், வினிகர், வெங்காயம் – தக்காளி விழுது ஆகியவற்றைப் போட்டு, கோழி வேக வைத்த நீரை அதில் ஊற்றுங்கள். தேவைப்பட்டால், அத்துடன் சிறிதளவு தண்ணீர், உப்பு கலந்து கொள்ளலாம். பின், இந்தப் பாத்திரத்தை எடுத்து அடுப்பின் மேல் வைத்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

அதே சமயத்தில் மற்றோர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் கோழித் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

வறுத்த துண்டுகளை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாஸ் கிரேவியில் போடுங்கள்.
கிரேவியை நன்றாகக் கொதிக்க விடுங்கள். கொதித்தவுடன் எடுத்துச் சுடச் சுடப் பரிமாறலாம்!

சுவையான சில்லி சிக்கன் கிரேவி தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author